(லாக் டவுன் காலத்துலயும் சிரிச்சுக்கிட்டு தான் இருந்திருக்கிறேன்… என்னைப் பார்த்தே!)
இப்ப போச்சே லாக்டவுன், அதான் கொரோனா காலத்துல, பொம்னாட்டீஸ்க்கு இல்லாத ஒரு பிரச்னை ஆம்னாட்டீஸுக்கு இருந்ததே.
அதுதான் இரண்டு மாதத்துக்கு ஒருமுறையாவது பட்டாபிஷேகம் என்று அழைக்கப்படும் முடிவெட்டிக் கொள்ளும் வைபவம்.
நானும் இந்த உலகம் நல்லாதானே சுத்திகிட்டு இருக்குன்னு தொடக்கத்தில் லாக் டவுனை எதிர்பார்க்காமல், முடிதிருத்திக் கொள்வதில் அசட்டையாக இருந்துவிட்டேன்.
சரிதான்.. கொஞ்சநாளிலே எல்லாம் சரியாயிடும்னு நானும் நாள் சில பொறுத்திருந்தேன். முடியோ நாளுக்குநாள் அதிகமாகி விட்டதே!
என் காதை மூடியது... கண்ணை மூடியது... தோளில் துவள ஆரம்பித்தபோதே 'இனி பொறுப்பதில்லை தம்பி!' என்று செயல்பட முடிவெடுத்தேன்.
' வீட்டுக்கே வந்து வெட்டுவம்டா!' என்று விளம்பரம் டிவியில் வந்தது. ஆனால் எங்கள் குடியிருப்பு சொஸைட்டி வெளியாட்களை உள்ளே சேர்க்கா விரதம் பூண்டொழுகலான், ஒப்பனைக் கலைஞரை வரவழைக்க வாய்ப்பில்லை.
உடன் வாக்கிங் வரும் பங்கஜ் பையா(bhaiyaஎன வாசிக்கவும்) 'உங்க தலையை வெட்டிக்கப் படாதோ?' என்று வினவியதில் துணுக்குற்றேன்.
தொடர்ந்தார்.."என் மனைவி எதையும் நறுவீசாக செய்வாள். அவள் தான் முடிதிருத்தி விட்டாள்”.
ஹோம் ரெமிடி இருக்க இத்தனை வருஷம் சலூனுக்கு நிறைய செலவு பண்ணிட்டேனே!" என்றார். ஜோக்காமாம் !
அவர் மண்டையைப் பார்த்தேன். கண்கூசும் வழுக்கை. பின்கழுத்து இறக்கத்தில் வரம்பு கட்டியிருந்த துக்கினியூண்டு முடிக்குதான் இவ்வளவு பில்டப்பு !
கையில் கத்திரியோடு அவர் மனைவி நிற்கும் பிம்பம் மனதில் எழுந்தது. வயசான ரியா சக்ரவர்த்தி முகஜாடை அந்த அம்மாளுக்கு!
வீட்டிலே நம்மாளுகிட்ட வேணும்னா கேட்டுப் பார்க்கலாமா என யோசனை.
‘வேண்டாம்.. பழைய வாய்க்கால் தகராறுகளுக்காக காதில் கத்திரி விழுந்து விட்டால்... வேணாம்பா!’
நமக்கு நாமே விடியல் தருவோம் என்று கத்திரிக்கோலை எடுத்தேன். முன்பக்கமாக கரகரவென வெட்டி உதிர்த்தேன்.
பின்பக்கம் கொஞ்சம் ‘காமாசோமா’ பண்ணிவிட்டு, குளித்து வெளியே வந்தேன்.
என் ஆஸ்தான ரசிகை அக்ஷராவோ 'யூ லுக் ஃபன்னி தாத்தா' என்றாள். அவளின் கெக்கலிப்பைக் கேட்டு, நான் பெற்ற மாணிக்கம் வெளியே வந்தான்.
