ஜோதிட சாஸ்திரம் 27 நட்சத்திரங்களையும், 12 ராசிகளையும், நவகிரகங்களையும் அடிப்படையாகக் கொண்டுதான் இயங்கி வருகின்றது. இதில் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான குணநலன்கள் மற்றும் காரகத்துவங்களைக் கொண்டவை. நவக்கிரகங்களில் முக்கியமானவர் சனிபகவான். எண் கணிதத்தில், இவர் எட்டாம் எண்ணுக்குரிய அதிபதி என்று விவரிக்கப்படுகிறது. சனிபகவான் கிரகங்களில் நீதிமான் என்று கூறப்படுகின்றது. அதாவது செய்த தவற்றுக்குப் பாரபட்சமில்லாமல் சரியான தண்டனையைத் தருவார். எமனாக இருந்தாலும் எவனாக இருந்தாலும், சிவனாகவே இருந்தாலும் எல்லோருக்கும் ஒரே தீர்ப்புதான். நவக்கிரகங்களில் ஈஸ்வரப் பட்டம் பெற்றவர் இவர் ஒருவரே. சனி கொடுத்தால் யார் தடுப்பார் என்று கூறுவார்கள். ஒருவர் முற்பிறவியில் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நன்மைகளையும், தீமைகளையும் தருவார். மனிதன் பிறப்பு எடுப்பதே கர்மத்தைத் தீர்ப்பதற்குத் தான். சனிபகவான் நம்மைத் தண்டிப்பவர் அல்ல. நேர்வழி படுத்தி இறுதியில் நன்மை மட்டுமே செய்பவர். இதை மக்கள் இதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், இவரைக்கண்டு பயப்படுகிறார்கள்.
சனிபகவான் பூமியைச் சுற்றி வருவதற்கு 30 வருடங்களாகும்.
ஒரு லக்கினத்திலிருந்து இன்னொரு லக்கினத்துக்குச் செல்ல அதிக காலம் எடுத்துக்கொள்ளும் ஒரே கிரகம் சனியே. ஏழரைச்சனி, அஷ்டமச்சனி ஆகியவற்றின் வழியாக வாழ்க்கையில் அனுபவத்தையும் புரிதலையும் செய்யக்கூடியவர் சனிபகவான்.
சனிபகவானும் எட்டாம் எண்ணும்:
தசாவதாரங்களில் பகவான் கிருஷ்ணன் எட்டாவது குழந்தையாக எட்டாவது திதியான அஷ்டமியில் பிறந்தவர்.
திருமாலின் திருநாமம் (ஓம் நமோ நாராயணாய) என்பது எட்டெழுத்து. திருமாலின் மார்பில் வசிக்கும் செல்வத்தை குறிக்கும் லட்சுமி, அஷ்ட லட்சுமிகளாக இருந்து செல்வத்தை வாரி வழங்குகிறாள். திக்குகள் எட்டு. அஷ்ட திக் பாலகர்கள் அஷ்ட வசுக்கள், சிவஸ்வரூபங்கள் எட்டு என இப்படி எட்டுக்கு ஏகப்பட்ட சிறப்புகள் இருக்கின்றன.
சனீஸ்வர பகவானின் பிறப்பும், சிறப்பும்:
சனி பகவான் சூரிய தேவன், சாய தேவி தம்பதிகளுக்குப் பிறந்தவர். இவரது வாகனம் காகம் , இவரது கால் சிறிது ஊனம். அதனால் இவர் சற்று மெதுவாகவே செல்லக்கூடியவர்.
சனி பகவானுக்குரிய மலர் கருங்குவளை
சனி பகவானுக்குரிய தானியம் எள்
சனி பகவானின் வாகனம் காகம்
சனி பகவானின் நவரத்தினம் நீலக்கல்
சனி பகவானுக்குரிய ஆதிக்க எண் 8
சனி பகவானின் அதிதேவதை எமன், ஆஞ்சநேயர்
இவரது இருப்பிடம் சனிலோகம். கிரகம் சனி கோள்.
இவரது ஆயுதம் தண்டாயுதம். துணைவியின் பெயர் மந்தா தேவி.
சகோதரர்/ சகோதரி தபதி,சாவர்ணி, மனு ஆகியோர் ஆவர்.
இவரது மறு பெயர் சாய புத்ரன்..
ஏழரைச் சனி :
நம் ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசியே ஜன்ம ராசி என்பர். சனி ஒவ்வொரு ராசியிலும் 2 1/2 வருடம் தங்கியிருப்பார்.முதல் இரண்டரை ஆண்டுக் காலம் விரய சனி என்றும்
அடுத்த இரண்டரை ஆண்டு ஜன்ம சனி என்றும்,
கடைசி இரண்டரை ஆண்டு பாதச் சனி என்பர்.
