தொடர்கள்
கதை
யட்சன்   - கி. ரமணி

20231018064745749.jpg
அறிவு மணிக்கு தாகம் தாங்கல.
மணி இரவு பதினொன்று ஆகி விட்டது. திருவண்ணாமலை பக்கத்து ஊர்ல இன்னிக்கு மீட்டிங்.வர்ற மார்ச்ல இடைத் தேர்தல். எம் எல் ஏ எலெக்ஷன்.

மீட்டிங் ஒன்பதரைக்கு முடிஞ்சு பத்தரைக்கு இன்னோவாவில் குரு, சித்தனுடன் கிளம்பி சென்னை வரும் போது, ஒரு டயரில் காத்து இல்லை என்று தெரிய வர , கூடவே ஸ்டெப்னியும் சரியில்லாமல் போக,அறிவுமணி ட்ரைவரைக் காச்சு காச்சிய பின், டிரைவர் சொன்னான்.
"சார் இங்கேந்து அரை கிலோ
மீட்டர்ல சுகிர்தா லாட்ஜ்ன்னு இருக்கு சார். நல்ல எ சி ரூம் சார். நைட் நீங்க தங்கிக்கிடலாம் சார். பக்கத்துல என் மாமா வீடு இருக்கு சார்.நான் அங்க தங்கிட்டு காலைல அஞ்சு மணிக்கு போய் டயர் சரி பண்ணி மாத்திடறேன் சார். மன்னிச்சுக்குங்க "
கோபத்துடன் டிரைவரை அடிக்கப்போன அறிவு, மனது மாறி "சரி "என்று சொல்ல, மெதுவா அலுங்காம வண்டிய சுகிர்தா லாட்ஜ்க்கு செலுத்தினான் டிரைவர்.
மூன்று ஏ சி ரூம் எடுத்தாச்சு.
உள்ளே நுழைந்த போது தாகம் அதிகமானது . இந்த தாகத்துக்கு வெறும் H2O போதாது. H2O + C2 H5 OH வேணும்.
குருவும்,சித்தனும் அவனுடைய இணை பிரியா 30 வருடத் தோழர்கள்,
மெய்க்காப்பாளர்கள், பினாமிகள், ஒருத்தன் மச்சான்,மத்தவன் சகலை.
இருவரும் அப்பப்போ அறிவின் இடக்கை, வலக்கை என்று கடமை ஆற்றுவார்கள் . அறிவை யாரவது திட்டினால் அவர்கள் திட்டினவனை தீர்த்தே விடும் அளவுக்கு சென்று விடுவார்கள்.. அந்நியமற்ற அவ்வளவு அன்னியோனியம்.

குரு நாலு வயசு சின்னவன். மனைவியின் தம்பி. சொல்லு பேச்சு கேட்பான். முட்டை வேணும்னு சொல்லி முடிக்கறதுக்கு முந்தி ,ஆம்லெட்ட கொணாந்துருவான்.

சித்தன் ஒரு வயசு மூத்தவன்.மச்சினி புருஷன். அரசியல் அனுபவம் அதிகம்.கொஞ்சம் ரெஸ்பெக்ட்டு எதிர் பாப்பான். ஓரளவுக்கு புத்திசாலி. மாவீரன்.
மொத்தத்துல குருவும் சித்தனும் இல்லாட்டி அறிவுமணி காலி டப்பா என்பாங்க ஊர்ல.
அறிவுக்கு தாகம் ( அறிவு தாகம் எதுவும் இல்லை! ) தாங்கல.
லாட்ஜ் ரூம்பாயைக் காணோம். ரிசப்ஷன்ல கேட்டால் அவனுக்கு ஜுரமாம்.வேற ஆள் இல்லயாம்.
"இன்னா லாட்ஜ்டா இது.
குரு. நீயே இந்த பக்கம் போயி
ஜி எஸ் டி ரோடுக்கு அம்பதடி முந்தி ரோடுக்கு பீச்சாங்கை பக்கம் ஒரு ஒயின் ஷாப் இருக்கும்.அங்க போய் ஒரு ஃபுல் பிராண்டி..இல்லேன்னா எதுனா ஒண்ணு.. வாங்கியாம்மா. அங்கேயே சிக்கனும் இருக்கும். "
"சரிண்ணே."
"கூட ரெண்டு சோடா.வாங்கியா. கிட்டக்க தான். நடந்தே போ. கீள
ரிஸ்ப்சன்ல பிளாஸ்டிக் பை கேட்டு வாங்கிக்க..
குரு கிளம்பினான்.
* * * * * * *
ஜி எஸ் டி ரோடு நெருங்கும் போது
இடது கை பக்கம் டாஸ்மாக் கடை இருந்தது. ஆனால் மூடி இருந்தது.
ஏமாற்றத்துடன் பார்த்தகுரு, திரும்ப நினைத்த போது கடைக்கு பக்கத்திலிருந்து அரைகுறை வெளிச்சத்தில் ஒரு உருவம் " சார் "
என்றது.
"யாருப்பா" என்று பாதுகாப்பு உணர்வுடன் பாண்ட் பாக்கெட்டில் இருந்த கத்தியை தொட்டுக் கொண்டு கேட்டான் குரு.

