தொடர்கள்
கவர் ஸ்டோரி
ஒரே குட்டை ! ஒரே மட்டை - விகடகவியார்

20231109004455294.jpeg

மிக் ஜாம் புயல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தை புரட்டிப் போட்டது என்றே சொல்லலாம். அரசாங்கம் எச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் இந்த நான்கு மாவட்டங்களுக்கும் பொது விடுமுறை தொடர்ந்து மூன்று நாட்கள் அறிவித்தது. கூடவே வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என்று எச்சரிக்கையும் செய்தது. (நினைத்தாலும் வர முடியாத அளவில் தான் நிலைமை)

மழை பல இடங்களில் பாரபட்சமின்றி இந்த நான்கு மாவட்டங்களிலும் சென்டி மீட்டர்களாக பெய்து படுத்தி எடுத்து விட்டது. சமூக வலைதளங்களில் இந்தப் பகுதியில் வெள்ளம் தண்ணீர் சூழ்ந்துள்ளது என்று வீடியோக்களுடன் மக்களே அரசாங்கத்தையும் தாண்டி உஷார் படுத்தினார்கள்.

தொடர் மழை காற்று காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்தக் கட்டுரை எழுதுகிற இந்த நிமிடம் வரை பல இடங்களில் மின்சாரம் சரிவர மக்களுக்கு கிடைக்கவில்லை. மின்சார வாரியம் பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்து இருப்பதால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படக்கூடாது என்பதற்காக நாங்கள் எச்சரிக்கையாக செயல்படுகிறோம் என்று சொல்லிக் கொண்டுள்ளார்கள். மின்தடை காரணமாக ஒரு கட்டத்தில் இணைய சேவையும் தடைப்பட்டது. இதனால் சமூக வலைத்தளங்கள் மூலம் கிடைத்த விழிப்புணர்வு மக்களுக்கு கிடைக்காமல் போனது ஒரு பக்கம்.

மழை துவங்கிய போது பாடிய அதே பாட்டை எல்லா சானல்களிலும் மேயர் பிரியா எழுதி வைத்தது போல சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு சாம்பிள் இங்கே......

இந்த நான்கு மாவட்டங்களிலும் மழை வெள்ளம் புயல் பாதிப்பால் இந்த நிமிடம் வரை என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் முழித்து கொண்டு இருக்கிறார்கள். இன்னமும் வேளச்சேரி, தாம்பரம், முடிச்சூர் போன்ற பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்கள் வெளியே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொட்டலம் வழங்கும் அளவுக்கு இந்தப் பகுதிகளில் பாதிப்பு கடுமையாக இருக்கிறது. பேரிடர் மேலாண்மை குழு படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணியை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறது.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இப்படி கடுமையான புயல் மூலம் ஏதாவது ஒரு பெயருடன் இயற்கை தமிழக மக்களை ஒரு காட்டு காட்டி விட்டு சொல்வது வாடிக்கை என்று ஆகிவிட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் இப்போது நிரந்தர தீர்வு எல்லாம் கேட்கவில்லை ஒரு பெண்மணி இந்தப் பகுதியில் ஆயிரம் வீடுகள் மழையால் சூழ்ந்துள்ளது ஒரே ஒரு படகுமூலம் மீட்பு பணி நடக்கிறது கூடுதல் படகுகள் விட்டால் இன்னும் அதிக அளவு மீட்பு பணி நடத்தலாம் என்பதுதான் அவர்கள் கோரிக்கை. இந்த ஆட்சியில் நிரந்தர தீர்வு எல்லாம் கிடைக்காது என்று அவரும் முடிவு செய்துவிட்டார் போலும்.

