
அப்ப மணி மதியம் 3 இருக்கும். சென்னையில் தன் அண்ணன் வீட்டுக்கு வந்திருந்த கண்ணாத்தா, திண்டிவனத்துக்கு பக்கத்துல இருக்க தன்னோட கிராமத்திற்கு திரும்பிப் போகும் பயணத்தை தொடங்கினாள்.
அவளுக்கு வயசு 70 இருக்கும். நரைத்து போன தலை.இருக்கும் சில பற்களிகளிலும் வெத்தல பாக்கு கறை அப்படியே இருக்கு. பார்த்தாலே ஏழ்மையின் எடுத்துக்காட்டாய் இருந்தாள் அவள்.
அவள் கிளாம்பாக்கம் புறநகர் பஸ் ஸ்டாண்டுக்கு போகும் டவுன் பஸ்ஸில் ஏறப்போனாள்.ஏறும் போது டிரைவர், ’திடீர்’ என்று பஸ்ஸை எடுத்து விடவே நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டாள்.இதைப் பார்த்த கண்டக்டர்,’தள்ளாத வயசுல தனியா வர்ரிங்களேம்மா, கூட யாரையாயாவது கூட்டிட்டு வர வேண்டியதுதானே? கீழே விழுந்து கை,கால் உடைந்தால் கவர்மெண்டுக்கு யார் பதில் சொல்லறது? நீங்க பண்ற தப்பு யாருக்கும் தெரியாது. இந்த மீடியாக்காரங்க எப்படியோ மோப்பம் பிடிச்சு உடனே வந்துடுவாங்க. எங்க வேலைக்கு உலை வச்சுடுவாங்க. ஒன்னு துணையோடு வரணும். இல்லேன்னா ’சிவனே’ன்னு வீட்டிலேயே கெடக்கனும். யாரும் உனக்கு பிள்ளைக் குட்டி இல்லையா ஒன்ன கூப்டுட்டு வர?’ என்று திட்டியபடியே அவளை பஸ்ஸில் ஏற்றிக்கொண்டார் கண்டக்டர்.
கண்ணாத்தா ஏதோ சொல்ல நினைத்தாள். பஸ்ஸில் கூட்டமாக இருந்தது. அதனால் பதில் எதையும் சொல்லாமல் மெளனித்தாள்.
அவளுக்கு பஸ்ஸில் உட்கார இடம் கிடைக்கவில்லை. அவளப்பார்த்து எந்தப் பயணியும் எழுந்து இடமும் கொடுக்கல. கண்டக்டரும் அவளப்பத்தி கவலப்படறதா தெரியல. இன்னிக்குன்னு பார்த்து வெயில் வேற கொளுத்துது.
அப்படியும் கண்டக்டர் கிட்ட சொன்னா,”ஏதோ தலை சுத்துற மாதிரி இருக்குப்பா.ஏதாச்சும் ஒரு சீட்ட பார்த்து கொடுப்பா’என்று. ‘இந்த கூட்டத்தில யாரம்மா எழுந்துக்கச் சொல்றது.நீயே கேளு’ என்று அசால்ட்டாக சொல்லிவிட்டு, ’டிக்கெட்,டிக்கெட்’என்றபடியே டிரைவர் பக்கம் போய்விட்டார்.
கண்டக்டர் பேரு ரமேஷ். 50 வயசு இருக்கும். அவருக்கு அப்பா இல்லை. அம்மாதான் கூலி வேலைக்கு போய் சம்பாதிச்ச காச எல்லாம் யாரோ உள்ளூர் அரசியல்வாதி கிட்ட கொடுத்து அவனுக்கு ஒரு கண்டக்டர் வேலைய வாங்கி கொடுத்திருக்காங்க.
வேலைக்கு சென்னைக்கு வந்த அவன், தொடக்கத்துல ஆறுமாசத்துக்கு ஒரு தடவை கிராமத்துக்கு போய் அம்மாவை பார்த்துட்டு இருந்தான்.கடந்த 20 வருஷமா அதுவும் கெடையாது.மெட்ராஸ்லயே ஒரு பொன்னப்பார்த்து கல்யாணம் பண்ணிண்டு செட்டில் ஆயிட்டான்.5ஆம் கிளாஸ் படிக்கும் பொன்னு ஒன்னு இருக்காம்.பொண்டாட்டிக்கிட்ட,’தனக்கு அம்மா உயிரோடு இல்ல’ன்னு வேற சொல்லி வைச்சுருக்கான்.