உருவம் ரோட்டுக்கு,கொஞ்சம் வெளிச்சத்துக்கு, வந்தது.
ஆண். 25 வயது இருக்கலாம்.
ரொம்ப அழகாக அந்தக் கால கந்தன் கருணை சிவகுமார் போல் இருந்தான்.வெள்ளை வேட்டி வெள்ளை டீ ஷர்ட்டில் உதடு அசையாமல் புன்னகைத்தான்.

குரு ஆச்சரியமா பார்த்தான்.
அந்த இளைஞனிடம் " யாருப்பா நீ?
என்ன பண்ணற இங்க?.இனிமேல் பஸ் கூட கிடைக்காதுப்பா ". என்றான்.

இளைஞன் சிரித்தான்."டாஸ்மாக் குக்கு வந்தீங்களா.? இந்த கடை நெடுஞ்சாலைக்கு ரொம்ப பக்கமா இருக்குனு சொல்லி ஒரு வாரம் முன்ன போலீஸ் மூடிட்டாங்க."
"அட அப்படியாப்பா? தெரியாம போச்சே "
"எங்கிட்ட கொஞ்சம் சரக்கு இருக்கு.
வேணுமா?"

"அட. ரொம்ப தேங்க்ஸ் தம்பி எங்க வெச்சிருக்கே.காசு குடுத்துடறேன்."

என் பின்னாலே வாங்க.. என்று
ரோட்டுக்கு இடப்பக்கம் மண்டி இருந்த புதர் நடுவே ஒத்தை அடிப் பாதை வழியேசென்றான்இளைஞன்.
".நம்ம கிட்டவே வழிப்பறியா..." என்று சந்தேகத்துடன், கத்தி மேல் கையுடன்,
பின் தொடர்ந்தான் குரு.

பௌர்ணமி நிலவு ஒளிர்ந்ததால் வழி தெரிந்தது. 50 அடிதூரத்தில் தரையில் ஒரு ஐஸ் பெட்டி இருந்தது. இளைஞன் பெட்டியைத் திறக்க... உள்ளே ஐஸ் கட்டிகளுக்கு நடுவில் எட்டு பீர் பாட்டில்கள். குரு ஒரு பாட்டிலை தொட, அது ஜில் என்று இருந்தது.
"தேங்க்ஸ் மா கண்ணு. அல்லாத்தையும் எடுத்துக்கிறேன்.
இந்தா " என்று 2000 ₹ யை நீட்டினான்.
கையில் உள்ள பை இரண்டையும் எடுத்து பிரித்தான். பின் ஒரு பீர்
பாட்டிலை எடுத்து சட்டைப் பையில் இருந்தஒப்பானரால் மூடியை அவசரமா திறந்தான்..
இளைஞன் "நில் குடிக்காதே" என்றான்.
"என்னப்பா மருவாதை குறையுது.பைசாவப் புடி. நான் குடிச்சா உனுக்கு என்னா ?"

"எனக்கு காசு வேண்டாம்.
நான் சில கேள்வி கேப்பேன்.
பதில் சொல்லிட்டு குடி. அப்புறம் பாக்கி பீர் எல்லாம் எடுத்துப்போ. பதில் சொல்லாம குடிச்சீனா
செத்துருவே".என்றான் இளைஞன்.

"பிச்சையா போடுறே நாயே .இந்தா பணம் என்று 2000 ₹ ஐ வீசி விட்டு,
நீ யார்ரா என்ன கேள்வி கேக்க? போலீசே கேள்வி கேக்க பயப்படு வான் நம்மகிட்ட. நான் யார் தெரியுமா உனுக்கு? என்று சொல்லி ஒரு வாய் பீர் குடித்தான்.

வேரற்ற மரம் போல் வீழ்ந்தான் னு
பழைய காலக் கதைல எல்லாம் வரும் இல்லையா?அப்படிக் கீழே சரிந்தான் குரு.உடலில் அசைவே
இல்லை.
இளைஞன் குருவின் இரு கால் களைப் பற்றி இழுத்துப் புதர் ஓரம் சென்று கிடத்தினான்.
பின் ஒற்றை அடிப் பாதையில் நிதானமாக நடந்து பூட்டியிருந்த டாஸ்மாக் கடை வாசலில் சென்று நின்றான்.
* * * * * * *
அறிவு மணிக்கு தாகம் அதிகம் தான் ஆனது. தூக்கம் வரல.
அறிவுக்கு அந்த இடைத்தேர்தல் ரொம்ப முக்கியம்.