"முன்னாடி ஓகே ! பின்னாடி ரெண்டு பி.ஏ குடுமி வச்சிட்டே! ( கிராப் தலையில் வைத்த குடுமியே பி.ஏ குடுமி!) இந்தக் 'கால்'பேசி முடிச்சிட்டு உனக்கு சரியா வெட்டி விடுறேன்" என்றான்.
"உனக்கே உன் அம்மா இன்னும் ஊட்டி விடுறா! எனக்கு நீ முடிவெட்டிவிடப் போறியா? வேலையைப் பாரு!"
மீண்டும் கத்தரிக்கோலைக் கைகொண்டேன்.
'கண்ணு பார்த்ததைக் கை செய்ய வேண்டாமா?' என்ற அம்மாவின் ஊக்கவரி காதில் எதிரொலித்தது.
'செய்வேன் அம்மா!' என்று பின்தலை முடியை குத்துமதிப்பாகப் பிடித்து 'கச்சக் கச்சக்' என வெட்டினேன். கண்ணாடியைப் பார்த்தால் கன்பீஸ் ஆகுது என்று கண்ணைமூடிக்கொண்டு காரியத்தில் இறங்கினேன்.
என் சிகைக்கலைஞர்கள் யூசுப், சிக்கந்தர் நினைவில் வந்துபோனார்கள். போனமுறை யூனிசெக்ஸ் சலூனில் ஒரு சின்னப் பெண், பீனாவோ ரீனாவோ முடிதிருத்தினாள். ‘பாப் ‘ வெட்டிவிடுவாளோ என்று பயந்து கொண்டேயிருந்தேன். நன்றாகத்தான் வெட்டியிருந்தாள்.
ஆனால் அவள் தலையில் கைவைத்தவேளை, அடுத்த கட்டிங் நானே என்றாகி விட்டது!
வேலை ஆனவரை பார்க்கலாம் என்று மெல்ல தலையை நாலாப்புறமும் தடவிப் பார்த்துக் கொண்டேன். சை! இந்த ரெண்டு காதும் நடுவாப்புல மட்டும் இடைஞ்சலா இல்லேன்னா இன்னும் துப்புரவாய் கட்டிங் முடிஞ்சிருக்கும்! காதை இப்படியா இங்க கொண்டு வைக்கும் உம்மாச்சி?
‘போகுது! காதுகள் இங்கயே இருக்கட்டும். கண்ணாடி, கூலிங் கிளாஸ் மாட்டிக்க சௌகரியமாய் இருக்கே!’ என என்னைத் தேற்றிக் கொண்டு கத்திரியைக் கீழே வைத்தேன்.
'வெட்டி முடித்தவரே! பாதியில் விட்டவரே!' என்ற சலங்கைக் கதிர் மனரேடியோவில் அலறியது.
மீண்டும் குளியல். தலை வாரல். பவுடர் போடல். ஃபைலோ பனியன் மாட்டிக் கொள்ளல். ஆச்சு!!
பிள்ளை வந்தான். நெடுநேரம் ஸ்பாட் இன்ஸ்பெக்ஷன் செய்தான்.
"இப்போ எப்டீ இருக்குடா?"
"இப்போ பெட்டர் தான் . வெளிய போகும்போது, தலைக்குப் பின்பக்கமாகவும் ஒரு மாஸ்க் மாட்டிக்கோ நைனா!" என்றான்.
"என்ன கிண்டலா? ஒழுங்காச் சொல்றா!"
" அய்ய.. நான் கிண்டல் பண்ணல்ல நைனா! உன் கையின் கலை நேர்த்தியைப் பார்த்து யார் கண்ணும் பட்டுடக் கூடாதேன்னு சொன்னேன் மோகா!"
ஆஹா!
'பாலூட்டி வளர்த்த கிளி .. பழம் கொடுத்து பார்த்த கிளி' என்று என்னுள் டிஎம்எஸ் பொங்கினார்.
Leave a comment
Upload