தொடர்கள்
ஆன்மீகம்
கும்பகோணமும் கும்பமேளாவும் - கும்பமேளாவின் பலன்கள் தமிழகத்திலேயே.... பரணிதரன்

20250201072920381.jpg

அந்ய ஷேத்ரே க்ருதம் பாபம் புண்ய ஷேத்ரே விநச்யதி

புண்ய ஷேத்ரே க்ருதம்பாபம் வாராணஸ்யாம் விநச்யதி

வாரணஸ்யம் க்ருதம்பாபம் கும்பகோணே விநச்யதி - கும்பகோண மகாத்மியம்

சாமான்ய ஷேத்திரத்தில் செய்யும் பாவங்கள் எல்லாம் புண்ணிய ஷேத்திரங்களுக்குச் செல்லும் போது விலகுகின்றன.

புண்ணிய ஷேத்திரத்தில் செய்த பாவங்கள் எல்லாம் காசிக்குச் சென்று கங்கா ஸ்நானம் செய்வதால் விலகுகின்றன.

காசியில் செய்த பாவங்கள் எல்லாம் கும்பகோணத்துக்குச் சென்று மகாமகஸ்நானம் செய்வதால் விலகுகின்றன.

கும்பகோணத்தில் செய்கின்ற பாவங்கள் மகாமகஸ்நானம் செய்வதால் கும்பகோணத்திலேயே விலகுகின்றன.

மேலே உள்ள ஸமஸ்கிருத ஸ்லோகத்திற்கு ஏற்றார் போல, மஹாமஹ குளத்தில் கூடுகின்ற நதிகளின் பெயர்கள் : கங்கை (ஹரித்வார் கும்பமேளாவின் நதி), யமுனை, ஸரஸ்வதி (இவை மூன்றும் தான் பிரயாக்ராஜ் கும்பமேளாவின் பிரதான நதிகள்), கோதாவரி(நாஷிக் கும்பமேளாவின் நதி), நர்மதை, காவேரி, ஸரயு, ஷீர நதி என்று அழைக்கப்படுகின்ற பாலாறு, பயோஷ்னி என்று அழைக்கப்படுகின்ற தபதி, கன்னி நதி (குமரி ஆறு - பழைய சங்க இலக்கியங்களில் கூறப்பட்ட ஆறு).

பாவங்களை போக்கக்கூடிய பாரதத்தின் புண்ணிய நதிகள் பல கும்பகோணத்தில் உள்ள மகாமக குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய மாமங்கத்தில் சங்கமிக்கின்றன. பொதுவாக கூடல் அல்லது சங்கம் என்ற சொல் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் சேருவதை குறிக்கக் கூடியது. அதனால் தான் வடக்கில் கூட சங்கம், சங்கமேஸ்வரர் போன்ற சொற்கள் கும்பமேளாவிற்கும் அங்கு இருக்கக்கூடிய சில கடவுளர்க்கும் பெயராக உள்ளது.

20250201004150377.png

புராண இதிகாசங்களை விலக்கிவிட்டு, அறிவியல் பூர்வமாக பார்த்தோம் என்றால், வடக்கில் நடக்கும் கும்பமேளாவிற்கும் தெற்கில் நடக்கும் மாமாங்க திருவிழாவிற்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை பார்க்கலாம். இந்த இரண்டு விழாக்களுமே குரு பகவான் என்று நாம் கூறுகின்ற வியாழன் கிரகத்தை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது. பொதுவாக மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்திலோ அல்லது கும்ப மாதம் என்று அழைக்கப்படும் மாசி மாதத்திலோ நடைபெறும். வியாழன் கிரகம் மட்டுமல்லாமல் சூரியன் மற்றும் சந்திரனின் இருக்கையை வைத்தும் இந்த விழா அனுசரிக்கப்படுகிறது.