அதேசமயம் கடந்த இரண்டு ஆண்டுகளாக முதல்வர், அமைச்சர்கள் மேயர், தலைமைச் செயலாளர் பேசிய பேச்சு தமிழகத்தில் இனிமேல் வெள்ளமே வராது போன்று தான் இருந்தது. 70% பணி நிறைவு, 80% பணி நிறைவு, 90 % பணி நிறைவு இந்த முறை மழை பெய்தால் சென்னையில் எந்த இடத்தில் தண்ணீர் தேங்காது என்ற வாசகத்தை எழுதி வைத்தது போல் இவர்கள் எல்லோரும் சொல்லி வந்தார்கள். இப்போது அவற்றையெல்லாம் மீம்ஸ் ஆக போட்டு சமூக வலைத்தளத்தில் இவர்களை கலாய்க்கிறார்கள்.

சென்னை மாநகரத்தில் மழைநீர் வடிகால் பணிக்காக 4000 கோடி ஒதுக்கி இருக்கிறோம் என்று பெருமையாக சொன்னார் முதல்வர். இப்போது 4000 கோடி என்னாச்சு என்பதுதான் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டிருக்கிறது.

20231109061905682.jpg

இதற்கு ஆட்சியாளர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. சென்னை மற்றும் புறநகர் எதுவுமே முறையாக திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட நகரம் இல்லை. ரியல் எஸ்டேட் அதிபர்கள் தங்கள் விருப்பம் போல் பணம் பண்ணுவதற்கு புதிய புதிய நகரங்களை நிர்மாணிக்கிறார்கள். மக்களும் அவர்களை நம்பி அங்கு இடம் வாங்கி வீடு கட்டினார்கள். இப்போது அவதிப்படுகிறார்கள்.

மக்கள் மழையில் வெள்ளத்தில் அவதிபட்டாலும் அது பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் இப்போதும் புதிய புதிய நகரங்கள் சென்னைக்கு வெளியே பலமாடி கட்டிடங்களாக வரத் தொடங்கி இருக்கிறது. இதற்கு பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களே சாட்சி.

ஏரிகள் குளங்கள் இவை எல்லாமே ஆக்கிரமிப்பு செய்து மக்கள் வீடு கட்டி இருக்கிறார்கள். அதே சமயம் அரசாங்கம் அல்லது அரசியல் கட்சி அவர்களுக்கு வீடு கட்ட அனுமதி மின்சார வசதி, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு என்று சகலமும் வழங்கி இந்த ஆக்கிரமிப்புகளை அங்கீகாரம் செய்திருக்கிறது.

அரசாங்கமே நீர்நிலைகளை ஆக்கிரமித்து 4862 கட்டிடங்கள் கட்டியிருப்பதாக ஆக்கிரமிப்பு பற்றி ஒரு வழக்கில் உயர் நீதிமன்றத்தில் ஒப்புதல் பிரமாண வாக்குமூலம் தந்திருக்கிறது. எனவே ஆக்கிரமிப்பு விஷயத்தில் அரசாங்கம் பொதுமக்கள் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது என்பதற்கு இந்தப் பிரமாண பத்திரமே சாட்சி.

முதல்வர் 4000 கோடி பணி செய்து மழைநீர் வடிகால் பணிகள் கட்டமைக்கப்பட்டதால் தான் இந்த வரலாறு காணாத மழை பெய்தும் சென்னை தப்பித்து இருக்கிறது. அதிமுக ஆட்சியில் 2015-ல் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 199 பேர்கள் உயிரிழந்தார்கள். இன்று அதைவிட அதிக மழையில் இதுவரை ஏழு பேர்கள் மட்டுமே இறந்திருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இப்போது அந்த எண்ணிக்கை 17 ஆக உயர்ந்து விட்டது. இன்னும் இந்த எண்ணிக்கை உயர வாய்ப்பு என்றும் அதிகாரிகளே சொல்லி வருகிறார்கள். அதே சமயம் அதிமுக ஆட்சி என்பது வெள்ளத்தின் போது ஏற்பட்ட பாதிப்பின் போது எதிர்க்கட்சியாக இருந்த முதல்வர் என்னவெல்லாம் பேசினார் என்பதை அவரே மறந்து விட்டார் போலும். இப்போது சமூக வலைதளங்கள் அதை அவருக்கு நினைவு படுத்திக் கொண்டிருக்கின்றன.

