தொடர்கள்
அழகு
மெல்லிசை மருத்துவர்கள் - மாலா ஶ்ரீ

20250128233328798.jpeg

சென்னை தி.நகர் பக்கம் சென்று ரொம்ப நாளாகிடுச்சே என்று கடந்த 23-ம் தேதி (ஞாயிறு) மாலை தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலை வரை நகர்வலமாக கிளம்பினோம்.

வடக்கு உஸ்மான் சாலைக்குள் நுழைந்தால், அருகாமை தெருவில் இருந்து மெல்லிசையுடன் இனிமையான குரலில் பாடல்கள் வந்து, நம்மை தி.நகர் ராமகிருஷ்ணா பள்ளி வளாகத்துக்குள் இழுத்து சென்றன.

அங்கு ‘மெல்லிசை மருத்துவர்கள்’ என்ற பேனரில் பிரபல மருத்துவ நிபுணர்கள் சிலர் பாடி அசத்திக் கொண்டிருந்தனர். இவர்களுடன் 5-ம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமியும் நமக்கு தெரிந்த டாக்டருடன் அந்தக்கால எம்.எஸ்.விஸ்வநாதன் முதல் தற்போதைய ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான பிரபல பாடல்களை தனது அழகிய குரலில் பாடுவதைக் கேட்டு பிரமித்து போனோம்.

20250128233403478.jpeg

நிகழ்ச்சி முடிந்ததும் நமக்கு தெரிந்த டாக்டர் வி.வி.வரதராஜனுடன் அந்த பள்ளி சிறுமியும் வந்தமர்ந்தாள். “யார் சார், இந்த சிறுமி? இவ்வளவு அழகாக மெல்லிசை பாடல்களைப் பாடுகிறார்? இந்த சிறுமியின் முகத்தில் முதல் மேடை பயம் தெரியவில்லையே?” என்று கேட்டோம். அவர் கலகலவென சிரித்தபடி, “ இவள் என் பேத்தி தன்வி. பத்மா சேஷாத்ரி பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவி. இவள் ஐந்து வயதிலேயே மேடையேறி, எவ்வித பக்கவாத்தியம் இல்லாமல் ‘யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே’ பாடலை தனியே பாடினாள். சென்ற வருடம் பக்கவாத்தியஙகளோடு ஒரு முழுப் பாடலையும் பாடியுள்ளார். இப்போது டூயட் பாடல்களில் களமிறங்கி விட்டாள்!

என் அப்பா பிரபல குழந்தைகள் நல பலமானாலஜிஸ்ட் நிபுணர் டாக்டர் விவேகானந்தன், என் அம்மா பிரபல கண் மருத்துவர் ரம்யா, தாத்தா டாக்டர் வரதராஜன் மற்றும் பாட்டி மாலதியும் உறுதுணையாக இருக்கின்றனர். எதிர்காலத்தில், நான் சிறந்த கர்நாடக இசை கலைஞராக மட்டுமின்றி, புகழ்பெற்ற வழக்கறிஞராகவும் வருவதற்கு விரும்புகிறேன்!” என்று தன்வி மகிழ்ச்சியுடன் கூறினாள்.

நாம் டாக்டர் வரதராஜன் பக்கம் திரும்பி, “மெல்லிசை மருத்துவர்கள் இசைக்குழு உருவானது எப்படி?” எனக் கேட்டோம். அதற்கு அவர், “கொஞ்சம் விரிவாக சொல்லலாமா?” எனக் கேட்டுவிட்டு, “பொதுவாக மருத்துவர்களின் சந்தோஷமும் சோகமும், எங்களிடம் சிகிச்சை பெறும் நோயாளிகளின் முன்னேற்றத்தை பொறுத்தது. எங்களின் வாழ்க்கை, ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கை. அதை வாழ்ந்து பார்த்தவர்களுக்கு மட்டுமே, அதன் வலி, வேதனை தெரியும். எங்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில், கடந்த 20 ஆண்டு காலமாக ‘மெல்லிசை மருத்துவர்கள்’ இசைக்குழு இயங்கி வருகிறது.