எல்லாருடைய வாழ்க்கையிலும் 30 வருடத்திற்கு ஒரு முறை ஏழரைச் சனி வரும். முதல் சுற்று மங்கு சனி இரண்டாம் சுற்றுப் பொங்கு சனி மூன்றாம் சுற்று, கடைசி சனி என்று சொல்வர்.
சனியின் ஆதிக்கம்:
சனியின் ஆதிக்கம் கொண்டவர்கள், நீதி நேர்மையுடனும், நன்னடத்தையோடும் வாழ விரும்புவார்கள். இவர்களது சத்தியத்திற்கு அவ்வப்போது சோதனைகள் வந்து போகும். இந்த நபர்கள் தயாள குணம், தர்ம சிந்தனையைக் கடைப்பிடிப்பார்கள். இவர்களுக்குத் தலைமைப் பதவி தேடி வரலாம். ஏழரைச் சனி அல்லது அஷ்டமச் சனி முடியும் தறுவாயில் ஒருவருக்குச் சனி கொடுக்கும் வாழ்வானது, நிரந்தர யோகமாக அமையும்.
ஏழு தலைமுறைகளுக்காகச் சொத்து களைச் சேர்க்கும் யோகத்தைத் தருவது சனி பகவான் தான். அந்த சொத்துகளைக் கட்டிக்காக்கும் சக்தியும், சனியிடம் இருந்தே கிடைக்கிறது. தொழில் அதிபர் என்கிற தகுதியைத் தருபவரும் இவர்தான். எண்ணெய் நிறுவனம், இரும்பு கம்பெனி, பெட்ரோல், டீசல் பங்க் அதிபதிகள், சனி ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். வம்சாவளியாக்க வரும் நோய்களைத் தீர்க்கும் சக்தி படைத்தவர் சனி பகவான்.
சனிபகவான் வழிபாடு :
அவரவர் ராசிகளில் சனிபகவான் சஞ்சரிக்கும்போது பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் தந்து துன்பப்படுத்தி, பிறகு அந்த ராசியை விட்டு அடுத்த ராசிக்குச் செல்லும்போது நஷ்டங்களை ஈடுசெய்யும் வகையில் மகிழ்ச்சியைக் கொடுத்து விட்டுச் செல்வார் என்பது ஐதீகம். சனி தோஷம் உள்ளவர்கள் தோஷ நிவர்த்தி செய்வதால், சனீஸ்வரன் மகிழ்வுற்று அந்த தாக்கங்களைக் குறைத்துப் பல நன்மைகளைத் தருவார். இவற்றுள் ஏழரைச் சனி காலம் மிகவும் கஷ்டமான காலமாகும். இந்த சமயத்தில் சனியின் பாதிப்பைக் குறைப்பதற்காகச் சனி பகவானுக்கு விருப்பமான விஷயங்களைச் செய்வதால் சனியால் ஏற்படும் கஷ்டங்கள் குறையும்.
சனி பகவானின் ஆதிக்கம் உள்ள காலங்களில் பிரதோஷ வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு, கால பைரவர் வழிபாடு இந்த மூன்றையும் நம்பிக்கையுடன் செய்து வந்தால் பாதிப்பைக் குறைத்துக் கொள்ளலாம்.
பரிகாரங்கள்:
சனிக்கிழமை தோறும் கருப்பு எள் விளக்குப் போடவேண்டும். காக்கைக்குச் சாதம் வைத்தல் மிகவும் நல்லது.
ஊன முற்றோர் மற்றும் அனாதை இல்லங்களுக்குச் சென்று உணவு மற்றும் வஸ்திர தானம் செய்யலாம்.
அருகில் உள்ள சிவன் கோவிலுக்குச் செல்லலாம்.
சனி ஸ்தோத்திரம்:
நீலாஞ்சன ஸ மாபாசம்
ரவிபுத்ரம் யாமகிராஜ்ஜம்
சாயா மார்த்தாண்ட சம்பூதம்
தன் ந மாமி சனைஸ்வரம்.
சனி காயத்ரி:
காகத்வாஜய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தன் நோ மந்த ப்ரசோதயாத் !
இந்த மந்திரங்களைத் தினமும் 11 முறை ஜெபித்து , சனிக்கிழமை தோறும் சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால், வாழ்கையில் நன்மைகள் நடப்பது நிச்சயம்.
Leave a comment
Upload