கண்ணாத்தாவுக்கு பையன் இருக்கறதால முதியோர் பென்ஷன் எதுவுமே கிடைக்காதாம்.100 நாள் வேலை திட்டத்துக்கு போயிட்டு வர காசுல கஞ்சி குடிச்சிட்டு இருக்காங்க. அப்பப்போ அவங்க அண்ணனும் ஏதாவது காசு அனுப்புவாரு.அவருக்கும் வயசாயிட்டு இருக்கு.
கண்ணாத்தா கிராமத்துல ஒரு குடிசையில தனியாத்தான் இருக்காங்க.பக்கத்து வீட்டு மாரியம்மாத்தான் அவளுக்கு ரொம்ப உதவியா இருக்கா.
சென்னையில இருக்கற பையன் ரமேஷோட அட்ரஸ் கூட அவளுக்கு தெரியாது.அதுக்காக அவள் முயற்சியோ,கவலையோ படறதும் கெடையாது. பையன் அவங்க அம்மாவ ஒரேயடியா மறந்துட்டான். கண்ணாத்தான் எப்பவாவது ஒரு தடவை சென்னைக்கு வந்து அண்ணன மட்டும் பார்த்துட்டு போவாள்.
கிளாம்பாக்கம் வந்தது.பஸ்ஸே காலி ஆயிடுச்சு.பஸ்ஸிலிருந்து இறங்கிய கண்ணாத்தாவிடம் கண்டக்டர் ரமேஷ்,’,’பார்த்து போம்மா. அடுத்த தடவை வரும்போது உன்னுடைய பையன், பொண்ணு யாரையாவது கூட்டிட்டு வா. தனியா வராத’ன்னு சொல்லி அவளை எச்சரித்து பஸ்ஸைவிட்டு கீழே இறக்கினான்.
கண்ணாத்தா திண்டிவனம் போற பஸ்ஸ ஒரு வழியா கண்டுபிடிச்சா.நல்ல வேளையா ஜன்னல் ஓரம் சீட் கெடச்சது.
ஏறி உட்கார்ந்த அவளுக்கு பழைய நினைவுகள் வந்தன.இந்த பஸ் ஏதாச்சுலேயேயும் தன் பையன் ரமேஷ் கண்டக்டரா இருப்பானோ? என்று எண்ணி அங்குமிங்கும் பார்த்தாள்.அவளின் புரையோடிய கண்களால் ரொம்ப தூரம் பார்க்க முடியல.
கண்டக்டர் வந்தார்.திண்டிவனம் போக டிக்கட் வாங்கினாள். பயண நேரம் இரண்டு மணி நேரம் ஆகும் என்பது அவளுக்குத் தெரியும்.இலேசாக கண்களை மூடிய அவள் ஆழ்ந்த தூக்கத்துடன் ஐக்கியமாகிவிட்டாள்.
தூங்கிக் கொண்டு இருந்த கண்ணாத்தாவுக்கு,’தான் கஷ்டப்பட்டு வளர்த்து கடன் பட்டு வேலை வாங்கி கொடுத்த தன் பையன்தான், தான் வந்த டவுண் பஸ்ஸின் கண்டக்டர் ’இரமேஷு’ ன்னு தெரியல. கண்டக்டருக்கும் தான் அட்வைஸ் பண்ண அந்த மூதாட்டிதான் தன் அம்மா கண்ணாத்தா’ன்னு தெரியல.
’எங்கயோ ஒரு இடத்துல தன் பையன் நல்லா இருக்கான்’னு’ அவளது உள்மனம் எண்ணியது.தன்னப் பத்தி அவன் கவலப்படல. இருந்தாலும் அவன நல்லா பார்த்துக்கோ’கடவுளை தூக்கத்திலேயும் வேண்டிக்கொண்டாள் கண்ணாத்தா.
இதையெல்லாம் பார்த்துட்டு இருந்த கடவுள் தன்னை அறியாமல்,’அம்மா.அம்மாதான்’ என்று கத்திவிட்டார்..ஆனா அவர யாரும் கவனிச்சதா தெரியல.

Leave a comment
Upload