தொடர்கள்
வலையங்கம்
இதெல்லாம் எங்கே?

20240123165747916.jpeg

விவசாயத்துக்கான தனி பட்ஜெட் என்பதை தமிழக அரசு பெருமையாக சொல்லிக் கொள்கிறது. இது விவசாயிகள் நலன் சார்ந்தது என்கிறார்கள். ஆனால், விவசாயிகள் அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்கிறார்கள். விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்த கரும்புக்கு டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூபாய் 4000, நெல்லுக்கான விலை குயின்டாலுக்கு ரூபாய் 2500 போன்ற அறிவிப்பை எதிர்பார்த்தார்கள். ஆனால், அப்படி எதுவும் இல்லை. வீட்டுக்கு வீடு தென்னங்கன்று வழங்கப்படும். இது 2023 வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் வழங்கப்படவில்லை. இப்போது செம்மரம், சந்தன மரக்கன்று, வேப்பங்கன்று, கருவேப்பிலை, பப்பாளி செடிகள் வழங்கப்படும். இதற்கு 6 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறோம் என்கிறார்கள். எல்லாமே வெத்துவேட்டு என்ற சந்தேகம் விவசாயிகளுக்கு வரத் தொடங்கி இருக்கிறது.

தமிழகத்தில் மூடி கிடக்கிற 15 சர்க்கரை ஆலைகள் பற்றி பேச்சே இல்லை. விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை இருக்கிறது. இதற்கான தீர்வு பட்ஜெட்டில் காணோம். இதேபோல் சிறு குறு விவசாயிகளுக்கு குறிப்பிடும் படியான திட்டம் எதுவும் இல்லை. தமிழக விவசாயிகள் எதிர்பார்ப்பு ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை என்பது தான் விவசாயிகளின் விமர்சனமாக இருக்கிறது.

இப்போது கூட அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. 800-க்கு விற்பனை செய்யப்பட்ட இட்லி அரிசி இப்போது ரூபாய் 1200 முதல் 1300 வரை விற்கப்படுகிறது. இதே போல் பருப்பு விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. சாதனை சாதனை என்று நீங்களே உங்களை பாராட்டிக் கொள்ளாமல் மக்கள் மனநிலையை புரிந்து கொண்டு ஆட்சி செய்யுங்கள்.