
தொடரும் பயணம் - சிறுகதை - பா.அய்யாசாமி
நகரப்பூங்கா, மாலை சாய்ந்த நேரம், அமைதியாக அமர்ந்தபடி வயதில் பெரியவர்கள் கலந்து பேசிக்கொண்டியிருக்க, சுந்தர் மட்டும் யாருக்காகவோ காத்தியிருந்தார் அவரின் பார்வை பூங்காவின் வாயிற்கதவை நோக்கியே இருந்தது.
திருச்சியில் வங்கி ஒன்றில் அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற சுந்தர் நீண்ட விடுமுறையில் சென்னைக்கு வந்தியிருக்கிறார். இன்று சங்கரி வருவாளா ? நேற்று அவளிடம் நான் அப்படி கேட்டியிருக்ககூடாது. கேட்டது தவறு என்றும், மனத்தில் பட்டதை சொன்னதும் சரிதான், அதை அவள் தவறாக நினைத்திருப்பாளோ என்ற எண்ணங்கள் கல் விழுந்த குளம்போல் சுந்தரின் மனம் சுழன்று ஓடியது.
இரவு மணி ஏழானது,பூங்கா 7.30 மணிக்கு அடைக்கப்பட்டு விடும், வருகையை எதிர்பார்த்து ஏமாற்றத்துடன் எழுந்து நடந்து ஊஞ்சல் அருகே வந்ததும், சங்கரியை சந்தித்த அந்த தினங்கள் சுந்தருக்கு நினைவில் வர, பூங்காவில் இருந்த ஊஞ்சலில் வந்தமர்ந்தார்
அவளுடன் சந்திப்பு நடந்து பத்து நாட்கள் இருக்கும்,அன்று வழக்கம் போல் பூங்காவிற்கு வந்தபோது, நிலை தடுமாறி விழுந்து விட, ஊஞ்சலில் அமர்ந்திருந்தவள், கை கொடுத்து அங்குள்ள பென்சு ஒன்றில் அமர வைத்து, குடிக்க தண்ணீர் கொடுத்து சுந்தரை ஆசுவாசப்படுத்தினாள்.
என்ன செய்யுது ? என்ற அந்த கனிவான வார்த்தையை கேட்ட சுந்தரின் மனம் சிறகடிக்க ஆரம்பித்தது, நமக்காக கவலைபடும் ஒருவரைக் கண்டதும் எத்தனை தெம்பு வரும், அத்தனை ஆனந்தமாக இருந்தது மனதிற்கு.
ஒன்றுமில்லை, அங்கியிருந்த கல்லை நான் கவனிக்கலை என்ற என்னை,
'கவனிக்கனும்' என்று அழுத்தி அவள் உரிமையுடன் கூறியதும் மனதிற்கு ஏனோ இதமாக இருந்தது.
அன்றைய பொழுது கழியவே, அதே நினைப்போடு வீட்டிற்குப் சென்று,மறுநாள் மாலை நேரத்திற்காக அன்றைய நள்ளிரவு முதலே காத்தியிருந்து சென்றபோது பூங்காவில் நான் அமர்ந்தியிருந்த இருக்கையின் மற்றொரு ஓரத்தில் வந்தமர்ந்தாள்
எப்படி இருக்கீங்க ? என்ற வார்த்தைகள் மட்டும் பரிமாறினாலும், நிறைய நாட்கள் பழகி பரிச்சயமான மாதிரி இருந்தது, அவளுக்கும் அப்படி இருப்பதாக கூறினாள். நடைபயிற்சி சென்றவர்கள் எங்களைப் பார்த்து புன்னகைத்தபடி சென்று கொண்டியிருந்தனர். அங்கு இருந்தவர்கள் எங்கள் இருவருக்கும் பழக்கமானவர்கள்தான்.
அடுத்தடுத்த சந்திப்பில் சகோதரன் ராஜனுடன்,தனது பிளாட்டில் தங்கயிருப்பதாகவும்,பெயர் சங்கரி, திருமணமாகவில்லை எனவும் அவள் பேச்சில் இருந்து தெரிய வந்தது.
காரணம் கேட்டபோது, அப்பா அம்மாவை சிறுவயதிலே இழந்த பின் சகோதரன் ராஜன் படிக்கணும், வேலைக்குப் போகணும் என தான் குடும்பத்திற்காக உழைத்ததில் காலம் கடந்து போய்விட்டதாக சொன்னதும் அவள் மீது பரிதாபம் ஏற்பட்டது.
பாவம்மா நீ என்ற நான் என் கையை நீட்டியதும் அவளும் தன் கையை நீட்டினாள் தன்னிச்சையாக.
அந்த ஸ்பரிசம் அவளுக்கு புதுமையாய் இருக்க, வெடுக்கென இழுத்துக் கொண்டவள் வெட்கத்தோடு எழுந்துப் போனாள், எனக்கு உழைப்பும், உயர்ந்த தியாகமும் மட்டுமே அந்த ஸ்பரிசத்தில் தெரிந்தது.
