தொடர்கள்
ஆன்மீகம்
இவன்பின் செல்; தம்பி என்னும்படி அன்று... - மாலதி ராஜா 

20240410111047868.jpeg

ராமாயணத்தில் தசரதனின் பட்ட மகிஷிகளில் ஒருவளாக இருந்தவள் சுமித்திரை. கௌசல்யைக்கும் கைகேயிக்கும் இருந்த முக்கியத்துவம் இவளுக்கு இருந்ததில்லை. இவள் காசி அரசனின் மகள் என்றும் மகத தேசத்தை சேர்ந்தவள் என்றும் இரண்டு அபிப்பிராயங்கள் இருக்கின்றன.


அமைதியான கதாபாத்திரம் என்றாலும் இரண்டு சந்தர்ப்பங்களில் தான் யார் என்பதை ஆழமாக வெளிப்படுத்துகிறாள்.ஒன்று இலக்குவன், தானும் ராமனுடன் வனவாசம் செல்லுவதாக சொல்லும்போது, இன்னொன்று ராமன் காட்டுக்கு செல்லப்போவதை கேட்டு மனம் உடைந்து போன கௌசல்யாவிற்கு ஆறுதல் சொல்லும்போது . இவ்விரு இடத்திலும் அவளின் தியாகம், சமயோசிதம், மனஉறுதி தர்ம சிந்தனை எல்லாமே வெளிப்படுகின்றன.


இலக்குவனிடம், இராமனும் சீதையும்தான் உனக்கு தந்தையும் தாயும், அவர்களுக்கு ஒரு சேவகனாக இரு.எக்காரணம் கொண்டும் அவர்களை பிரிந்துவிடாதே என்று சொல்லும்போது, சுமித்ரா என்னும் தாய், ஒரு மகாராணியாக உருப்பெறுகிறாள். மகன் காட்டுக்கு செல்வதால் கலங்கி நிற்கும் கௌசல்யாவிடம், சர்வ குணங்களும் நிரம்பிய ராமன் தர்மத்தைதானே நிலை நாட்டச் செல்கிறான் என்று கூறும் போது அவளின் தெளிவான சிந்தனையும் நோக்கமும் புலப்படுகிறது.


கௌசல்யை போலவே இவளும் பட்டத்து ராணி .இவளும் தன் மகனை வனத்திற்கு அனுப்புகிறாள். கௌசல்யாவை போலவே சுமித்திரைக்கும் தசரதனின் அன்பு கிடைக்கவில்லை. கௌசல்யா ராமனை காட்டுக்குச் செல்ல விடாமல் தடுத்தாள்.


ஆனால் சுமித்திரையோ இலக்குவன் உத்திரவு கேட்க வரும்போது தர்மோபதேசங்கள் செய்து அனுப்பி வைக்கிறாள்.

தசரதன் தன்னிடத்தில் பிரியமில்லாமல் கைகேயிடத்தில் பிரியத்துடன் இருப்பது கௌசல்யைக்கு மிகவும் வருத்தம்.ஆனால் சுமித்திரை அந்த வருத்தம் இருந்ததாக அவள் காட்டிக்கொள்ளவே இல்லை.ஒரு ஞானியைப் போல இருக்கிறாள் .


கௌசல்யைக்கு ஆறுதல் சொல்லும்போது,"அம்மா உத்தமமான குணங்களையுடைய புத்திரனை பெற்ற நீ விசனப்படலாமா? பிதாவின் வாக்கியத்தை பரிபாலனம் செய்யவேண்டும் என்ற தர்மத்தை காப்பதற்காக செல்லுகிறான். அது பெரியோர்களால் ஆதரிக்கப்படும் தர்மம் அல்லவா?
ராமனுடைய பாணத்திற்கு பதில் பாணம் யாராவது செலுத்த முடியுமா?
ராமன் மஹாத்மா. சகல லோகத்தையும் பிரகாசிக்கச் செய்யும் சூரியன் அவன்.அக்னியும் அவனே.பூமி தேவிக்கும் ஆதாரம் அவன் .ராஜலட்சுமியான சீதை அவனுடன் போகும்போது எதுதான் கிடைக்காது.வில்லாளி இலக்குவன்
அவனுக்கு முன் போகும்போது பயம் எதற்கு?வனவாசம் முடிந்து மூன்று பேரும்
உன் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வதை நான் பார்ப்பேன் என்றெல்லாம் கூறுகிறாள். சாத்திரங்களைக் கற்று தேர்ந்தவர்களால் தான் இப்படி சலனமில்லாமல் இருக்க முடியும்.
ராமனின் அவதார ரகசியத்தை முழுவதுமாக அறிந்த ஒரு சிலரில் இவளும் ஒருவளாகவே தோன்றுகிறாள். தன்மகன் இலக்குவனின் மனநிலையை புரிந்தவளாக இருக்கிறாள்.


ஒரு அரசியாக, தாயாக, சகோதரியாக, மனைவியாக சுமித்திரை வாழ்ந்த வாழ்க்கை அசாதாரணமானது. யோசித்துப் பார்த்தால், மாலவன் துயில் கொள்ளும் பைந்நாகம் குடிகொண்ட உடல். ஞானத்திற்கு கேட்கவா வேண்டும்!இலக்குவனனின் குறிக்கோள் அவன் சொல்லி இவளுக்கு புரியவேண்டியது இல்லை. ஒரு சில கதா பாத்திரங்களே பிரமிப்பாக பேசப்படுகிறன. மற்றவை அந்த பிரமிப்பில் சற்று மறைந்து விடுகின்றன. குடத்துக்குள் விளக்காக சிலபேர் வாழ்ந்துவிட்டு போவார்கள்.


சுமித்திரை என்னும் ஞான விளக்கு அமைதியாக சுடர்விட்டு கொண்டு இருக்கிறது ராமாயணம் என்னும் இதிகாசத்தில்.