போன முறை, ஏழு வருஷம் முன்னால,ஆளும் கட்சில குட்டிக் கரணம் அடிச்சு எம் எல் ஏ ஆகி சில கோடிகள் சம்பாதித்திருந்தான்.

ஆனா கட்சிப் பணி, மேலிடத்துக் கப்பம், அடுத்த தேர்தல் செலவு அது இது என்று நிறைய செலவழிக்க வேண்டி இருந்தது. அடுத்த எலக்ஷன்ல , கால் கை பிடிச்சு, திரும்ப எம் எல் ஏ டிக்கெட் வாங்கி அதே இடத்துல நின்றான்.தன் செல்வாக்கை ரொம்ப நம்பினான். கூடவே சில கட்சி நண்பர்களை. முக்கியமாகவெற்றிவேலை.
வெற்றிவேல் அவன் கட்சியில் புதுசா சேர்ந்த துடிப்பான இளைஞன்.
அறிவுக்கு,.. தன் உயிர், உடல், ஆவி... என்று அனைத்தையும் அர்ப்பணிப்பதாக மேடையில் உணர்ச்சிகரமாக முழங்கினான் வெற்றி.
அறிவு,..அறிவு மயங்கி விட்டான்.
காசை அள்ளி வெற்றிவேலிடம் செலவு செய்யக் கொடுத்தான் . அவன் தான் தன் தளபதி.என்றான்.
வெற்றி வேலை குருவுக்கும் சித்தனுக்கும் சுத்தமாகப் பிடிக்கவில்லை.வெற்றியிடம் ஒரு குள்ள நரி ஒளிந்து கொண்டு அப்பப்போ வெளியே எட்டிப்பார்ப்பதாக அவர்கள்
அறிவிடம் சொன்ன போது, "வெற்றிவேலிடம் அவன் ஜாதி ஓட்டு நிறைய உண்டு. எல்லாம் நமக்கு வாங்கி தரப் போறான். செலவு ஆனாலும் ஜெயிப்போம் "என்றான்.

எல்லாப் பணத்தையும் வெற்றி வேல் என்ற குதிரை மீது கட்ட குதிரை கீழே தள்ளிக் குழியும் பறித்தது.

இருபதாயிரம் ஓட்டு வித்யாசத்தில் அறிவு தோற்றான்.ஆனால் அவன் கட்சி ஆட்சியைப் பிடித்து விட்டது

எதிர்க் கட்சியில் நின்ற தன்ராஜ் அபார வெற்றி பெற்றான். தன்ராஜ்,வெற்றிவேலின் ஜாதிக் காரன் மட்டும் இல்லை. வெற்றிவேலுடன் சில கோடிகள் அளவுக்கு அவனுக்கு "டீலிங்ஸ்" உண்டு என்றும் அப்புறம் தான் அறிவுக்குத் தெரிந்தது.அறிவின் கோபம் எகிறிது.வெற்றி அறிவின் பக்கமே வராமே ஒளிந்து கொண்டான்.

குருவும் சித்தனும் சேர்ந்து பெட்ரோல் குண்டு,நாட்டு குண்டு,ஆசிட் பாட்டில்
போன்ற படைக்கலங்களை வெற்றிவேல் மீது சில இடங்களில் ஆள் வைத்து வீச வைத்தும், வெற்றிவேல் தப்பி விட்டான். குருவும் சித்தனும் மூணுமாசம்..சந்தேகத்தின் பேரில்..ஜெயிலில் போடப்பட்டு,களி உண்டது தான் மிச்சம்.

அவர்களைத் தேற்றிய அறிவு.... "நல்லா சமயம் பாத்து, ஒரு நாள் வெற்றியை நாம மாட்டிக்காம, போட்டுடணும் . நாம அவசரப்பட வேணாம் " என்று ஆறுதல் சொல்லி இருக்கிறான்.

தேர்தல் முடிந்து இரண்டு வருஷத்துக்குள்ளவே,அறிவை தோக்கடிச்சு எதிர்க் கட்சி எம் எல் ஏ ஆன தன்ராஜ்,பட்டுனு மாரடைப்புல டிக்கெட் வாங்க... இப்போ தொகுதில இடைத் தேர்தல் வந்தாச்சு.

ஆனா இந்த முறை ஆளும் கட்சில அறிவுக்கு நிக்க டிக்கெட் ( வேறு அர்த்தம் இல்லை) கிடைக்கல. கட்சி மேலிடத்தில் அறிவிடம் எலெக்ஷன்ல நிக்கப் போதிய பணம் இல்லை. போண்டி ஆயிட்டான்னு சில பேர் போட்டுக் குடுத்துட்டாங்க.
....இல்லை இல்லை.. ஒருத்தன் போட்டுக் கொடுத்துட்டான்.
யாரு. நம்ம வெற்றியே தான். இப்போ அவன் கிட்ட வசதி அதிகம். கடைசில இப்போ அவன் தான் அறிவோட கட்சிக்கு இடைத் தேர்தல் வேட்பாளர்.