சங்கரி அதே இருக்கையில் மறுநாள் அமர்ந்தியிருக்க, அருகில் சென்று நான் அமர.ந்தவுடன் எழுந்து சற்றுத்தள்ளி அமர்ந்தாள்.
இந்த உலகமே எல்லோரிடமும் எதையோ எதிர்பார்த்துதான் இயங்குகிறது இல்லையா என்ற சங்கரி, எதையும் எதிர்பாரத தூய அன்பிற்கு இன்றும் பற்றாக்குறை உள்ளது என பொதுவாக சொல்லியவள், தன் சகோதரனின் எதிர்பார்ப்புகள் என் பணம், வீடு மற்றும் என் சேமிப்பின் மீதுதான் என வருத்தப்பட்டு பேசியபோது அவள் விரக்தியின் விளிம்பில் இருப்பது தெரிந்தது.
பரஸ்பரம் செய்திகளை பகிர்ந்துக்கொண்டபோது, மனைவியை இழந்து தனி மரமாக வாழும் எனக்கும் மனத்திற்கு நிறைவாக இருந்தது சங்கரியின் கனிவான பேச்சும், அவள் நடந்துக்கொண்ட விதமும்.
இருவருக்கும் ஒரே வயதுதான், பணத்திற்கோ வசதிகளுக்கோ ஒன்றும் குறைவில்லை, ஆனால் என்னைப்போலவே அவள் மனமும் அன்பிற்கு ஏங்குகிறது அதுவும் நிபந்தனையற்ற ஒரு அன்பிற்கு ஏங்குகிறது என புரிந்துக் கொண்டேன்.
நானும் என்னைப் பற்றி தகவலைச் சொல்லி, சொந்த ஊரான திருச்சிக்கு நாளை இரவு போகிறேன், மீண்டும் பிறகு எங்கு சந்திக்கலாம், எப்போது சந்திக்கலாம் என அவளிடம் கேட்டதற்கு,பதில் ஏதும் கூறாமல் கண்கள் கலங்கியபடியிருந்தாள் சங்கரி
இன்னும் பெரிதாக காலம் கடந்து போய்விடவில்லை, நீங்கள் விரும்பினால்....... உங்களை நான்.... என என் விருப்பத்தை கூறி நிறுத்தியதும்,
நீயுமா ? என்பது போலிருந்தது அவளின் அந்த பார்வை. எனக்கு வியர்த்துபோனது அவளின் கூர்மையான அந்த பார்வையால்.
நேற்று எதுவும் கூறாமல் எழுந்து போனவள்தான். இதோ காத்தியிருக்கிறேன் அவளின் வருகைக்காகவும், பதிலுக்காகவும், இன்று இரவு திருச்சிக்கு திரும்பிச்செல்ல வேண்டும்.
பொழுது சாய்ந்து நேரமாகியும் அவள் வரவில்லை, அவளிடம் அப்படி கேட்டதற்கு மன்னிப்பாவது கேட்டுவிடலாம் என்றால், இத்தனை நாள் பேசியும் அவளின் மொபைல் எண் கூட வாங்கலையே, என சோகத்துடன் கிளம்பி வீடு வந்து மகள் மற்றும் மருமகனிடமும் சொல்லிக்கொண்டு ஆட்டோ ஒன்றினை அமர்த்திக்கொண்டு எழும்பூர் ரயில் நிலையம் வந்து இருக்கையைத்தேடி அமர்ந்து தனது மொபைல் UTS app ல் திருச்சிக்கான பயணச்சீட்டில் பெயர் சுந்தரராமன் என போடும் போது, "இரண்டாக போடுங்கள்" என்ற குரல் கேட்டு திரும்பிய சுந்தர், அங்கு சங்கரி நிற்பதைக் கண்டு மகிழ்ந்து அருகில் அமர இடம் கொடுத்தார்.
ஒத்துக்கொண்டதற்கான காரணம் தெரிஞ்சுக்கலாமா ? கேட்டார் சுந்தரராமன்.
வெறுக்கத்தான் காரணங்கள் தேட வேண்டும், அன்பு செய்ய மனசே போதுமானது என்றாள்.
சராசரி ஆயுள் எழுபதுதானே மீதமுள்ள ஆண்டுகளை நம்ம இஷ்டத்திற்கு வாழலாம் இல்லே! என்ற சங்கரி எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்துவிட்டேன் என்று எல்லாவற்றையும் என்பதை அழுந்தக் கூறினாள்.
ரயில் பயணத்திற்கான பச்சை சிக்னல் விழுந்திருந்தது, நிபந்தனையற்ற இவர்களின் அன்பிற்கான
வாழ்க்கைப்பயணம் இனிதே தொடர்ந்தது.

Leave a comment
Upload