தொடர்கள்
கற்பனை
அவனா சொன்னான்  ???-  சுஶ்ரீ

20240411070021624.jpeg

மரகதம் தெரியுமா உங்களுக்கு? தெரியாதா…… என்ன ஆளுங்க சார் நீங்க,பத்மலோசனி ஹாஸ்பிடல் பஸ் ஸ்டாப்பை ஒட்டின பச்சை கேட் வீடு சார்.கேட்டை ஒட்டின வெராண்டால ஒரு சேர்ல உக்காந்து படிச்சிட்டிருப்பா எப்ப பாத்தாலும். நான் காலேஜ் போறதுக்கு எங்க வீட்டுக்கு பக்கம் மார்க்கெட் பஸ் ஸ்டாப்தான். ஆனா நான் ரெண்டு ஸ்டாப் நடந்து போய் பத்மலோசனி ஹாஸ்பிடல்லதான் பஸ் பிடிப்பேன்.மரகதம் யாரையும் தலையை தூக்கிக் கூட பாக்க மாட்டா.

சீக்ரட்டா மரகதத்தோட அழகை உங்களுக்கு மட்டும் சொல்லட்டா? என்ன ஒரு முகம் சார்.. கண்ணு ரெண்டும் எவ்வளவ்வ்வு பெரிசு, அளவெடுத்து கணக்கா செதுக்கின நாசி,காசி அல்வாத் துண்டா உதடுகள், அந்த உதட்டுக்கு ஜஸ்ட் மேலே சின்ன சிவப்பு மச்சம். அவளோட ஃபேவரைட் கலர் கருப்பும் மஞ்சளும் போல. பெரும்பாலும் கருப்பு தாவணி மஞ்சள் பாவாடை,ரவிக்கைதான்.

அந்த சாதாரண உடைக்குதான் எத்தனை பெருமை அவள் உடலைத் தழுவி நிற்பதில். மிதந்து வர காத்துல அவளோட அடர்ந்த கூந்தல் நெத்தில வந்து விழறதை நாசூக்கா இடது கையால ஒதுக்கற அழகை பாக்கவே மூணு பஸ்ஸை தவற விடலாம்.

இந்த வெள்ளிக்கிழமை நான் புறப்பட்டதே கொஞ்சம் லேட், விக்கு விக்குனு நடந்து பஸ் ஸ்டாப் போறப்ப போட்டி வில்லன்கள் தினசரி ஸ்டண்ட் முடிச்சிட்டு போயிட்டாங்க போல. நம்ம மரகதம் கதவைப் பிடிச்ச படி யாரையோ எதிர் பார்ப்பது போல நின்னிட்டிருந்தா.

நான் போய் வழக்கம் போல பஸ் ஸ்டாப்ல நின்னவுடன்.

“என்ன இன்னிக்கு சார் ரொம்ப லேட் போல” அட, என்னைப் பாத்துதான் பேசறா என் கனவுக் கன்னி.

மரகதம். என்னவோ கேக்கறாளே முதல் முறையா. அவ பேசினது மட்டும் புரியறது, தலைல ஜிவ்னு ஏதோ ஏறிச்சே, வெறும் குரலுக்கு இத்தனை போதையா.

நான் தொண்டைல அடைச்ச ஐஸ் பந்தை கர்..கர..னு கரைச்சிண்டு அவளுக்கு என்ன பதில் சொல்லலாம்னு யோசிக்கறதுக்குள்ளே என் பின்னல இருந்து ஒரு குரல், “ இல்லம்மா மரகதம் இன்னிக்கு லீவு,ரேஷன் ஆபீசுல கொஞ்சம் வேலை” பின்னல இருந்து ஒரு

55 வயது முதியவர் பதில் சொல்றார். சே எனக்கு சப்னு போயிட்டது இவரைப் பாத்துதான் பேசினாளா? என் முகத்தில் அசடு வழிந்ததை மற்ற யாரும் பாத்திருப்பாங்களோ.

