தொடர்கள்
தொடர்கள்
எழுதிக் கிழித்தவை 10  கார் செல்ல உதவிய இட்லி - மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.நடராஜன்

2025020107345973.jpg

ஒரு பொதுத்தேர்தலில் வாக்குரிமை இல்லாதவன் தலைமை வாக்குப்பதிவு அதிகாரியாக இருந்து, ஒரு வாக்குக்சாவடியில் தேர்தல் நடத்தினான் என்றால் அது வியப்புக்குரியது. அவனைப்பற்றி பத்திரிகையாளர்களுக்கு தெரிந்திருந்தால் அதையே ஒரு வினோத செய்தியாக்கி இருப்பார்கள். காரணம் அவனுக்கு அப்போது வயது 20. பட்டதாரி டியூட்டராக ஒரு கல்லூரியில் வேலை பார்த்து வந்தான். அப்போது கல்லூரி ஆசிரியர்களை வாக்குச்சாவடியின் தலைமைப் பொறுப்பிலும், பள்ளி ஆசிரியர்களை உதவியாளர்களாகவும் நியமித்தது அரசாங்கம். அப்போதைய வாக்கு வயது 21. அவன் அந்த வயதை எட்டவில்லை. எனவே அவனுக்கு அப்போது வாக்குரிமை இல்லை. ஆனால் பத்து வருடங்கள் கழித்து அவன் ஒரு பத்திரிக்கையாளர் ஆனான். அதையடுத்து மூன்று வருடங்களில் தேசத்தையே அசைத்துப் பார்த்த ஒரு பொதுத் தேர்தலில், ஒரு மாவட்டத்தின் 21 தொகுதிகளை சுற்றிச்சுற்றி வந்தான், தகவல் திரட்டி செய்திகள் எழுதுவதற்காக.

டெல்லியில் மொராஜ்ஜி தேசாயின் ஆட்சி கவிழ்ந்த பிறகு 1980இல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. நெருக்கடி நிலையின்போது கெட்டபெயர் வாங்கிய இந்திராகாந்தி தேர்தலில் நின்றார். அவரது தேர்தல் பிரசாரத்தின் முக்கிய வாசகம்: “She should between order and chaos she wants to restore order.” அவர் நாடு முழுவதும் சூறாவளிப் பயணம் செய்தார்.

தென்னாற்காடு மாவட்ட ஹிண்டு நிருபராக இருந்த அவன் இந்திராகாந்தியின் தேர்தல் பிரசாரத்தை திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் ஆகிய ஊர்களில் ‘கவர்’ செய்தான். இதற்காக அவன் அசுர வேகத்தில் சென்ற உளவுத்துறை வாகனத்தில் அந்த அதிகாரிகளுடன் பயணம் செய்தான். இப்போது போன்ற நல்ல சாலைகள் அப்போது இல்லை. எந்த ஊருக்கும் நேரடித் தொலைபேசி வசதியில்லை. கேமராக்கள் டப்பா வகை. பிலிம் நெகட்டிவ்களை கழுவி பிரிண்ட் போட வேண்டும். புகைப்படங்களை சென்னைக்கு உடனே அனுப்புவது இயலாத காரியம்.

இந்திராகாந்திக்கு கடலூரில் ஒரு காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் மதிய விருந்து அளிக்கப்பட்டது. அப்போதைய மாநில காங்கிரஸ் தலைவர் இளையபெருமாள். அவர் அவனுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழக செனட்டில் சக உறுப்பினராக இருந்தவர். எனவே இருவருக்கும் நல்ல பழக்கம் இருந்தது. அவர் அவனை இந்திராகாந்திக்கு ‘மாவட்டத்தின் ஹிண்டு நிருபர்’ என்று அறிமுகப்படுத்தினார். அதைக் கேட்டவுடன் இந்திராகாந்தி, ‘The Hindu is hostile to us’ என்றார். அவன் பேசவில்லை, இளையபெருமாள் ஏதோ சொல்லி சமாளித்தார். மதிய உணவின் போது, அவனும் இளையபெருமாளும், இந்திராகாந்தியின் இடதுபுறமும், வலதுபுறமுமாக அமர்ந்து கொண்டு விருந்தில் கலந்து கொண்டார்கள். அப்போது இந்திராகாந்தி ‘அந்தத் தேர்தலில் தங்கள் கட்சியின் வாய்ப்பு எப்படி இருக்கும்?’ என்று அவனிடம் கேட்டார். ‘சாதகம்தான்’ என்றான் அவன். அப்படியே ஆயிற்று.

தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக 21 தொகுதிகளில் யார் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை கணிக்க வேண்டும், அதற்கான காரணங்களை எழுத வேண்டும். மொத்தமுள்ள 21தொகுதிகளில் அவன் போட்ட கணக்கு அஇஅதிமுக கூட்டணி பதினான்கு, திமுக கூட்டணி ஏழு. ஒரு தொகுதியில் கடைசி நேரத்தில் வேட்பாளர் மாற்றப்பட்டதால் தேர்தல் முடிவுகள் 13 + 8 என்றாகியது.

பொதுவாக தேர்தல் தினத்தில் வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல, நிருபர்களுக்கு கலெக்டர் ‘பாஸ்’ வழங்குவது வழக்கம். அப்போதைய தென்னாற்காடு மாவட்ட கலெக்டர் என்.ராஜகோபலன், அவனைச் சிறுவனாக இருந்தபோதே அறிந்திருந்தும், அவனுக்கு வாக்குசாவடிக்குச் சென்றுவர பாஸ் தரவில்லை. ‘உன் சாமர்த்தியபடி நடந்துகொள்’ என்று சொல்லிவிட்டார்.

