
லீனா இப்போது தனக்கு போர் அடிக்கும் போதெல்லாம் ஓணான், பல்லி, அல்லது அரணை போன்ற ஜந்துவைப் பிடித்து அடித்துத் துவைத்து வீட்டு வாசலில் உலரப் போடுவதைத் தன் பழக்கமாக்கி கொண்டு விட்டது.
காலையில் வீட்டு வாசலில் கோலம் போடும் போது இந்த உலர்த்தப்பட்ட பிராணிகளை அப்புறப்படுத்துவது வைதேகிக்கு எரிச்சல் ஊட்டினாலும் அவள் காட்டிக்கொள்ளவில்லை.
இந்த சமயத்தில் ராம்கியின் தங்கை மாயாவும் அவள் கணவர் ரவியும் மும்பையில் இருந்து ராம்கி வீட்டுக்கு வந்து இருந்தனர்.நீலாங் கரையில்அரை கிரவுண்டு நிலம் விலை பேசியாச்சு.ரெஜிஸ்டர் பண்ணுவது தான் அவர்கள் வருகையின் பிரதான நோக்கம்.
அன்று காலை ரிஜிஸ்டர் ஆபீஸ் போக வீட்டு வாசல் படியை மாயாவும், ரவியும் மிதித்த போது லீனா விருட் என்று என்று குறுக்கே பாய சகுன நம்பிக்கை மிகுந்த ரவி
"மோசமான சகுனம். சனியன் புடிச்ச கருப்புப் பூனை குறுக்கே வந்து தொலைச்சுடுத்து. உருப்படாது.அப்புறம் நாளைக்கு போய்க்கலாம். புரோக்கர் கிட்ட சொல்லிக்கிறேன்." என்று அமர்ந்து விட்டார்.
மாயாவுக்கு லீனா மீது ஒரேடியாக கோபம்.
" ஏண்டா ராம்கி! பூனை எல்லாம் வளர்க்கிற! பூனை மயிர் உதிர்ந்தது என்றால் நமக்கெல்லாம் டிபி வர வாய்ப்பு இருக்கு தெரியுமா?" என்று சொல்லி "கொல் கொல்" என்று கொஞ்சம் இருமி வேறு காட்டினாள்.
"அதெல்லாம் ஒன்றும் இல்லை மாயா. நம்ம லீனாவுக்கு டிசிப்ளின் ஜாஸ்தி. வீட்டுக்குள்ள எல்லாம் வரமாட்டா." வைதேகி சொல்லி முடிப்பதற்குள்ளவே வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைந்த லீனா சோம்பலுடன் மெதுவாக வீட்டுப் பின்புறம் நோக்கி காட் வாக் (cat walk )செய்து சென்றது .
வைதேகியின் பொறுமையின் எல்லைச் சுவர் இப்போது பாம் வைத்தது போல் நொறுங்கியது.
சமையல் அறையில் இருந்து தண்ணீர் ரொம்பிய ஒரு பிளாஸ்டிக் வாளியை எடுத்து பின்புற கதவு வழியாக வெளியே ஒய்யாரமாக போய்க்கொண்டிருந்த
லீனா தலையில் அவ்வளவு தண்ணீரையும் கொட்டினாள்.
பிறந்த நாள் முதலே தலை குளித்தல் என்றால் என்ன என்பதையே அறியாத லீனா கண நேர அருவிக் குளியலில் திணறி என்ன செய்வது என்று தெரியாமல் தன் சக்தி எல்லாம் சேர்த்து ஒரு குதி குதித்துப் பாய்ந்தது.
நேராக பின்பக்கத்து கிணற்றில் விழுந்து "மிய்ய்ய்யாவ்" என்று பெரிய கூக்குரல் இட்டது.
வைதேகி பதைபதைத்து போய் "கிணத்தடிக்கு வாங்க லீனா கிணத்துக்குள்ள விழுந்துடுச்சு." என்று கத்த, ராம்கி,அவர் தங்கை மாயா,அவள் கணவர் ரவி எல்லாரும் கிணத்தடிக்கு ஓடி வந்தனர்.
லீனா தண்ணீரில் நீந்தி கிணற்றுக்குள் தண்ணீருக்கு மேல் இருந்த ஒரு கல்லில் ஜம் என்று அமர்ந்தது. பின் நிம்மதியாக "மியாவ்" என்றது.