என்னை வம்புக்கிழுக்கதான் அந்தப் பெரியவரிடம் பேசினாள்னு நானா முடிவெடுத்தேன். “மிஸ் உங்க கர்சீப்” கீழே கிடந்த அந்த குட்டி துணியை காட்டினேன்.

“ஓ தேங்க் யூ ஆனா என்னுதில்லை, உங்களுக்குதான் இப்ப தேவை” சொல்லிக் கொண்டே துள்ளி ஓடி வீட்டுக்குள் நொடியில் மறைந்து விட்டாள்.

அதுக்கப்பறம் ஒரு வாரம் மார்க்கெட் பஸ் ஸ்டாப்லயே பஸ் ஏறிட்டேன்.

மே மாசம் இப்ப காலேஜ் லீவு,3ம் தேதி என் பர்த்டேயா, அம்மா சொன்னா,”பெருமாள் கோவில் போய் பெருமாளை சேவிச்சிட்டு,

கோவில்ல நேத்தே பணம் கட்டி இருக்கேன் சக்கரைப் பொங்கல் நைவேத்யம் பண்ணி குருக்கள் தூக்குல கொடுப்பார், பெருமாளை சேவிக்க வரவாளுக்கு ஒரு ஓரமா நின்னு தொண்ணைல போட்டுக் கொடு. நானும் அப்பாவும் பின்னாலயே வரோம்.”

பெருமாள் வெள்ளைப் பட்டு அலங்காரத்துல நகையெல்லாம் போட்டுண்டு, என் பிறந்த நாளை சிரிச்சமேனிக்கு கொண்டாடிண்டு

நின்னிண்டிருந்தார்.குருக்கள் தீபாராதனை காட்டி, தீர்த்தம் கொடுத்து

சடாரி சாத்தி ஆசீர்வாதம் பண்ணினார். இருடா அம்பினு, நெய் மணக்கும்,முந்திரி மிதக்கும் சக்கரைப் பொங்கல் நிறைந்த ஒரு எவர்சில்வர் தூக்கை கைல கொடுத்து, ”இதை வெளில கூடைல இருக்கற தொண்ணைல போட்டு விநியோகிக்கலாம்”னார்.

தூண் பக்கத்திலிருந்த கூடைல இருந்து கொஞ்சம் திருத்துழாய்(துளசி இலைகள்) எடுத்து பொங்கல் தூக்கில் மேலாப்பல போட்டுட்டு வெளில வந்தேன். கதவை ஒட்டியே ஒரு பெரிய கூடையில் தொன்னைகள் (பூவரச இலைகளால் தைக்கப் பட்ட கிண்ணங்கள்)தெரிஞ்சது. அங்கேயே நின்னு பெருமாளை சேவிச்சிட்டு வரவாளுக்கு குழிக் கரண்டியால பொங்கலை எடுத்து தொன்னையில் போட்டுக் கொடுத்தேன். கிட்டத்தட்ட அரை மணி நேரம் பொங்கல் தூக்கு காலி ஆகப் போற நேரம்.

“எனக்கு பிரசாதம் கிடையாதா” அந்த இனிய குரல் கேட்டு தலை நிமிர்ந்தேன்.மரகதமேதான் புன்னகையுடன் என் முன்னால்.

எனக்கு தலைகால் புரியலை ஒரு தொன்னைல பொங்கலை முந்திரிப் பருப்புகளை தேடிப் போட்டு அவ கைல கொடுத்தேன்.

அவ சிரிச்சிண்டே ,“பரவாயில்லையே எனக்கு ஸ்பெஷல் உபசாரம்

ஆமாம் இன்னிக்கு என்ன விசேஷம்”

நான் தலையை குனிந்து கொண்டே மெல்ல முனகினேன்.”என் பொறந்த நாள்”

“ஓ… இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்”சொல்லிண்டே தன் தலையிலிருந்த ஒற்றை ரோஜாவை எடுத்துக் கொடுத்தாள்.

எனக்கு ஒரே கிளர்ச்சி என்ன ரியாக்ட் பண்றதுனே தெரியலை ரோஜாவை வாங்கிண்டு தேங்க் யூ, லவ்யூ னு உளறினேன்.

