தொடர்கள்
அனுபவம்
நம் வாழ்வு, நம் கையில்- மரியா சிவானந்தம் .

20240312173031565.jpg

சில நேரங்களில் கட்டுரை டைப் செய்யத் தொடங்கும் போதே கைகள் நடுங்கும் .உள்ளுக்குள் ஒரு உதறல் ஓடும். ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று இதயம் தவிக்கும். வார்த்தைகளில் வடிக்க முடியாத துன்பம் ஒரு கருமேகம் போல நிழலிடும் .

இந்த வாரம் புதன் கிழமை சென்னையில் நிகழ்ந்த விபத்து ஒன்று அத்தகைய உணர்வினை இப்போது தருகிறது. சென்னை குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் , செல்போனில் பேசிக் கொண்டே இருப்புப் பாதையைக் கடக்க முயன்ற போது வேகமாக வந்த 'தின்சுகியா' எக்ஸ்பிரஸில் அடிபட்டு ,அங்கேயே இறந்தனர்.

22 வயது பிரணவ், அவர் நண்பர் சதிஷ்,,40 வயது இருவரும் ஐடி துறையில் பணி புரிபவர்கள். விபத்து நடந்த போது , இருவரும் காதில் ஹெட் போன் மாட்டிக் கொண்டு பேசிக் கொண்டே வந்திருக்கிறார்கள் ரயில்பாதையைக் கடக்க ரயில் நிலையத்தில் இருக்கும் மேம்பாலத்தில் ஏறி செல்லாமல், தண்டவாளத்தைக் கடந்து இருக்கிறார்கள். ஒரு கணத்தில் அநியாயமாக இரண்டு இளைஞர்களின் உயிர் பறந்து விட்டது .

இதில் பிரணவ் , சமீப காலத்தில் ஊடகத்தில் பேசப்பட்ட ஒரு பெயர் .பெப்ரவரி முழுவதும் 'நீயா நானா ' நிகழ்ச்சி உணவுப் ஸ்பெஷலை நடத்தியது. அப்போது 'தோசை ஸ்பெஷலில் பிரணீதா என்னும் பெண் ,'என் தம்பி பிரணவ்வுக்கு அம்மா தோசையை சுட்டுப் போட்டுக் கொண்டே இருப்பார்கள் 'என்று பேசிய போது அவள் அம்மா ,"ஆமா ,என் மகன் தோசை நன்றாக சாப்பிடுவான் . நான் போதுமா என்று கேட்காமல் தோசை சுட்டு போட்டு கொண்டே இருப்பான் .25 தோசை கூட சாப்பிடுவான் .இதில் என்ன இருக்கிறது " என்றார் பெருமை பொங்க.

20240312173105699.jpg

அதன்பின் யூடுயுபர்கள் பிரணவ் மற்றும் மற்றும் அவர் அம்மாவின் நேர்க்காணலை எடுத்து இணையத்தில் வெளியிட அவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பல வித கருத்துக்கள் வெளி வந்தன. இப்படி ஒரு பரிதாப மரணம் அவருக்கு வந்ததைக் கேள்விப்பட்டு மக்கள் பெரிதும் வருந்தினர். எல்லாம் 'கண் திருஷ்டி ' அதனால் தான் இப்படி ஆனது என்று சொல்கிறார்கள். அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறதோ , ஒரு இளம் பிள்ளை மிகச் சிறிய வயதில் மரித்த கொடுமை , எவராலும் தாங்கிக் கொள்ள முடியாத சோகம்.

பிரணவ் போன்ற இளைஞர்கள் மட்டுமல்ல , பெண்கள் வயது முதிர்ந்தவர்கள் ஹெட் போனில் பேசிக் கொண்டும், பாட்டு கேட்டுக் கொண்டும் சாலையில் நடப்பதையும் ,வாகனம் ஒட்டிச் செல்வதையும் அன்றாடம் காண்கிறோம். போக்குவரத்து விதிகளை மீறி எதிர்பாராத விபத்தில் உயிர் இழப்பதையும் கேள்விப்படுகையில் நம் இதயம் அந்த முகம் தெரியாதவருக்காக வேதனை அடைகிறோம் .

மேலும், ரயில் நிலையங்களில் தண்டவாளத்தைக் கடக்க, அடுத்த நடைமேடைக்கு செல்லவும் மேம்பாலங்கள் உள்ளன. கொஞ்சம் சிரமம் பார்க்காமல் அதில் ஏறிச் சென்றால் , பாதுகாப்பாக இருக்கலாம். பெரிய ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர் அல்லது லிப்ட் வசதியும் உள்ளது . அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள தயங்க வேண்டாம்.

மது அருந்தி வாகனம் ஓட்டி விபத்தில் சிக்குவதைப் போலவே , செல்போனில் பேசிக் கொண்டு செல்பவர்கள் விபத்தில் சிக்குவதும் வழக்கமாகி விட்டது. செல்போனில் பேசிக் கொண்டுநடப்பது அல்லது வாகனம் ஓட்டுவது போக்குவரத்து விதிகளுக்கு முரண் ஆனது. ஆனால் இதை நடைமுறைப் படுத்துவது காவல்துறைக்கு சுலபமான காரியமாக இல்லை.

இவ்வித விபத்துக்கள் அவர்களைச் சார்ந்தோருக்கும் ,பெற்றவர்களுக்கும் பெரும் இழப்பைத் தருகிறது .தன் மகனைப் பற்றி பெருமிதமாக பேசிய அந்த நீயா நானா தாயின் முகமும் ,பிரணவ்வின் முகமும் நம் கண்முன் இருக்கிறது. அந்த தாய் இந்த சோகத்தை தன் வாழ்நாளில் மறக்க முடியாது .இதில் இருந்து அவர் மீண்டு வர வேண்டும் என்பதே நம் பிராத்தனையாக இருக்கிறது .

மனித உயிர் விலை மதிப்பற்றது. ஒருவர் தன் ஆயுளை எந்த விலை கொடுத்தும் வாங்க முடியாது. கவனக் குறைவால் அநியாயமாக உயிர் இழப்பதைத் தவிர்க்க வேண்டும் . இந்த அவசர யுகத்தில் பொறுமை , நிதானம் இவை எல்லா வயதினருக்கும் உரித்தான பண்புகளாக இருக்க வேண்டும். "உன் வாழ்வு உன் கையில்" என்ற வாசகம் அவ்வளவு பொருள் பொதிந்தாக இருக்கிறது . கவனமாக இருந்து இழப்பினைத் தவிர்ப்போம் .