தொடர்கள்
ஆன்மீகம்
அய்யப்பனின் மூலமும் பலர் அறியாத வரலாறும் - கார்த்திகை மாதம் துவங்கி விட்டது. !!

20231016153318568.jpg

[பூர்ணா புஷ்கலா சமேத ஸ்ரீசாஸ்தா]

2023101615343945.jpg

[ஸ்ரீஅய்யப்பன். பூலோக அவதாரத்தில் நைஷ்டிக ப்ரம்மசாரி]

சபரிமலையில் இருக்கும் அய்யனின் விக்ரஹத்துடன் அதே போன்றே இன்னொரு அய்யனின் விக்ரஹம் புனைப்பட்டது. அந்த விக்ரஹம் குடி கொண்டிருப்பது நமது சென்னையின் பாரீஸ் கார்னரின் ஆர்மீனியன் தெருவில் அமைந்துள்ள திரு கச்சாலீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ளது. இவரும் சபரிமலையில் அமர்ந்துள்ளவரும் ஒரே அச்சில் உருவானவர்களாதலால் சென்னையில் தள்ளு முள்ளின்றி நேரக் கெடுவின்றி உள்ளம் குளிர கண்டு பிரம்மிக்கலாம்.

எனக்குள் நீண்ட நாளாய் ஐய்யப்பனின் வரலாற்றை அவரது மூலத்திலிருந்து அறியவேண்டும் அதை நம்மவர்களுக்கும் பகிரவேண்டும் என்பது ஆசை.

இந்த தலைப்பில் சபரிமலை யாத்திரைக்கான மண்டல மற்றும் மகர காலங்களில் அரவிந்த் சுப்ரமணியத்தின் உபன்யாசங்களிலும் அடைத் தொடர்ந்து வரும் சபரிமலை யாத்திரைகளில் பழமைக்காரர்களும் முதுமைக்காரர்களுமாகிய பழம் குருஸ்வாமிகளிடமிருந்தும் அங்கு சந்நிதிகளில் கிடைக்கப்பெறும் அரிய பல தகவல்கள் மெய் சிலிர்க்க வைக்கும்.

இது ஒரு புறமிருக்க ஐய்யப்பனின் தரிசனத்தைப் ப்ரத்யக்ஷமாய் பெற்ற திருநெல்வேலியிலுள்ள கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த கம்பங்குடி வம்சத்தினரின் இன்றும் வாழ்ந்து வரும் அவர்களில் இந்த அய்யப்பனின் வரலாறுகள் குறித்து பத்துக்கும் மேற்பட்ட தகவல் பெட்டக புத்தகங்களை எழுதியுள்ள ராதாகிருஷ்ணன் அவர்களை சமீபத்தில் தொடர்பு கொள்ள, அவரிடமே இந்த என் விருப்பத்தை வெளிப்படுத்த அவரும் ஒப்புக்கொண்டார். இது அய்யப்ப பக்தர்களுக்கு ஒரு பெரும் பாக்கியம்.

இனி அவரது உரை.

ஆதி தெய்வம் – ஸ்ரீசாஸ்தா

ஸ்ரீசாஸ்தா தான் அய்யப்பனின் மூல அவதாரம். இவரது அவதாரம் ஏற்பட்டது சத்ய லோகத்தில். பூலோகத்தில் அவரது அவதாரமே நமக்கெல்லாம் பரிச்சயமான அய்யப்பன் அவதாரம்.

ஸ்ரீ மஹாவிஷ்ணு மோஹினி அவதாரம் எடுத்த பொழுது அந்த அழகில் மயங்கிய மஹேஸ்வரனின் சக்தியின் இணப்பில் பிறந்தவர் ஹரிஹர புத்திரர் என்பதை எல்லோரும் அறிவார்கள். இப்படிப்பட்ட அவதாரம் எடுப்பதற்கு முன்பேயே ஸ்ரீ சாஸ்தா வேறு பல அவதாரங்கள் எடுத்துள்ளார் என்பதையும் நமது பரதக் கண்டம் மட்டுமின்றி உஅகில் பல இடங்களில் ஸ்ரீசாஸ்தா வழிபாடு இருந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஸ்ரீமஹாவிஷ்ணு எத்தனையோ அவதாரங்கள் எடுத்துள்ளபோதிலும் அவரது அவதாரங்களான மச்சாவதாரம், கூர்மாவதாரம், வராஹ அவதாரம், நரசிம்ம அவதாரம், பரசுராமர், ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ண முதலிய அவதாரங்களும், இனி எடுக்கப்போகும் அவதாரமான கல்கி அவதாரம் பற்றியும் சிறப்பாக குறிப்பிட்டு பேசப்பட்டு வருகிறது.

கடவுளின் அவதாரங்கள் ஆவேச அவதாரம் என்றும், அம்சா அவதாரம் என்றும், பூர்ணாவதாரம் என்றும் மூன்று வகைப்படும்.

பரசுராம அவதாரம் ஒரு ஆவேச அவதாரம். இன்றும் இவர் சிரஞ்சீவியாக இருக்கிறார். இவரையும் சேர்த்து ஏழு பேர்கள் க்ருத, த்ரேதா, த்வாபர யுகங்களில் உதித்து இன்றும் இந்த கலியுகத்திலும் வாழ்ந்து வருகின்றனர். க்ருத யுகத்தில் - பலி சக்ரவர்த்தி (அரக்கர் குலம்), பரசுராம அவதாரம்,

த்ரேதா யுகத்தில் – ஹனுமான், விபீஷனன்(அரக்கர் குலம்)

த்வாபர யுகத்தில் – வ்யாசர், கிருபர், அஸ்வத்தாமன்,

தற்போது நடந்து வரும் யுகம் – கலியுகம். இது 4,32,000 வருடங்கள் கொண்டது.

இதற்கு முந்தைய த்வாபர யுகம் 8,64,000 வருடங்களைக் கடத்தியது.

த்ரேதா யுகம் 12,96,000 வருடங்களும், க்ருத யுகம் 17,28,000 வருடங்களைக் கடத்தின.

இந்த நான்கு யுகங்களும் சேர்ந்தது ஒரு சதுர் யுகம் அதாவது 43,20,000 வருடங்கள் கொண்ட காலமாகும்.

கிருஷ்ணாவதார காலத்தில் சாஸ்தா

ஸ்ரீகிருஷ்ணவதார காலத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா ஸ்ரீகிருஷ்ணனின் இளைய சகோதரராக – சாத்யகி எனத் திருநாமம் கொண்டு அவதாரம் செய்தார் என்று சொல்லப்படுகிறது.

ஸ்ரீஹரிஹரபுத்திர சஹஸ்ரநாமத்திலுள்ள 803-வது நாமா தர்மசாஸ்தாவை நரவீர சுஹ்ரூத் ப்ராதா: என்று போற்றுகிறது. இதே சஹஸ்ரநாமத்தின் 54-வது நாமா கோபாலேனாபி பூஜித: என்றும் போற்றுகிறது. அதானது ஸ்ரீகிருஷ்ணனால் போற்றப்படுபவர் என்று பொருளாகிறது. நாமா 679-ல் ஹலபாணி பூஜித: என்று புகழ்கிறது. கலப்பையை ஆயுதாமாக உடைய பலராமராக புகழப்படுபவர் என்று பொருள். எனவே பலராமரும் ஸ்ரீகிருஷ்ணரும் போற்றும் வகையில் சாத்யகியாக ஸ்ரீசாஸ்தா அவதாரம் செய்தவர் என்று பொருளாகிறது.

ஸ்ரீகிருஷ்ணரின் அவதார காலம் தெரிந்தால் சாத்யகியாகிய சாஸ்தாவின் அவதார காலம் தெளிவாகும்.

ஸ்ரீகிருஷ்ணரின் அவதார காலம் பற்றி சிலர் ஆராய்ச்சி செய்து நூல்களை வெளியிட்டுள்ளனர். அதன்படி, ஏசு பிறப்பதற்கு 3112 வருடங்களுக்கு முன்பு சாத்யகியாக அவதாரம் செய்தார் என்று தெளிவாகிறது.

மேலும் பீஷ்மர், அர்ச்சுனனுக்கு இறைவனுடைய அவதாரங்கள் பற்றி விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் கூறும் பொழுது அஜோ துர்மர்ஷண சாஸ்தா என்று சாஸ்தா நாமம் பற்றி கூறுகிறார்.

சாஸ்தா என்றால் ஸ்ருதி, ஸ்ம்ரிதி முதலியவற்றால் எல்லோருக்கும் புத்திமதி கூறி உத்திரவு இடுபவர் என்று பொருள். தர்மத்தை நிலை நாட்டுபவராக இருப்பதால் ஸ்ரீதர்மசாஸ்தா என அழைக்கப்படுகிறார்.

விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யத்தில் ஓம் சாஸ்த்ரே நம: என்ற நாமாவிற்கு வேதம், ஸ்ம்ரிதி ஸ்ருதி மந்திரங்களை உண்டு பண்ணியது சாஸ்தா என்று ஆதி சங்கரர் விளக்கம் கொடுத்துள்ளார்.

ஸ்ரீகிருஷ்ணருக்கு சம காலத்தில் வாழ்ந்தவரான பீஷ்மர் மேலே கூறியுள்ளபடி சாஸ்தாவை இறைவன் என்று சுட்டி காட்டுகிறார். எனவே ஸ்ரீகிருஷ்ணர் காலத்திலும் சாஸ்தா வழிபாடு இருந்துள்ளது என்பதை அறியலாம்.

தொடரும்.....