“ ச்சீ…கோவில்ல வச்சு பேசற பேச்சைப் பாரு யாரும் கேட்டா என்ன நினைப்பா” சொல்லிண்டே விடு விடுனு பிரகாரம் சுத்தப் போயிட்டா.

எனக்கு நிலை கொள்ளலை, அவ பிரகாரம் சுத்தி வரப்ப பிடிச்சிடணும்னு அவசரமா பொங்கல் தூக்கை காலி பண்ணிட்டு திரும்பறேன்,

“ என்னடா பிரசாதம் பூரா தீந்ததானு கேட்டுண்டே அம்மாவும், அப்பாவும் எதிர்ல,இப்ப இக்கட்ல மாட்டியாச்சேனு நினைக்கறப்பவே

மரகதம் பிரதட்சணம் முடிஞ்சு வெளில வரா…

“யம்மாவ் இரும்மா என் ஃபிரண்டு வரேன்னான் பாத்துட்டு வரேன்”

காலித் தூக்கை அம்மா கைல கொடுத்துட்டு அவசரமான பதட்டத்தோட வெளில கிளம்பினேன்.

அவசரமா வெளில வந்து வாசல்ல இருந்த செருப்பை மாட்டிண்டு சுத்திப் பாத்தேன் எந்தப் பக்கம் போயிருப்பா மரகதம்?

எதிர்ல அனுமார் கோவில் அதுக்கு முன்னால 16 கால் மண்டபம்,

அந்த மண்டப கல் தூண்ல சாஞ்ச படி நின்னிண்டிருந்தா என் தேவதை.

ஒரு நிம்மதி பெருமூச்சோட மண்டபம் நோக்கி போனேன். அவ வேணும்னே வேற யாரையோ எதிர் பாக்கற மாதிரி நின்னிட்டிருந்தா.

பக்கத்துல போனதும், “ என்ன, பிரசாதம் கொடுத்து முடிச்சாச்சா?”

“ஆச்சு கொஞ்சம் தூணை விட்டு தள்ளி நில்லேன்”

ஏன் என்னாச்சுனு கீழே சுத்தி முத்தி பாத்துண்டே நகந்து வந்தா.

“ இல்லை அந்த வெள்ளைக் காரன், தூண்ல இருக்கற அழகான பெண்கள் சிலைகளை படம் எடுத்துண்டு வரான், உன்னையும் சேத்து எடுத்துடப் போறானேனுதான்”

சட்டென சிவந்தது அவ கன்னம்,” சீ போப்பா அந்த சிலைகள் வேற” அனிச்சையா தன் மாராப்பை திருத்திக் கொண்டாள்.

நான்,”நீ கொடுத்த இந்த சிவப்பு ரோஜாக்கு என்ன அர்த்தம்?”

“ரோஜால என்ன அர்த்தம் இருக்காம்? பர்த்டேனு சொன்னே,ஏதாவது கொடுக்கணுமேனு கொடுத்தேன் அவ்வளவுதான்.”

“இந்த பூவை உன் தலைப் பின்னல்ல வச்சி விடலாமா”

“ஐய்யோ, பப்ளிக் பிளேஸ்லயா? எல்லாரும் என்ன நினைப்பா?”,சொன்னாளே தவிர கொஞ்சம் பக்கமா வந்து லாவகமா திரும்பி நின்னா. “சீக்கிரமா வை யாரும் பாத்தா என்னை தப்பா பேசுவா”

இந்த ரோஜாவுக்கு நோகுமோ, என் ரோஜாவுக்கு நோகுமோனு சர்வ ஜாக்கிரதையா அவளுடைய கருநாக ஜடையின் ஆரம்ப இடத்தில் மலரை சொகுசாய் அமர்த்தினேன்.தன் வலது கையால் அதை தொட்டுப் பார்த்துக் கொண்ட மரகதம்,” ஐயாவுக்கு அனுபவம் ஜாஸ்தி போல இருக்கே”

“இல்லைப்பா ஒரு பொண்ணு கிட்ட பக்கத்துல நின்னு பேசறதே இதான் முதல் தடவை.”

