தொடர்கள்
கதை
நினைவில் நின்ற கதை-சத்யபாமா  ஒப்பிலி

20231018062743559.jpeg

சில கதைகள் என்றோ படித்திருப்போம். கதை ஞாபகம் இருக்கும், ஆனால்,
எழுதியவர் பெயர் ஞாபகம் இருக்காது. எப்படித் தேடினாலும் கிடைக்காது. அது
ஏனோ, சில கதைகள் வெறும் ஞாபகங்களாகவே நம் தலைக்குள் அமர்ந்து கொள்கின்றன.
என்னிடம் யாராவது ஒரு கதை சொல் என்றால், முதலில் நினைவுக்கு வருவது இந்த கதை தான்.

ஒரு பாதிரியார் ஏசுநாதர் புகழ் பரப்ப நாடு நாடாக செல்கிறார்.
எல்லாரிடத்திலும் சென்று இறைவனை பிராத்திக்கும் முறையையும், பிராத்னைக்கு
சொல்லவேண்டிய வரிகளையும் சொல்லிக் கொடுக்கிறார். இதன்மூலம் உலகத்தில்
அ meன்பைப் பரப்பலாம் என்று தெளிவாக நம்புகிறார். அவர் பிரயாணம் எல்லாமே
கடல் வழி தான். அவ்வாறு செல்லும் பொழுது ஒரு தீவைப் பார்க்கிறார். அங்கு
யாரோ வசிக்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது. அந்த தீவுக்குள் செல்லமுடிவு செய்கிறார். முதலில் அங்கு யாரும் கண்ணுக்குத் தட்டுப்படவில்லை.
சிறிது நேரத்தில் ஒரு மனிதன் வருகிறான். அவனிடம் பாதிரியார் பேசத்தொடங்குகிறார். முதலில் அங்கே கோவில் எங்கு இருக்கிறது என்று கேட்கிறார்.
அந்த மனிதனுக்கு அப்படியென்றால் என்ன வென்றே தெரியவில்லை. பாதிரியார்
ஆச்சரியமாக, உங்கள் தலைவருடன் நான் பேச முடியுமா? என்கிறார். அதற்கு அந்த மனிதன், எங்களுக்கு தலைவன் என்று யாரும் கிடையாது. எது வேண்டுமானாலும்,அந்த குடிசையில் ஒரு முதியவர் இருக்கிறார், அவரிடம் தான் கேட்போம்.
நீங்களும் போய் பேசுங்கள் என்று கூறிவிட்டு சென்று விடுகிறான்.
பாதிரியார், மெதுவாக அந்த குடிசையை நோக்கி செல்கிறார். அது ஒரு செருப்பு
தெய்க்கும் தொழிலாளியின் வீடு. மிகவும் வயதானவர் ஒருவர் அங்கு அமர்ந்துசெருப்பு தெய்த்துக் கொண்டிருக்கிறார்.

பாதிரியார் அவரிடம் சென்று தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறார். தான்
வந்த நோக்கத்தையும் சொல்கிறார். அந்த முதியவர், மிகவும் மகிழ்ச்சி
அடைந்து ஏசுநாதர் கதையை கேட்க ஆரம்பிக்கிறார். கதை கேட்கக் கேட்க
முதியவருக்கு கண்கள் கலங்குகின்றன. கதை கூறி முடித்து விட்டு ஏசுபிரானை
எப்படி வணங்குவது என்பதையும் சொல்லிக் கொடுக்கிறார் பாதிரியார். அந்த இறை
வணக்கத்தின் கடைசி வரியை சொல்லிவிட்டு ஆமென் என்று கூறி அவர் நெற்றியில்
கையால் சிலுவை வரைகிறார்.
முதியவர் கண்களில் கண்ணீர் பெருகுகிறது. இப்படி ஒரு இறை அனுபவத்திற்கு
நன்றி சொல்கிறார்.
பாதிரியாரும் திருப்தியுடன் விடை பெறுகிறார்.கப்பல் தன் பயணத்தைத் தொடர்கிறது. நள்ளிரவில் மாலுமி திடீரென்று கூச்சல்போடுகிறான். பாதிரியார் என்ன என்று புரியாமல் ஓடி வந்து பார்க்கிறார்.தொலைவில் தெரியும் ஒரு சிறு ஒளியை சுட்டிக் காண்பிக்கிறான். அந்த ஒளி
இவர்களை நோக்கி நகர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. யாருக்கும் ஒன்றும்புரியவில்லை. பயத்துடன் அந்த ஒளியைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.
அது நெருங்க நெருங்க, அவர்கள் கண்ட காட்சி அவர்களால் நம்பவே முடியவில்லை.

அந்த முதியவர் ஒரு சிறு விளக்கை கையில் வைத்துக்கொண்டு கடல் மேல் நடந்துவந்து கொண்டிருக்கிறார். கப்பலின் அருகில் வந்து உள்ளே ஏறி வருகிறார்.பாதிரியாருக்கும், மற்றவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அந்த முதியவர்,
பாதிரியாரை வணங்கி விட்டு, மிகுந்த மகிழ்ச்சியுடன், " நல்ல வேளை, உங்களை
என்னால் பார்க்க முடிந்தது. நீங்கள் சொல்லிக் கொடுத்த இறைவணக்கதின் கடைசி
வரி மறந்து விட்டது. தயவு செய்து மறுபடியும் சொல்லிக் கொடுங்கள்" என்று
கேட்கிறார். சற்று நிலைக்கு வந்த பாதிரியார், அவருக்கு மறுபடியும்
சொல்லிக்கொடுத்து "ஆமென்" என்று முடிக்கிறார். அந்த முதியவர், மிகுந்த
மகிழ்ச்சியுடன் நன்றி கூறிவிட்டு, கப்பலில் இருந்து இறங்கி மீண்டும்தண்ணீரில் நடக்க ஆரம்பிக்கிறார். பாதிரியார், சற்று சுதாரித்துக்கொண்டு, அவரை அழைத்து, அய்யா, எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு
சாதாரண மனிதனால் செய்ய முடியாதது இது. தங்களால் எப்படி நீரில் நடக்கமுடிகிறது?" என்று கேட்கிறார். அதற்கு அந்த முதியவர் நிதானமாக, " அது
ஒன்றும் பெரிய விஷயமில்லை. அன்பு தான். நீங்கள் அதை ஆழமாக நேசித்தால்
மட்டும் போதும்" என்று கூறி விட்டு, இறை வணக்கத்திற்கு மறுபடியும் நன்றிசொல்லிவிட்டு தண்ணீரில் நடக்க ஆரம்பிக்கிறார்.

கதை இங்கு முடிகிறது. இந்த கதை என் கிராமத்தில், என் தாத்தாவின்
புத்தகங்களில் எதோ ஒரு கதை தொகுப்பில் படித்தது. ஒரு ஆங்கிலஎழுத்தாளர்களின் சிறு கதைத் தொகுப்பு. எப்படியும் 1920 களில்எழுதப்பட்டிருக்கலாம்.அல்லது அதற்கும் முன்னரோ, தெரியவில்லை.

இந்தக் கதை சொல்லும் விஷயம் ஏராளம். இதை சுருக்கி சொல்வதானால்,
எழுத்தாளர்களிடமிருந்து வாசகனுக்கு கடத்தப் படும் சில அழகான உணர்வுகள்
சற்று நீர்த்துப் போய் இருக்கலாம். ஆனால் சொல்லப்பட்ட கருத்தில் மாற்றம்
இல்லை.

அன்பே சிவம்.