அறிவுக்கு அவமானம் தாங்கல.
அறிவு ,அவன் கட்சியில் இருந்து விலகி சுயேச்சயா நிக்க முடிவு செய்து வேட்பாளர் மனு கொடுத்துட்டான்.

அவனுக்கு என்று ஒரு முப்பதாயிரம் ஓட்டு நிச்சயம் வரும்னு நம்பினான்.
வெற்றி க்கு நல்லா டஃப் கொடுத்து
அவனைத் தோக்கடிச்சு அவனோட எதிர் கட்சியை ஜெயிக்க வைக்கணும். வெற்றியை ரோட்ல
உடணு ம்... பணம் கொஞ்சம் போகும்.

"போவட்டும் மாப்ளெ! பாத்துக்கலாம் அந்த வெற்றி .... பையன் அழியணும்" என்றார்கள் குருவும், சித்தனும்.

அவர்களை உணர்ச்சிப்பெருக்கில் கட்டிக்கொண்ட அறிவு. ": மச்சான்.. நீங்க ரெண்டு பேர் போறும். இந்த உலகயே ஜெயிப்பேன்".என்றான்.

பழைய நினைப்புல இருந்து விலகிய அறிவு, மணியைப் பார்த்தான். பதினோண்ணரை.
அரை மணிக்கு மேல் ஆகியும் குரு வும் வரல. பாட்டிலும் வரல.
.
"என்ன சகலை! குருவ இன்னும் காணோம்?" என்று சித்தனைக் கூப்பிட்டான்.
" கொஞ்சம் இரு அறிவு" என்று சித்தன் குருவுக்கு போன் போட, பதில் இல்லை.
"அறிவு கொஞ்சம் பணம் கொடு. நான் ஒரு எட்டு போயிட்டு வந்துடறேன். குரு எங்கனா தண்ணி கிடைச்சா அங்கேயே உக்காந்துடுவான். நான் போய் பாட்டில் பிடிச்சுகினு அவனையும்
இட்டாறேன்."
அறிவு பணம் கொடுக்க சித்தன் கிளம்பினான்.
"ஜாக்ரதை சகல. நீயும் குருவும் என் உயிரு போல். குருவை இட்டாந்துரு."

சித்தன் வேகமாக நடந்தான்.
* * * * * *

செல்போன் மணி அடிக்க அறிவு மணி எடுத்தான்.
"ஹல்லோ யாருப்பா?"
"அண்ணே! நான் தான் அண்ணே!"
"புரியல"
"நான் தான் அண்ணே வெற்றி வேல்."

போனைக் கட் பண்ணினான் அறிவு.
மீண்டும் போன் அடிக்க,எடுத்த அறிவு
இரண்டு நிமிடம் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்தான்.
"அண்ணே. நீங்க திட்டறது நியாயம் தான் அண்ணே.. இல்லனு நான் சொல்லல. நான் துரோகி தான். இப்போ எனக்காக . நீங்க கொஞ்சம் கீழ வாங்கண்ணே . நான் உங்க லாட்ஜ் ரிசெப்ஷன்ல தான் உக்காந்திருக்கேன் அண்ணே.
ஒரு நிமிஷம் உங்க நேரம் எனக்கு போதும் அண்ணே."

என்ன செய்வது என்று தெரியாமல்
சில நொடிகள் யோசித்த அறிவு, பின் எழுந்து தன் 0.32 ரிவால்வரை
எடுத்துக் கொண்டு லாட்ஜ் மாடியிலிருந்து கீழே இறங்கினான்.
* * * * * *