உதாரணமாக முதல்வரின் கொளத்தூர் தொகுதி. கொளத்தூர் தொகுதி எப்போதும் தனி கவனிப்பு மின் வசதி சாலை வசதி மழைநீர் வடிகால் பணி எல்லாமே சுறுசுறுப்பாக நடக்கும் தனது தொகுதி என்பதால் முதல்வரும் அங்கு அடிக்கடி சென்று ஆய்வு செய்வார். அமைச்சர்களும் அங்கேயே தொடர்ந்து இருந்து கண்காணித்து வருவார்கள். இப்போது கொளத்தூர் தொகுதி மழைநீர் சூழ்ந்து மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

20231109063417140.jpeg

(நிலைமை தெரியாமல் அவ்வப்போது கே.என்.நேரு வேறு குறுக்கும் மறுக்கும் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தார்)

முதல்வர் ஸ்டாலின் மேயராக இருந்தபோது வேளச்சேரியில் தனி குடித்தனம் போனார். அவர் மேயராக இருக்கும் போது தான் வெள்ளம் வந்து வேளச்சேரியை சூழ்ந்தது. அப்போது காலி பண்ணி வீட்டை சித்தரஞ்சன் சாலையில் குடி புகுந்தார். வேளச்சேரி வெள்ளம் அவரை தனிப்பட்ட முறையிலேயே பாதித்தது. இருந்தும் அதற்கான தீர்வை யோசித்ததாக தெரியவில்லை.

20231109063615431.jpeg

தலைமைச் செயலாளர் நிருபர்களை சந்தித்து வெள்ள நிவாரண பணிகள் பற்றி பேட்டி தந்தார். 75 ஆயிரம் பேர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 372 நிவாரண முகாம்கள் 41,406பேர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கூடவே மழை நீர் சூழ்ந்துள்ள பகுதியில் வீடுகளுக்குள் இருக்கும் மக்களுக்கும் 37 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார். 37 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது என்றால் எத்தனை குடும்பங்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்பதை இந்த உணவுப் பொட்டலங்களே சாட்சியாக சொல்லிவிடும். கூடவே அவரே மொத்தம் 206 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது என்றும் குறிப்பிடுகிறார்.

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை 34 குழுக்களாக பிரிந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன என்று குறிப்பிடுகிறார். அதே சமயம் சென்னையில் நாலு சதவீதம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படவில்லை என்று பேட்டியில் குறிப்பிட்டார் தலைமைச் செயலாளர். இந்த புள்ளி விவரம் அவருக்கு யார் தந்தது என்று தெரியவில்லை.

சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் எங்கள் பகுதியில் தொடர்ந்து இரண்டு நாட்களாக மின்தடை மின்சாரம் வரவில்லை அவதிப்படுகிறோம் என்று பல இடங்களில் தங்கள் குறைகளை மக்கள் அதில் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் நாலு சதவீதம் தான் மின்சாரம் வழங்கப்படவில்லை என்று தலைமைச் செயலாளர் குறிப்பிடுகிறார்.

தலைமைச் செயலாளர் புள்ளிவிவரம் சொல்லும்போது இனியாவது கொஞ்சம் உண்மையை சொன்னால் நல்லது. தலைமைச் செயலாளர் என்பவர் பொறுப்புள்ள ஒரு அதிகாரி என்பதை அவர் உணர வேண்டும்.

அதே சமயம் பல இடங்களில் மின்துறை ஊழியர்கள் மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி ஊழியர்கள் வெள்ளத்தை சீர் செய்வதற்காக கடுமையாக உழைக்கிறார்கள் என்பதையும் சொல்ல வேண்டும். புரசைவாக்கத்தில் உள்ள ஒரு மின்சார ஊழியர் நான் வீட்டுக்கு போய் மூன்று நாட்கள் ஆகிறது. என் வீடு ரெட்டில்ஸ்ல் இருக்கிறது. என் வீட்டிலும் மின்தடை அதிகாரிகளை நான் தொடர்பு கொண்டு கேட்ட போது எப்போது வரும் என்று தெரியவில்லை என்று தான் சொல்கிறார்கள். நான் இங்கு மக்கள் கஷ்டப்படக் கூடாது என்று என் வேலையை செய்கிறேன் என்கிறார்.