வாக்குப்பதிவு தினத்தன்று அவன், நெய்வேலியில் ஒரு வாடகை காரை அமர்த்திக் கொண்டான். பளபளக்கும் ஷூ, பளீரென்ற உடை, கழுத்தில் டை, கையில் கனமான தோல் பை என்று உளுந்தூர்பேட்டையில் ஒரு வாக்குச்சாவடியின் முன்னால் காரை நிறுத்தி இறங்கினான். அவனைப் பார்த்த கான்ஸ்டபிள் சல்யூட் அடித்தார், தேர்தல் அதிகாரிகளில் ஒருவர் என்று நினைத்து. வாக்குப்பதிவு செய்து கொண்டிருந்தவர்களும் அவனை அப்படித்தான் நினைத்தார்கள். அவன் வெகு தோரணையாக, ‘எல்லாம் எப்படி இருக்கிறது?’ என்று கேட்க, அவர்கள் ‘வாக்காளர் பட்டியலில் குளறுபடி’ என்றார்கள். அது வாக்காளர் அட்டை அறிமுகமாகாத காலம்.

அடுத்த ஊரில் உள்ள வாக்குச் சாவடிக்குச் சென்றான். அங்கும், அதே தோரணையில் கேள்விகள் கேட்டு சில தகவல்களைத் திரட்டி, கடலூருக்கு சுமார் மாலை நான்கு மணிக்கு வந்தான்.

கள்ளக்குறிச்சியில் இருந்து திரும்பி வரும்போது, ஒரு சாலை சந்திப்பில் போலீஸ்காரர்கள் அவன் வாகனத்தை நிறுத்தி விபரங்கள் கேட்டார்கள். அவன் தன்னை நிருபர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். ‘காரில் ‘PRESS’ என்ற வாசகம் இருந்தால் உங்கள் காரை நாங்கள் நிறுத்தியிருக்க மாட்டோம்’ என்றார்கள். அந்த ஊர் வழியாகச் சென்றபோது அவன் ஒரு பெட்டிக்கடையும், சிறிய ஓட்டலும் இருக்கும் இடத்தில் காரை நிறுத்தினான். பெட்டிக்கடையில் தினமணி, INDIAN EXPRESS வால் போஸ்டர் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தான். அந்தக் கடைக்காரரிடம் வால் போஸ்டரை தரச்சொல்லி கேட்டான்.

‘எல்லோரும் பேப்பர் தானே கேட்பார்கள்? இவன் என்ன வால் போஸ்டரை கேட்கிறான்’ என்று கடைகாரர் ஆச்சர்யப்பட்டார். வால் போஸ்டரை அவனிடம் கொடுத்தார். அவன் INDIAN EXPRESS என்ற வார்த்தைகளின் ‘PRESS’ என்ற எழுத்துக்களை மட்டும் கத்திரித்து எடுத்துக் கொண்டான்.

அதை காரில் ஒட்டுவதற்காக பசை தேவைப்பட்டது. அவன் சமயோசிதமாக அந்த ஓட்டல்காரரிடம் ‘ஒரு இட்லி கொடுங்கள், பணம் தருகிறேன்’ என்றான். ஒற்றை இட்லி கேட்ட அவனை ஓட்டல்காரர் ஏற இறங்கப் பார்த்தார். அந்தப் பார்வையில் ‘ஏன்?’ என்ற கேள்வி வெளிப்பட்டது. அவன் அந்த துண்டுக் காகிதத்தை காரில் ஒட்ட வேண்டும் அதற்காக என்றான். பாதி இட்லி கொடுத்தார். அவன் அதை வைத்து ‘PRESS’ என்ற வார்த்தையை காரில் ஒட்டிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தான். வழியில் யாரும் அவனை தடுக்கவில்லை.

நேரடி தொலைபேசி இணைப்பு இல்லாத அந்தக் காலத்தில் நிருபர்களைப் போலவே கலெக்டரும் தகவல்களைப் பெறுவதற்கு தவித்தார். கள்ளக்குறிச்சியில் தேர்தல் அதிகாரியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதற்காகக் கவலைப்பட்டார். கலெக்டரிடம் அவன் சொன்னான், ‘அங்கும் தேர்தல் அமைதியாகவே நடந்து கொண்டிருக்கிறது. மூன்று மணி வரை பதிவான வாக்குகள் 43 சதவிகிதம்’. ‘இது எப்படி உனக்குத் தெரியும்?’ என்று கேட்டார். அவன் நடந்ததைச் சொல்லிவிட்டான். ‘சரி போ, ஏழு மணிக்கு வா, எல்லா தொகுதிகள் பற்றியும் தகவல் தருகிறேன்’ என்றார்.

எல்லா நிருபர்களும் கலெக்டர் அலுவலகத்தில் கூடினார்கள். கலெக்டர் தகவல்களைத் தந்தார். அந்த நிருபர்களில் அவன் ஒருவன் மட்டுமே சில ஊர்களில் வாக்குசாவடிக்கு சென்று நேரடியாக நிலைமையை அறிந்து கொண்டவன். சில இடங்களில் நிருபர் என்று சொல்லிக் கொண்டால் தகவல்கள் கிடைக்கும். சில இடங்களில் அப்படி சொல்லாவிட்டால் தகவல்கள் கிடைக்கும். எல்லாம் சந்தர்ப்ப சூழ்நிலையைப் பொறுத்தது.

எங்கே, எப்போது தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது ஒரு நிருபருக்கு தெரிந்திருக்க வேண்டும். அதுதான் தொழிலை சிறப்பாக செய்யும் வழி.