ஜி எஸ் டி ரோடு பக்கம் பூட்டின டாஸ்மாக் கடை வாசலில் இருந்து. "சார்! கடைய போலீஸ் மூடிட்டாங்க.சரக்கு வேணுமா?.என் கிட்ட இருக்கு. வாங்க "என்ற குரல் கேட்க, பார்த்தான் சித்தன்..
நம் வெள்ளை டி ஷர்ட் அழகிய இளைஞன் தான்,டாஸ்மாக் வாசலில் இருந்து,உதடு விரியாமல் சிரித்தான்.
கொஞ்சம் யோசித்துப் பின்
"ம்ம். " என்று அலட்சியமாக இளைஞனைப் பின் தொடர்ந்தான் சித்தன் ... சிறிது நேரத்தில் தான் சாயப்போவது தெரியாமல்.
* * * * * *
.ரிசெப்ஷன் டெஸ்க் பக்கம் இருந்த சோஃபா விலிருந்து எழுந்த வெற்றி, தன்னை நோக்கி வரும் அறிவைப்பார்த்து " அண்ணே வாசலுக்கு வாங்க.எனக்குஎண்ணி60 செகண்ட் கொடுங்க பேச. போதும்."
என்றான்.
இருவரும் வாசல் புறம் சென்றனர்.
வெற்றி பேச, அறிவு முகத்தில் சலனம் எதுவும் தெரியல.
* * * * * * *
ஒரு நிமிடம் கழித்து வெற்றி தன் ஹோண்டா சிட்டியில் ஏறி வண்டியை கிளப்பிச் செல்லும்போது,
இடப்பக்கம் டாஸ்மாக் போர்டு தெரிய வண்டி வேகம் குறைத்தான்.
டாஸ்மாக் பூட்டியிருந்தது கண்டு வேகம் கூட்ட முயல.....
டாஸ்மாக் கடை வாசலில் இருந்து. "சார்! கடைய போலீஸ் மூடிட்டாங்க.சரக்கு வேணுமா?.என் கிட்ட இருக்கு. வாங்க! "என்ற குரல் கேட்க பார்த்தான் வெற்றிவேல்...
நம் வெள்ளை டி ஷர்ட் அழகிய இளைஞன். டாஸ்மாக் வாசலில் இருந்து உதடு விரியாமல் சிரித்தான்.
கொஞ்சம் யோசித்துப் பின்
காரை விட்டு இறங்கி அலட்சியமா இளைஞனை பின் தொடர்ந்தான்
வெற்றிவேல்... அடுத்த பத்து நிமிடத்துக்குள் தான் சரியப் போவது தெரியாமல்.
* * * * * *
லாட்ஜ் மாடிப்படியில் ஏறித் தன் ரூம் சென்று படுக்கையில் சாய்ந்த அறிவுக்கு வெற்றி பேசியது பற்றியே நினைவு அலைந்தது. கோபம், அவமானம், குழப்பம், எதிர்காலம் பற்றிய நினைப்பு என்று முடிவு எடுக்க முடியாம வாட்டியது. ஆனால் அறிவு நிதானமானவன், அவசரப்படமாட்டான் என்று அவனுக்கே தெரியும்.
பத்து நிமிடங்கள் செல்ல,...ஏன் இன்னும் சித்தனையும் காணோம் குருவையும் காணோம்..என்று சித்தனுக்கு போன் போட கொஞ்சம் நேரம் மறு பக்கம்" போனால் போகட்டும் போடா"
என்று சோகமா பாட்டுப் பாடி முடிந்தது.
குரு நம்பர் தன் வாடிக்கையாளர் எல்லைதாண்டி இருப்பதாக கூறி முடித்துக்கொண்டது.

அறிவுக்கு கொஞ்சம் பயம் வந்தது.
வெற்றியின் வருகை, குரு -சித்தன் மறைவு.. இவற்றுக்குள் தொடர்பு உண்டா.?
போய் பாத்துருவோம். பசங்க ஆபத்துல இருக்காங்களோ.?
ரிவால்வர் எடுத்துக்கொண்டு நடந் தான் அறிவு.

ஜி எஸ் டி ரோடு நெருங்கும் போது
டாஸ்மாக் கடை....ஆனால் மூடி இருந்தது.
கடைக்கு பக்கத்திலிருந்து அரைகுறை வெளிச்சத்தில் ஒரு உருவம் " சார் " என்றது.
"யாருப்பா" என்று பாதுகாப்பு உணர்வுடன் பாண்ட் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை தொட்டுக் கொண்டு கேட்டான் குரு.

உருவம் ரோட்டுக்கு....,கொஞ்சம் வெளிச்சத்துக்கு,...வந்தது.ஆண்.
இளைஞன்,அழகன்.
வெள்ளை வேட்டி வெள்ளை டீ ஷர்ட் டில் உதடு அசையாமல் புன்னகைத் தான்.
"சார் சரக்கு வேணுமா?."
"அட இருப்பா,! இந்தப் பக்கம் கொஞ்சம் நேரம் முன்ன ரெண்டு ஆளுங்க தனித் தனியா நடந்து வந்தாங்களா?"
"ஆமாம் சார்."
"எங்க போனாங்க."
"என் கூடத் தான் வந்தாங்க!"
"இப்போ எங்கே?"
"கூட வாங்க சார் காட்டுறேன். அதுக்கு முன்னாடி கொஞ்சம் பீர் குடிக்கலாமா?"
"முதல்ல அவங்க கிட்ட கூட்டி போப்பா."
சிரித்தான் இளைஞன்.
"போலாம் சார். எதுக்கு அவசரம். வாங்க பின்னாடி."
அறிவு தொடர இடப்புறம் ஒத்தையடி பாதயில் நடந்து ஐஸ் பெட்டி கிட்ட நின்றான் இளைஞன்.
"சார் பெட்டியை திறங்க.
அறிவு திறந்தான்.
மூன்று திறக்கப்பட்ட பீர் பாட்டில்கள்
ஷாம்பு போட்ட தலை போல் நுரை பொங்க இருந்தன. தவிர ஐந்து திறக்காத பீர் பாட்டில்கள்.
"எது வேணும் சார். புது பாட்டில் வேணும்னா ஒப்பனர் இருக்கு."
"திறந்த பாட்டில் போதும்" என ஒரு பாட்டில கையில் எடுத்தான் அறிவு.
ஒரு மடக்கு குடிக்க உயர்த்திய போது இளைஞன் " நிறுத்து. என் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் குடித்தால் இறப்பாய் " என்றான்.

