தொடர்கள்
கவிதை
தைலப்புட்டியின் மயிற்பீலி.. ராகவன் சாம்வேல்

20240409152408539.jpg

ஆத்தா என் அரிசிமணி

ஆணை தூர்த்த நெல்லுமணி

நெல்லுமணி விதைச்ச நிலம் - நீ

நீச்சத்தண்ணி மண் கலயம்

பூத்த பூவு சிரிப்பழகு

புத்தம்புது வெங்கப்பானை

பொங்கலு பச்சரிசி - நீ

பொத்தி வச்ச கம்பஞ்சோறு

ஆத்தா உன் மணிக்கொசுவம்

ஆத்தங்கரை மடிக்குளிரு

பாத்த பார்வை பணியாரம்

பம்பரம் தான் உன் வெரலு

புத்தியில ஓம்பாட்டு

புழுதி மேயும் ஒம்பார்வை

பத்திரத்தில் பனையோலை - மண்ணு

பாத்திரத்தில் பலகாரம்

ஒட்டுப்பானை புளியம்பழம்

ஓட்டு வீட்டு அதிகாரம்

கட்டு மணி தொட்டில் சரம் - நான்

கண் அடைய உன் கதையும்

அப்பன் பெரும சொல்லி

அழுத கதை அத்தனையும்

பொட்டியில ஒறங்கவிட்டு - நீ

பொத்தி வச்சே, மணிச்சரமா!

படிச்சது ராமாயணம்

பாதையெல்லாம் முள்ளுக்காடு

வடிச்ச நீரையெல்லாம் - நீ

வாய்க்காலில் வழியவிட்ட

கோரைப்பாய் கூரை நீ

கோணி கசியும் சூரியன் நீ

பாற பட்டவெயில் நீ

பாத்தி ஓடும் பச்சை நீரு

வாடக் குளிரடைக்க

வாச்சு வேய்ஞ்ச கீத்துக் கொட்ட

வேய்ஞ்ச கொட்டாயிக்குள்ள

வெள்ளிக்கொடம் தங்க நிலா

வேர்வை தொடைச்ச வெரல்

வேதனையும் வெள்ளக்காடு

வெள்ளம் வடிஞ்ச நிலம் - நீ

வேர் பிடிக்க காடாச்சு

காடுமனை கழனிநிலம்

கண்ணு நிறைஞ்ச மகமக்க

பொன்னு விளைஞ்ச நிலம் - நீ

பொதிஞ்சு வச்ச போதிமரம்