இந்த வெள்ள அனுபவம் சென்னை மக்களை வர்தா புயல், கஜா புயல், தானே புயல் இது தவிர சுனாமி கொரோனா இப்போது மிக் ஜாம்புயல் என்று வாழ்க்கை அவர்களை பக்குவப்படுத்தி விட்டது. ஒரு மாதம் கழித்து அவர்களிடம் கேட்டால் அதெல்லாம் முடிஞ்சு போன கதை என்று சிரித்தபடியே நகர்ந்து விடுவார்கள். அன்றைய தினம் அவர்கள் சந்திக்க வேண்டிய வேறு பிரச்சினை இருக்கிறது என்பதுதான் எதார்த்தம்.

2015ல் குரல் கொடுத்த மக்கள் 'போராளிகள்' யாரையும் இந்த முறை காணோம். மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கிய அந்த போராளிகள் போர்வைக்குள் புகுந்து கொண்ட காரணம் நமக்கு தெரிந்தது தான்.

திராவிட கட்சிகள் எப்போதும் நிரந்தர தீர்வு பற்றி யோசித்ததே கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை மழை பெய்தால் பள்ளிகளுக்கு விடுமுறை மாநகராட்சி பள்ளிகளில் தங்க வைப்பு உணவு பொட்டலம் வழங்கல், பெட்ஷீட், பாய் இப்படித்தான் அவர்கள் திட்டங்கள் இருக்கும்.

சென்னையில் மற்றும் சுற்றுப்புறங்களில் பெய்த மழையில் பல லட்சம் கன அடி தண்ணீர் வீணாகி கடலில் கலந்து விட்டது. இப்படி வீணாகும் தண்ணீரை தேக்கி வைக்க அந்தத் தண்ணீரை பாதுகாப்பது குடிநீர் மற்றும் விவசாயத்தை மேம்படுத்த பயன்படுத்துவது போன்ற நீண்ட கால திட்டங்களை பற்றி அவர்கள் யோசித்ததே கிடையாது.

அதனால் தான் காமராஜர் இவர்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றார்.

கீழேயுள்ள காணொளி 2008ம் ஆண்டு சென்னையில் எடுக்கப்பட்டது. இவ்வளவு பெரிய மழையெல்லாம் கிடையாது அப்போது. அன்று அப்பாரு கலைஞர் தான் ஆட்சி. அன்று மிதந்த சென்னையிலிருந்து கற்றுக் கொண்ட பாடம்.. ஹூஹூம்.. ஒன்றுமில்லை. அடுத்த வெள்ளத்திலும் விகடகவியார் கட்டுரை எழுதுவார். மக்களெல்லாம் புலம்புவார்கள். கவலையே வேண்டாம்.

(2008ல் சென்னை. )

(2023 வெள்ள நிலமையும் சமூக ஊடகங்களும்....என்ன மாறியிருக்கிறது ? )

கழகங்கள் மாறி மாறி ஆட்சி செய்தாலும் அடிப்படை கட்டமைப்பை உயர்த்தியதே இல்லை.

சுரண்டல் செய்வது மட்டும் தான் அவர்கள் இருவருக்குமான ஒற்றுமை என்று சமூக ஊடகங்கள் ஓயாமல் புலம்பிக் கொண்டிருக்கின்றன.

(ஒரு சாமானியனின் குமுறல்)

பி.கு: குட்டையில் ஊறிய மட்டைகளில் அரசியல்வாதிகளோடு, இன்னமும் நீர்நிலைகளில் அடைத்து வீடு கட்டும் , பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டி நீர் வழித்தடங்களை அடைக்கும் மக்களையும் சேர்த்துக் கொள்ளவும்.