இதேபோல சித்திரை மற்றும் வைகாசியில், வடக்கே உஜ்ஜெயின் மற்றும் ஹரித்வாரில் நடக்கக்கூடிய சங்கங்களைப் போல, தமிழ்நாட்டிலும் ஒரு காலத்தில் இந்திர விழா என்று ஆற்றில் நீராடும் விழாவாக 28 நாட்களுக்கு கொண்டாடப்பட்டது. இவை அனைத்திற்கும் நமது இலக்கியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையில் நிறைய சான்றுகள் உள்ளன.

2025020100420740.png20250201004221955.png

பொதுவாக வடக்கே நடக்கும் கும்ப மேளாவாக இருக்கட்டும், தெற்கே நடக்கும் மாமங்கமாக இருக்கட்டும், இவை இரண்டிற்கும் தொடர்பான மற்றொரு விஷயம், அமிர்தம் என்று நாம் அழைக்கக்கூடிய சாகா வரத்தை கொடுக்கக்கூடிய ஒரு பொருள். கருட பகவான் அமுத கலசத்தை எடுத்துக் கொண்டு சென்ற பொழுது சிதறிய துளிகள் விழுந்து இடங்கள்தான் வடக்கே இருக்கக்கூடிய மேளா நடக்கக்கூடிய நான்கு இடங்கள். அதேபோல பிரம்மதேவருக்காக சிவபெருமான் வேடன் உருவம் தரித்து அமுத கலசத்தை உடைத்ததால் உருவானது நம்முடைய மாமாங்க சங்கம். இந்த குறிப்பிட்ட நாட்களில் வானத்திலிருந்து அமுதம் விழுவதாக இந்துக்கள் நம்புகிறார்கள். அந்த அமுதம் ஆறுகளில் விழுந்து, அவற்றில் நாம் குளிக்கும் பொழுது நமக்கு அதனுடைய சக்தி கிடைப்பதாக நம்புகிறார்கள். காஸ்மிக் ரேஸ் (Cosmic Rays) என்று நாம் இன்று அறிவியலில் கூறக்கூடிய தெய்வீக ஆற்றலை தான் அவர்கள் அமுதமாக நம்புகிறார்கள்.

கீழே உள்ள கல்வெட்டு படத்தில் கும்பகோணத்தில் உள்ள தீர்த்தங்களின் பெயர்களும், அங்கு அமைந்திருக்கும் சிவபெருமானின் பெயர்களும் வடமொழியில் உள்ளது. இது விஜயநகர பேரரசு காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் எண்ணுகிறார்கள். மகாமக தடாகஸ்த தீர்த்தானி, அதாவது மகாமக குளத்தில் உள்ள தீர்த்தங்கள் என்ற பொருளில் இந்த கல்வெட்டு அழைத்திருக்கிறார்கள்.

20250201004403699.png

இந்த கல்வெட்டில் இடம் பெற்றுள்ள தீர்த்தங்களின் பெயர்கள் கீழே உள்ளன :

1. நவகன்யா, 2. இந்திர, 3. அக்னி, 4. யம, 5.நிருதி, 6.வருணதேவ, 7.வாயு, 8.பிரம்ம, 9.குபேர, 10.ஈசான, 11.நடுவில் 66 என்ற எண்ணிக்கையில் உள்ள தீர்த்தம், 12.கங்கா, 14.நர்மதா, 15.ஸரஸ்வதீ, 16.கோதாவரி, 17.காவேரி, 18.கன்யா, 19.க்ஷீர நதி, 20.ஸரயூ நதி

சைவ இலக்கியமான சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் மகாமகம் பற்றிய குறிப்புகள் உள்ளன. "பூமருவும் கங்கை முதல் புனிதமாம் பெருந்தீர்த்தம் மாமகத்தான் ஆடுதற்கு வந்து வழி படுங்கோயில்" என்று குறிப்பிட்டுள்ளார்.