"என்ன தம்பி! டக்னு மரியாதைய உருவிட்டே. ஆனா உன்கிட்ட விஷயம் கெத்தா இல்லாட்டி நீ இப்படி சொல்வியா? சரி நீ சொல்றப்படி நான் கேக்குறேன்.
ஏதோ கேள்வின்னையே கேளு. பதில் சொல்லிட்டா போச்சு.
நம்ம பசங்க ரெண்டு பேரும் ஓகே தானே?."

இளைஞன் " நீ விவேகம் உள்ளவன். பொறுமைசாலி. பிழைத்தாய். என்னுடன் வா " என்று அறிவை அழைத்துச் சென்றான்.

புதர் ஓரம் சென்று வரிசையா அடுக்கி வைத்திருந்த மூன்று உடல்களைக் காட்டினான்.
"உன் மச்சான், சகலை , எதிரி.
மூணு பெரும் என் கேள்விக்கு பதில் சொல்லாம பீர் குடிச்சு செத்தாங்க.."
"அடப் படு பாவி. பீர்ல விஷம் கலந்துட்டாயா?. அநியாயமா கொன்னுட்டயேடா."
"என் கேள்விகளுக்கு பதில் சொல்லு. மூணு பேர்ல ஒருத்தன்
பிழைப்பான்.".
"விஷ மாத்து மருந்து வெச்சிருக்கியா?
கொடு அதை. நான் எல்லாரையும்
பொழக்க வெக்குறேன்." என்று துப்பாக்கியை இளைஞன் நெற்றியில் வைத்து அழுத்தினான் அறிவு.
இளைஞன் சிரித்தான்.துப்பாக்கிய காட்டி
"இந்த பொம்மை என்னை ஒண்ணும் பண்ணாது. ஏன்னா நான் உன்னை மாதிரி மனுஷன் இல்லை. நான் ஒரு யட்சன்."

திடீர் என்று இளைஞன் மறைந்தான்.

அறிவு அதிர்ச்சியில், பயத்தில் உறைந்து போனான் .
ஐந்து நொடியில் அவன்.. அதாவது யட்சன் மீண்டும் தோன்றினான்.
ஆனால் இப்போ தலையில் தங்கக் க்ரீடம், இடுப்பில் பட்டு வேட்டி, அங்கவஸ்திரம், காதுகளில் ரெண்டு, ரெண்டு பவுன் குண்டலங்கள்,
கழுத்தில் 25 பவுன் சங்கிலி. காலில் நுனி வளைந்த பாதுகைகள் , இடுப்பில் தங்கப் பிடி உள்ள பட்டாக் கத்தி, சகிதம் ரீ என்ட்ரி கொடுத்தான்.முகம் அதே பழைய க. க. சிவகுமாரின் அழகுடன்.

ஆடிப் போன அறிவு துப்பாக்கியைத் தன் பாண்ட்டில் வைத்தான்.

"நீங்க மந்திரவதியா.?
இல்லை ஏதாவது கடவுள் ஜாதியா.?
யார் சார் நீங்க.?"

"உட்கார் சொல்கிறேன்." என்றான்
யட்சன். அறிவு தரையில்அமர்ந்தான்.
யட்சன் ஆரம்பித்தான்.
நான் ஒரு யட்சன். அப்படினா.. தேவன் மாதிரி.. கந்தர்வன் மாதிரி..ஒரு விதமான ஆவிக்கூட்டம் சேர்ந்தவன் என்று வைத்துக்கொள்.. உனக்குப்புரிய. நாங்கள்..குபேரன் தெரிந்திருக்கும் உனக்கு.. பணத்தின் அதிபதியான கடவுள் ..அவருடைய வம்சாவளி. நேபாளம் பக்கத்துல காட்டில் நாங்க பலர் இப்போதும் இருக்கிறோம். எங்களுக்கு..மனிதருடன் ஒப்பிட்டால்.. சாவே கிடையாது என்று சொல்லலாம்.

எங்களுக்கு மணி,நேரம்,காலம் எதுவும் கிடையாது. உரு மாற்றம், காலப்பயணம். எல்லாம் சகஜம்.
பசி தாகம் வலி ஒன்றும் கிடையாது. மனிதர்கள் எங்களை வதைக்க முடியாது.
எங்களுக்குள் போட்டி,பொறாமை பேராசை,என்று எதுவும் இல்லாம இது வரை இருந்தது. ஆனந்த மயமான வாழ்க்கையாக.
இப்போது மகா பாரதத்தில் எங்க பங்கு பற்றி சொன்னா புரியும்.

மஹாபாரதக் காலத்தில்
பாண்டவர்கள் காட்டில் 12 வருஷ வன வாசம் செய்யும் போது ஒரு நாள் வெய்யில் மிகுதியால் நீர் கொண்டு வர நகுலன் நீர் நிலை ஒன்றை அடைந்து நீர் குடிக்க முயலும் போது
என்னைப்போல ஒரு யட்சன் தோன்றி " நகுலா. என் கேள்விகளுக்கு பதில் அளித்த பின்னர் நீர் குடி." என்கிறான். நகுலன் யட்சனை அவமதித்து
நீர் பருக முயல உடனே இறக்கிறான்.
நகுலனை தொடர்ந்து வரும் சகாதேவன், அர்ஜுனன், பீமனுக்கும்
இதே கதி. கடைசியில் வரும் தர்மன் யட்சன் கேள்விகளுக்கு பதில் கூற ஒப்புக்கொண்டு எல்லா கேள்விகளுக்கும் நேர்மையான பதில் கூறுகிறான். யட்சன் சந்தோஷம் ஆகி உன் தம்பி நால்வரில் யாரவது ஒருவனை உயிர் ப்பிக்கிறேன். யார் அது? " எனக்கேட்க,
தர்மன்,.. அர்ஜுனன்.,பீமன்,பேர்
சொல்லாமல் தன் மாற்றாந்தாயின் மகன் நகுலன் பெயர் சொல்ல, யட்சன் தர்மனின் நடுநிலையை வியந்து எல்லா சகோதரர்களையும் உயிர்ப்பிக்கிறான் .
தான் தான் தருமனின் தந்தையான எம தர்மன் என்று கூறி எல்லோரை யும் வாழ்த்துகிறான்.

இது பாரத யட்சன் கதைச் சுருக்கம்.

இந்தக்கதை மூலம் நாங்கள் மனிதர்களுக்கு பரிச்சயம் ஆனோம்.
அப்பப்போ பரிச்சயம் நீடித்தது. அதனாலோ என்னவோ...
இப்போது எங்களுக்குள் மனித குணங்கள் ஊடுருவி விட்டன. கோபம்,பொறாமை, பேராசை, போட்டி,பழி வாங்கல், பண,அதிகார,ஆசை எல்லாம்.அதனால் தற்சமயம் யட்சர்களிடயே எப்போது பார்த்தாலும் சண்டை.. ஜன நாயகம் வேண்டும்,தேர்தல்வேண்டும்..என்று...
மன்னர் குபேரன் மன நிம்மதி இழந்துவிட்டார். அதனால்
எங்கள் உலகில் மக்களாட்சி, , தேர்தல் எல்லாம் கொண்டு வர முடிவு செய்து விட்டார்.....எக்கேடாவது
கெட்டுப் போகட்டும் என்று.!

உங்கள் பாரத நாடு தான் உலகில் பெரிய ஜனநாயக நாடு என்பதால்
ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு யட்சன் என்று முப்பது யட்சர்களை ஜனநாயகம் பற்றித் தகவல் சேகரிப்பதற்காக குபேரன் அனுப்பியுள்ளார். நான் தான் தமிழ் நாட்டுக்கான ஆசாமி. இங்கு கேள்வி கேட்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட நால்வரில் நீ தான் கடைசி ஆள்.
தகவல் சேர்ப்பு முறையானது, மகா பாரத காலத்தில் எமன், தர்மபுத்திர னிடம் கேட்ட கேள்வி - பதில் முறைப் படி தான்.
அக்காலத்தில் பாண்டவர்கள் காட்டில் வெட்டியாக இருந்ததால் யமன் கிட்டத்தட்ட 125 கேள்விகள் கேட்டார்.
ஆனால் இன்று எல்லோரும் பரபரப்பாக இருப்பதால் நாலு கேள்வி தான் கேட்பேன். அதுவும் தேர்தல் பத்தி . உன் நல்ல உண்மையான பதில்கள் எங்களுக்கு உதவும். கேட்கட்டுமா.? "

"சரிங்க யட்சன் சார்.உங்க காரியத்தை கவனிச்சுக்கிட்டீங்க. என் காரியம்? செத்தவங்கள எழுப்பிடுவீங்களா?"

"பார்க்கலாம். அது உன் பதில் பொறுத்தது."