மாயாவின் கணவர் ரவி
"ஐயையோ!பூனை கிணத்துல விழுந்துச்சா? செத்து கித்து வெச்சா நமக்கு ஏழு பரம்பரைக்கு பாவம் இருக்கும். பரிகாரம் பண்ணனும் என்றால் 22 கேரட் தங்கத்தில் ஒரு பூனை செய்து தானம் கொடுக்கணும்." என்றார்.
" முதல்ல இந்த லீனாவை காப்பாத்தப் பார்க்கலாம். ரவி உங்களுக்கு கிணத்துக்குள் இறங்க தெரியுமா? எனக்கு தெரியாது. " என்றார் ராம்கி.
ரவி அப்புறம் இந்த கதை முடியும் வரை வாயைத் திறக்கவே இல்லை!
ராம்கி ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் தாம்புக் கயிறை கட்டி ராட்டினத்தில் செலுத்தி கிணற்றில் இறக்கி லைஃப் போட் போல பூனை பக்கம் கொண்டு போய் "லீனா!பக்கேட்டில குதிம்மா!"என்றார்.
மீனா பக்கெட்டை உதைத்து, 'மியாவ்' என்று கத்தி தன் இஷ்டமின்மையைக் காட்டியது.
மீனாட்சி ஓடி வந்தாள்."ஐயையோ பூனையை கிணற்றில் தள்ளிட்டீங்களா?"
"சீச்சீ!அதுவா விழுந்துடுத்து. மீனாட்சி!உனக்கு யாரையாவது தெரியுமா? கிணத்துல இறங்குற மாதிரி. " என்றாள் வைதேகி.
மீனாட்சி யோசித்தாள். பின் "அம்மா! இந்தப் பின்பக்கத்து வீட்டுல ஒரு குடோன் இருக்குது. அதுக்கு ஒரு வாட்ச்மேன் உள்ள கீறாரு. நல்லா கிணத்து வேலை எல்லாம் செய்வாரு. அவர கூட்டியாறேன்."
சென்று கபாலியுடன் வந்தாள். ஒல்லியான, 50 வயசு மனிதன் . திடகாத்திரம். நல்ல குடியில் இருந்தான்.
ஒவ்வொரு கண்ணிலும் 500 மில்லி சரக்கு தளும்பித் தெரிந்தது.
200 ரூபாய் ஆகும் என்று சொல்லி கையில் தாம்பு கயிறுடன் அனா யாசமாக கிணற்றின் உள் சுவர் மேல் கால் வைத்து கீழே இறங்கி விட்டான் கபாலி.
லீனா கத்தக் கத்த அதை ஒரு கோணிக்குள் அள்ளி எடுத்துப் போட்டுக் கொண்டு சரசர என்று மேலே வந்து கோணியை கவிழ்த்து விட்டான்.
உடனே வெளியே பாய்ந்து தப்பித்தால் போதும் என்று ஓடி மறைந்தது லீனா.
200 ரூபாயை கபாலியிடம் நீட்டும் போது தான் கவனித்தார் ராம்கி. கபாலியின் வலது கை கட்டை விரலில் இருந்து லேசாக ரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது.
" என்ன ஆச்சுப்பா? " என்றார் ராம்கி.
"பூனை பிடிக்கிறப்போ கடிச்சிடுச்சு சார். "என்றான் கபாலி.
" அய்யய்யோ பூனை கடிச்சா . வயிற்று சுத்தி நிறைய ஊசி போடணுமே! இல்லாட்டி ராபிஸ் நோய் வந்து விடுமே." என்றாள் மாயா.
"அது நாய்கடிக்குத் தானே அம்மா" என்று வைதேகி மெதுவாக சொல்ல.
"இல்ல பூனையும் ராபிஸ் நோய் லிஸ்டில் உண்டு. இடுப்பு சுத்தி நிறைய ஊசி போடணும்." என்று ஆணித்தரமாக மாயா சொன்னதும்,
ராம்கி கபாலியிடம் கூட ஒரு 500 ரூபாய் கொடுத்து" ஆஸ்பத்திரிக்கு போப்பா" என்று அனுப்பி வைத்தார்.