1. பிரமதீர்த்தேஸ்வரர் 2. முகுந்தேஸ்வரர் 3. தனேஸ்வரர் 4. விருஷபேஸ்வரர் 5. பாணேஸ்வரர்

6. கோணேஸ்வரர் 7. பக்திகேஸ்வரர் 8. பைரவேஸ்வரர் 9. அகத்தீஸ்வரர் 10. வியாசேஸ்வரர்

11. உமா பாகேஸ்வரர் 12. நிருதீஸ்வரர் 13. பிரம்மேஸ்வரர் 14. கங்காதரேஸ்வரர்

15. முக்தி தீர்த்தேஸ்வரர் 16. க்ஷேத்திர பாலேஸ்வரர் ஆகிய 16 ஈஸ்வர முகூர்த்தங்கள் மகாமக குளக்கரையில் உள்ளனர்.

20250201004422857.png20250201004452228.png

இதேபோல வடக்கே உள்ள ஒவ்வொரு தலத்திலும், சிவபெருமானின் ஒவ்வொரு முகூர்த்தம் உள்ளது. அதாவது உஜ்ஜெய்னில் மஹாகாலேஸ்வரர், நாஷிக்கில் சங்கமேஸ்வரர், ஹரித்வாரில் தக்ஷேஸ்வரர், திரிவேணி சங்கமமாகிய பிரயாகை என்று அழைக்கப்படுகின்ற பிரயாக் ராஜில் மனகாமேஸ்வரர் என்ற திருநாமங்களுடன் இருக்கிறார்.

இவ்வாறு ஆதிகாலம் முதலே பாரதத்தில் நதிக்கரை நாகரிகங்களில் வாழ்த்த மக்கள் குறிப்பிட்ட நாட்களில் நதிகளில் நீராடி தெய்வங்களை வணங்கினார்கள், வணங்கி கொண்டு இருக்கிறார்கள், வணங்குவார்கள் என்பதை நமது இதிகாச புராணங்களினாலும், இலக்கியங்களாலும் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.

தமிழ்நாட்டில் இன்னும் சில பகுதிகளில் கூட சங்கங்கள் உள்ளன. உதாரணமாக காவிரியும் கொள்ளிடமும் சேருகின்ற ஸ்ரீரங்கம் (சமஸ்கிருதத்தில் ரங்கம் என்றால் தமிழில் கூடல் என்று பொருள்), வைகையும் கிரதமாலாவும் சேருகின்ற மதுரை (கூடல்), தண்பொருநை (தாமிரபரணி), சிற்றாறு, கோதண்ட ராம ஆறு சேருகின்ற முக்கூடல் (திருநெல்வேலி), பாலாறு, வேகவதி மற்றும் செய்யாறு சேருகின்ற திருமுக்கூடல் (காஞ்சிபுரம்), திருத்துருத்தி ( குத்தாலம்), திருப்பூந்துருத்தி (திருவையாறு அருகில் உள்ளது) ஆகியவை பழந்தமிழ் மக்களால் கொண்டாடப்பட்ட தமிழ்நாட்டில் உள்ள சில சங்கங்களாகும்.

வடக்கே கும்பமேளாவிற்கு செல்ல முடியாத அன்பர்கள், மகாமக கூட்ட நெரிசலில் சென்று நீராட முடியாத அன்பர்கள், மேலே உள்ள சங்கங்களில் நீராடி கர்ம வினைகளை போக்கிக் கொள்ளலாம் என்று நமது இதிகாச புராணங்கள் நமக்கு எடுத்துரைக்கிறது. அதேபோல துலா மாதம் என்று அழைக்கப்படுகின்ற ஐப்பசி மாதத்திலும், காவிரியில் நீராடும் பொழுது மற்ற நதிகளில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் இன்று காவிரி மஹாத்மியம் கூறுகிறது. இதற்கு துலா காவிரி ஸ்நானம் என்றே பெயர். ஒருவேளை ஐப்பசி மாதத்தில் நீராட முடியாவிட்டால், கார்த்திகை 1 அன்று முடவனுக்கு மோக்ஷம் என்று அழைக்கப்படுகின்ற தினத்தில் சென்று நீராடினால் ஐப்பசி மாதம் முழுவதும் நீராடிய பலன் கிட்டும் என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன.