தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 107 - பரணீதரன்

உவமை அணியை நாம் பார்த்து விட்டோம். இப்போது அதைப் போலவே உள்ள எடுத்துக்காட்டு உவமை அணியை பார்ப்போம் என்று ஆரம்பித்தார் பரணிதரன்.

உவமானம் ஒரு வாக்கியமாகவும் உவமேயம் ஒரு வாக்கியமாகவும் வர, நடுவில் ‘போல’ என்ற உவம உருபு மறைந்து வந்தால் அது எடுத்துக்காட்டு உவமை அணி என்பது பெரியோர் வாக்கு.

எடுத்துக்காட்டு

20250128204524133.png

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு - திருக்குறள்

உவமானம் - வெள்ளத்தின் (நீர்) அளவே வளரும் மலர் (தாமரை).

உவமேயம்‌ - மாந்தர்கள் (மனிதர்கள்) உள்ளத்தின் தன்மையை பொருத்து உயர்வு

உவம உருபு - மறைந்து வந்துள்ளது.

புறள்(ந்)தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும். - திருக்குறள்

உவமானம் - மனிதனின் உடம்பு (புறம்) நீரில் குளிப்பதால் தூய்மை பெறுகிறது.

உவமேயம் - மனிதனின் மனம் (அகம்) வாய்மையால் (உண்மையால் - உண்மையை மட்டும் பேசுவதால்) தூய்மை பெறுகிறது.

உவம உருபு - மறைந்து வந்துள்ளது.

20250128204550733.png20250128204605782.png

அடைமல்கு குளவியொடு கமழும் சாரல்

மறப்புலி உடலின் மான்கணம் உளவோ

மருவின் விசும்பில் மாதிரத் தீண்டிய

இருளும் உண்டோ ஞாயிறு சினவின்

அச்சொடு தாக்கப் பாருற்றியங்கிய

பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய

அரிமணல் ஞெமரக் கற்பக நடக்கும்

பெரும்பகட்டுக்குத் துறையும் உண்டோ

பொருநரும் உளரோ நீ களம் புகினே - புறநானூறு

உவமானம் - மலைச் சாரலில் இருக்கும் புலி வேட்டையாட கிளம்பினால் அதை எதிர்ப்பதற்கு மான் கூட்டங்களால் முடியுமோ ? ஞாயிறு ஆகிய சூரியன் எழுந்து வந்தால் அதை தடுக்க இருளால் முடியுமோ ? சிறு மணல் துகள்கள் மற்றும் பெரிய கற்கள் பிளக்க வண்டியில் பூட்டப்பட்ட காளைகள் போக முடியாத வழியும் உண்டோ ?

உவமேயம் - அதியமான் நெடுமான் அஞ்சியாகிய நீ போர்க்களம் புகுந்தால் உன்னை எதிர்க்க யாராலும் முடியுமோ ?

உவம உருபு - மறைந்து வந்துள்ளது.

20250128204627490.png20250128204641816.png20250128204656333.png

இனமயில் அகவும் மரம்பயில் கானத்து

நரைமுக ஊகம் பார்ப்பொடு பனிப்ப

படுமழை பொழிந்த சாரல் அவர்நாட்டுக்

குன்றம் நோக்கினென் தோழி

பண்டை யற்றோ கண்டிசின் நுதலே - குறுந்தொகை

மயில் தன் துணையுடன் மகிழ்ந்து நடனம் ஆடுவதற்குக் காரணமான மழை, குட்டியுடன் இருக்கும் குரங்கினைக் குளிரால் துன்புறச் செய்யும். தலைவன் தலைவியின் களவுக்கால வாழ்க்கை இன்பத்தைத் தரும் என்றாலும் அதை விடப் பாதுகாப்பு நிறைந்தது கற்பு வாழ்க்கை என்பதால், குரங்கு தன் குட்டியுடன் வாழ்கின்ற குடும்ப வாழ்க்கை சுட்டிக் கூறப்பட்டது. இதில்,

உவமானம் - மழை, மயிலுக்கு (களவொழுக்கம்) மகிழ்ச்சியை தரும், குரங்கிற்கும் அதன் குட்டிக்கும் (கற்பொழுக்கம்) துன்பத்தைக் கொடுக்கும்.

உவமேயம் - தலைவனுக்கு மகிழ்ச்சியை தரும், தலைவிக்கு துன்பத்தை கொடுக்கும். அதாவது களவொழுக்கம் இன்பத் தருவது போல இருந்தாலும், கற்பொழுக்கத்தை போல பாதுகாப்பு தரும் ஒரு உயர்நிலை இல்லை.

உவம உருபு - மறைந்து வந்துள்ளது.

வடமொழியில் எடுத்துக்காட்டு உவமை அணியை, லுப்தோபமா (லுப்த உபமா) என்று அழைக்கிறார்கள்.

20250128204713434.png

புஷ்பேஷு ஜாதி புருஷேஷு விஷ்ணு |

நாரீஷு ரம்பா நகரேஷு காஞ்சீ || - காளிதாஸர்

உவமானம் - பூக்களில் சிறந்தது பாரிஜாதப்பூ அல்லது மல்லிகைப்பூ, ஆண்களில் சிறந்தவர் விஷ்ணு, பெண்களின் சிறந்தவள் ரம்பா (அரம்பை)

உவமேயம் - நகரங்களில் சிறந்தது காஞ்சிபுரம்

உவம உருபு - மறைந்து வந்துள்ளது

உதயே ஸவிதா ரக்த: ரக்தஶ்சாஸ்தமயே ததா ।

ஸம்பத்தௌ ச விபத்தௌ ச மஹதாமேகரூபதாம் ॥ - சமஸ்கிருத சுபாஷிதம் (பொன்மொழிகள்)

உவமானம் - உதிக்கும் பொழுது சூரியன் சிவந்த நிறத்தில் உள்ளது. அஸ்தமிக்கும் பொழுதும் சிவந்த நிறத்திலேயே உள்ளது.

உவமேயம் - மகத்கள் என்று கூறப்படும் மகான்கள் சந்தோஷத்திலும் துக்கத்திலும் நிலை மாறாமல் அதை ஒன்று போலவே பார்க்கிறார்கள்

உவம உருபு - மறைந்து வந்துள்ளது

அடுத்த வாரம் உவமை மற்றும் எடுத்துக்காட்டு உவமையைப் போல உள்ள உருவக அணியை பார்ப்போம் என்று கூறி விடை பெற்றார் பரணிதரன்.