"இப்பவே அரசியல்வாதி ஆயிட்டே
யட்சா. சரி கேள்வி கேளு. வேற வழி?"
என்றான் கடுப்புடன்.
யட்சன் கேட்க ஆரம்பித்தான்.
யாட்சன் : 1.ஜனநாயகத்தின் சிகரம் . அளவிட முடியாதது, .அழிக்க முடியாதது ...இவை எதைக் குறிக்கும்.

அறிவு : ஊழல்

யாட்சன் : 2.ஜனநாயகத்தின் நான்கு தூண்கள் எவை?

அறிவு : பணம், அதிகாரம், பதவி,
தேர்தல் வாக்குறுதி

யட்சன் : 3. அப்போ இந்த நாலில்
மக்களின் ஓட்டு கிடையாதா?

அறிவு : மேலே சொன்ன நாலு தூண் மேல் கட்டற ஜனநாயக பில்டிங்கோட
செங்கல் தான் மக்கள் ஓட்டு.

யட்சன்: 4. சரி கடைசிக் கேள்வி! தேர்தல்களின் மிக ஆச்சரியமான விஷயம் என்ன?

அறிவு : ஒரு கட்சி எத்தனை முறை தோத்தாலும் அடுத்த தேர்தலில் நின்னு நிச்சயம் ஜெயிப்போம் என்று நம்புவது தான்.

யட்சன் அறிவை அப்படியே கட்டிக்கொண்டான். "அப்பா நீ ஒரு அரசியல் ஞானி. உன் பதில்கள்
எங்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும் . உனக்கு என்ன வேணுமோ கேள் " என்றான்.

"ரெண்டு விஷயம் " என்றான் அறிவு

"கேளப்பா"

"ஒன்று :செத்த குரு, சித்தன்,வெற்றி எல்லாரையும் எழுப்பணும்."
"யாரவது ஒருவரை மட்டும் எழுப்ப சொல்லிக்கேள். அந்த ஒருவனை மட்டும் எழுப்பறேன்.அது தான் என்னால் முடியும்.
உனக்காக உயிர் கொடுக்கத் தயாராக இருக்கும் உன் மச்சான் குருவா?
உன்னுடைய பக்க பலமாக இருக்கும் சகலை சித்தனா?
இல்லாவிட்டால் உன் பரம எதிரி, விரோதியான வெற்றியா.?
உன் பதிலின் உண்மைத் தன்மை எமக்குப் புரியும். பதில் கூறுக."

"அப்படின்னா வெற்றியை எழுப்புப்பா!"

ஆச்சர்யமாகப் பார்த்த எட்சன் "ஏம்ப்பா அறிவு, அவன் உன் எதிரி, துரோகி ஆச்சே. ஏன் அவனை எழுப்பசொல்றே."

"சிம்பிள் பா. இப்போ கொஞ்ச நாழி முன்ன என்னை வந்து பார்த்து என்ன சொன்னான் தெரியுமா வெற்றி?
நான் இப்ப சுயேச்சயா நிக்கிறேன் இல்லையா.அதுனால ஓட்டு பிரியும், வெற்றி ஜெயிக்கறது கஷ்டம்னு சொல்லி, இப்ப நான் தேர்தலில் இருந்து விலகினா எனக்கு இருபது கோடி ரூபாய் தரேன் என்கிறான் வெற்றி.
அப்போ, அவன் உசிரோட இல்லாட்டி எப்படி எனக்கு 20 கோடி வரும்.? நான் முன்ன சொன்ன படி,பணம் ஜன நாயகத்தின் ஒரு தூண்ப்பா!!"

"சபாஷ். மெச்சினேன் அறிவு..உன் அரசியல் ஞானத்தை . குரு, சித்தன், வெற்றி ஆகிய மூவரையும் எழுப்பி விடுகிறேன்...உன் நேர்மையான பதிலுக்காக. " என்று கூறியவுடன்
குரு, சித்தன்,வெற்றி, மூவரும் தூக்கம் கலைந்து எழுந்தது போல எழுந்தனர்.
."உன் ரெண்டாவது கோரிக்கையைச் சொல்லு." என்றான் யட்சன்.
சற்று யோசித்து அறிவு கேட்டான்.
"எம்பா. அந்த பீர்ல எல்லாம் விஷம் கலந்தியா?."
சிரித்த யட்சன் சொன்னான்.
"அவர்கள் மூவரையும் என் மந்திர சக்தியால் சாய்த்தேன்.அப்பனே.
பீரில் விஷம் கலக்கல."

"தேங்க்ஸ் பா. அப்போ அந்த எட்டு பாட்டில் பீரையும் எடுத்துக்கறேன். இந்த நேரத்தில் வேற எங்க போயி வாங்க.!
சரிப்பா! டாடா.! அப்புறம் எங்கனா
பார்க்கலாம்.".........என்றான் அறிவு.