இக்குழுவில் பிரபல குழந்தைகள் நல மருத்துவ நிபுணர்களான டாக்டர் வி.வி.வரதராசன், டாக்டர் சுரேஷ், டாக்டர் கணேஷ், ஸோனாலஜிஸ்ட் டாக்டர் மோகன்லஷ்மி, செயற்கை கருத்தரிப்பு மருத்துவர் ஜெயந்தி ஆகியோருடன் சமீபகாலமாக என் பேத்தி தன்வியும் பாடி வருகிறார். நாங்கள் அனைவரும் சங்கீதத்தை எங்கள் உயிர் மூச்சாக நினைத்து வாழ்கிறோம். இக்குழுவுக்கு முதலில் ‘டாக்டர்கள் மியூசியானோ’ என்று பெயரிட்டு, பிறகு ‘மெடிக்கல் மெலடிஸ்’ என்று பெயர் மாற்றினோம். கடந்த 10 ஆண்டுகளாக ‘மெல்லிசை மருத்துவர்கள்’ என்ற பெயரில் இயங்கி வருகிறோம்.

எனக்கு இசைமீது ஆர்வம் வந்ததற்கு என் பெற்றோரே காரணம். அவர்கள் கர்நாடக சங்கீதத்தில் ஆர்வம் கொண்டவர்கள். இதனால் என்னை சிறுவயதில் பல்வேறு கர்நாடக இசை கச்சேரிகளுக்கு அழைத்துச் சென்றனர். காஞ்சிபுரத்தில் நான் படித்தபோது, பள்ளிக்கூட பிரேயரில் இறைவணக்கம் பாடி பெயர் பெற்றேன். அதன்பின் மருத்துவப் படிப்பில் ஆழ்ந்தபிறகு, சங்கீதம் கேட்பதோடு சரி.

பிராக்டீஸில் ஈடுபட்ட பிறகு சாப்பிட, தூங்க நேரமில்லாமல் உழைத்தேன். எனது 50-வது வயதில், என் மாணவரும் சக குழந்தைகள் நல மருத்துவருமான டாக்டர் கணேஷ், என்னை மறுபடியும் பாடத் தூண்டினார்.

தற்போது ஒரு கச்சேரிக்கு ஒப்புக்கொண்டவுடன் 2 ஞாயிற்றுகிழமை ரிகர்சல், ஒரு ஞாயிறு கச்சேரி என்று ஒரு மாதம் ஓடிவிடும். நாங்கள் மருத்துவ துறையில் எவ்வளவு புகழும் விருதுகளும் பெற்றிருப்பினும், நாங்கள் கச்சேரிகளில் பாடி முடித்ததும், எங்களின் நண்பர்களும் உறவினர்களும் எழுப்பும் கரகோஷம் எங்களை இன்னும் குதூகலத்துடன் செயல்பட வைக்கிறது. ஒரு பாடலை ராகம், தாளம், ஸ்ருதி தப்பாமல் பாடுவது என்பது, ஒரு ஆழ்நிலை தியானத்துக்கு ஒப்பானது. இதன்மூலம் எங்களின் மனதில் தெளிவு கிடைக்கிறது.

பாரத் ஸ்கேன் நிறுவன துவக்க விழாவில் ஆரம்பித்த எங்களின் ‘மெல்லிசை மருத்துவர்கள்’ இசைக்குழுவின் பயணம், தற்போது ஐஎம்ஏ, ஐஏபி எனத் தொடர்ந்து, இன்று பல தர்ம ஸ்தாபனங்களுக்கு ‘ஃபண்ட் ரெசிஸிங்’ (Fund Raising) நிகழ்ச்சிகளுக்கும் பாடட வருகிறோம். எங்களின் ‘மெல்லிசை மருத்துவர்கள்’ இசைக்குழுவை வர்த்தக ரீதியாக செயல்படுவதற்கு விருப்பம் இல்லை. நாங்கள் (டாக்டர்கள்) பாடுவது, எங்களின் ஆத்ம திருப்திக்காக மட்டுமே. எங்களின் மருத்துவ தொழில் மூலமாக, எங்களுக்குத் தேவையான பணத்தை, எங்கள் குழுவில் உள்ள அனைவரும் சம்பாதிக்கிறோம்.

எனினும், எங்களுக்கு பக்கவாத்தியம் வாசிப்பவர்களுக்கு இதுவே வருமானம்.

எனவே, எங்களுக்கு தேவை - ஒரு நல்ல மனம் கொண்ட ஸ்பான்சர்கள் மட்டுமே. இதற்கு யாராவது, எந்த நிறுவனமாவது முன்வந்தால், எங்களின் இசைக்குழு வளர்ச்சிக்கு பேருதவியாக விளங்கும்!” என்று டாக்டர் வி.வி.வரதராஜன் நெகிழ்வுடன் கூறி நமக்கு விடை கொடுத்தார்.

முழு கச்சேரி கேட்க நேரம் இருந்தால் இங்கே சுட்டவும்...