அடுத்த ரெண்டு நாளுக்கு எல்லாமே நல்லா தான் போச்சு. லீனாவைத் தான் காணவே இல்லை. " நான் தான் தண்ணி ஊத்தி என் லீனாவை துரத்தி விட்டேன் " என்று வைதேகி கண்கலங்க, ராம்கி அவளை தேற்றினார். நிலத்தை ரிஜிஸ்டர் பண்ணிவிட்டு மாயாவும் அவள் கணவரும் மும்பை போய் சேர்ந்தார்கள்.
மூன்றாம் நாள் காலை 10 மணி இருக்கும். கபாலி, ராம்கி வீட்டுக்கு வந்தான். போதை கண்ணிலோ, நடையிலோ, தெரியவே இல்லை. கை கட்டை விரலில் கட்டு இருந்தது.
"சார் ஆஸ்பத்திரில டாக்டர் தடுப்பு ஊசி போடுவதற்கு முன்னால கடிச்ச பூனைய பத்து நாள் ஜாக்கிரதையா பார்த்துக்க சொன்னாரு. பூனை நல்லா இருந்தா எனக்கும் ஒன்னும் வராதாம். ஆனா பூனைக்கு ஏதாவது வியாதி வந்தால் எனக்கும் அது வருமாம்.பூனை எங் கே சார்.எனக்கு அந்தப் பூனை வேணும். " என்றான் கபாலி.
" அன்னைக்கு ஓடிப்போன பூனை தான் பா. இப்போ வரைக்கும் காணோம்."
" இப்படி சொன்னா எப்படி சார்? க டிச்ச பூனை உன் பூனை தானே சார்? பூனை இல்லாட்டி எனக்கு உடனே ஊசி போடணுமே சார். இல்லாட்டி என் உயிருக்கு ஆபத்து. ஆனா, இப்போ ஊசி போடும்போது கூடக் கொஞ்சம் செலவாகும் னு சொல்லுறாரு டாக்டர். ஸ்ட்ராங் மருந்தா ஏத்தணுமாம். "
"பூனை கடிக்கல்லாம் ராபிஸ் வரதுக்கு சான்ஸ் ரொம்ப கம்மிப் பா! பூனைக்கு ஒண்ணும் ஆகாதுப் பா கவலைப்படாத."
"பூனை உன்னக் கடிச்சிருந்தா இப்படி பேசுவியா சார்? "
"சரி சரி. எவ்வளவு பணம் சொல்லு"
" பத்தாயிரம் ரூபாய் ஆகும் சார்"
"அதிகம்பா"
"அப்போ பூனையை குடு சார்..."
ஒரு நிமிஷம் கழிச்சு 8000 ரூபாய் வாங்கிக்கொண்டு சந்தோஷமாகப் போனான் கபாலி.
ராம்கி மனைவியிடம் சொன்னார். காய்கறி தோட்டத்துக்கு ஏராளமாக செலவாயிடுத்து. எல்லாரையும் போல நாமளும் கடையில காய்கறி வாங்கிக்கலாம். அது போதும். உனக்கு லீனா இல்லை. எனக்கு இனிமேல் மசால் வடை இல்லை. சரியாப் போச்சா? " என்றார்.
சோகத்துடன் ஆமோதித்தாள் வைதேகி.
ஒரு மாதம் கழிந்து விட்டது. லீனா எங்கே போனது என்று தெரியாமல் வைதேகிக்கு ரொம்ப வருத்தம் தான்.
அன்று காலையில் மீனாட்சி வைதேகியி டம் சொன்னாள்.
"அம்மா நம்ம ரோட்டு கடைசில கட்டின புது வீட்டுக்கு நேற்றிலிருந்து வேலைக்கு போறேன். அந்த வூட்டு அம்மா தன் பொண்ணு கிட்ட "நம்ம செல்லப் பூனை லட்சுமி நிக்குது பாரு. அதுக்கு பசிக்குது போல இருக்கு. கொஞ்சம் பால் வை." னு சொன்னாங்க. திரும்பிப் பார்த்தேன்மா. அங்க நின்னது லஷ்மியும் இல்ல சரஸ்வதியும் இல்லை.
நெத்தில வெள்ளை பட்டையுடன் நிக்குதும்மா நம்ப கருப்பு லீனா.!"
என்றாள்.
வைதேகி கொஞ்சம் சந்தோஷத்துடன், வறட்சியாகப் புன்னகைத்தாள்.
(முற்றும் )

Leave a comment
Upload