“பொய்தானே சொல்றே, உன் அக்கா ,தங்கை, அக்கம் பக்கம் பொண்களே கிடையாதாக்கும்.”

“இல்லை நான் எங்க வீட்ல ஒரே பையன், அக்கம் பக்கம் பொண்கள் இருக்காங்க ஆனா எனக்கு பேச கூச்சம்”

“அப்ப என்னைப் பாத்தா பொண்ணா தெரியலையா, என் கிட்ட இவ்வளவு பேசறே”

“அது வந்து நீ தனி”

“என்ன தனி, என் முகம் மட்டும் தங்கத்துலயா பண்ணி வச்சிருக்கு”

“ இல்லை அதுக்கும் மேலே மதிப்பில்லா கோமேதகம்”

“அடேயப்பாடி கதை,கவிதையெல்லாம் எழுதுவயோ?”

“கவிதைக்கு கவிதை எழுத நான் காளமேகப் புலவரா என்ன?”

“அப்பாடியோ,உன் கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்,பேசியே கவுத்துடுவே போல இருக்கே, சரி நான் போகணும் நேரமாச்சு அம்மா தேடுவா”

“அப்பறம் எப்ப பாக்கலாம்”

“எப்பவும் போல பஸ்ஸ்டாப்ல நின்னு சைட் அடி” சொல்லிச் சிரிச்ச வண்ணம் நடந்து போயிட்டா. நின்னு அவ பின்னல்ல சிரிக்கிற அந்த சிவப்பு ரோஜாவை கண்ல இருந்து மறையற வரை பாத்துட்டே நின்னேன்.அந்த நீண்ட கரும் பின்னல் ஏதோ தாள ஜதிக்கு

கட்டுப்பட்டு, டடக் டக்னு இடது வலதுனு ஆடி அசைந்தது

“நிஜமாவே இவ்வளவு நடந்ததா எப்படிடா? எப்பவும் என் கூடவே இருப்பயே இத்தனை நாள் இதெல்லாம் எனக்கு தெரியாதே”

எங்க வீட்டு மாடி ரூம்ல உக்காந்து என் காதல் கதையை கேட்டிட்டிருந்த நடராஜன் கேக்கறான் “மேலே என்ன ஆச்சு

சொல்லு நல்ல இடத்துல நிப்பாட்டிட்டயே”

இருடா அம்மா கூப்படறாங்க நாளைக்கு மீதியை சொல்றேன்.

நல்ல ஒரு காதலை தானே மிஸ் பண்ணிட்ட ஃபீலிங்ல தெருவில் இறங்கி நடந்தான் நடராஜ். “என்ன மாப்ளை ஶ்ரீதர் வீட்ல இருந்து வரயா? என்ன சொல்லுது அந்த கப்சா? கனகா கதையா, மல்லிகா கதையா?”

“டே இல்லைடா அவன் நிஜமாவே லவ் பண்ணின மரகதம்ன்ற பொண்ணை பத்தி நிஜ ஃபீலிங்ஸ்ஸோட சொன்னாண்டா ஒரு டிவி சீரியல் மாதிரி செம எபிசோட்”

“டிவி சீரியல் என்ன,விட்டா முழு சினிமா ஓட்டுவான், பத்மலோசனி ஹாஸ்பிடல் ஸ்டாப், பச்சை கேட் வீடு அதானே?”

“அட உனக்கும் தெரியுமா அந்த மரகதத்தை?”

“அடப் போடா போ, பத்மலோசனி ஹாஸ்பிடல் ஸ்டாப்,அந்த பச்சை கேட் வீடு மட்டும்தான் நிஜம். அங்கே எனக்கு தெரிஞ்சு 10 வருஷமா ஒரு குடுகுடு தாத்தா பாட்டிதான் இருக்காங்க,மரகதமும் இல்லை ஒரு ம…ம் இல்லை எல்லாம் ஶ்ரீதர் பய கப்சா.இப்படிஒவ்வொருத்தர் கிட்டயும் ஒவ்வொரு விதமா பொய்த் தம்பட்டம் அடிச்சிட்டிருக்கான்.