கருக்கலில் என் துப்பட்டிக்குள்
மெல்ல நுழைந்தாய்.
நீயன்றி யார் வருவார்?
கனவொன்றின் காட்டிலிருந்தேன்.
மீட்டது உன் உள்ளங்கையின்
தண்ணென்ற ஸ்பரிசம்.
ஜென்ம ஜென்மங்களாய்
நானறிந்த மென்தொடுகை.
என்றும்போல் வாரியணைக்காமல்,
அசைவின்றிக் கிடந்து பார்த்தேன்.
உன் பிஞ்சுவிரல்களால் என் தலைமுடியை அளைகின்றாய்.
வருடலின் சுகத்தில் மீண்டும்
கனவுள் சரிகின்றேன்.
‘சின்னஞ்சிறு கண்மலர்
செம்பவழ வாய்மலர்’ என
அம்மாவின் பூங்குரல் காதோரம்.
அம்மா இல்லாத இந்த உலகத்திற்கு
நெற்றியில் முத்தம் தந்து
மீட்கின்றாய்.
ஒன்றுக்குப் பத்து என
பதில் முத்தம் பதிக்கின்றேன்..
முணகலாய் ஏதோ கேட்கிறாய்.
‘என்ன வேணும் கண்ணம்மா ?’
மீண்டும் உரத்து வினவுகிறாய்…
“குருவிக்கு குளிரடிச்சா யார் போர்த்தி விடுவாங்க?”
ஆயிரம் கவலை உனக்கு.
“குருவியோட அம்மா போர்த்தி விடும் பட்டூ…”
சின்னச் சின்னப் பொய்களால் தான்
இந்த உலகை அழகாக்குகிறேன்.
கூடுகள்தோறும்
சின்னஞ்சிறு தலையணைகளையும்
மெல்லிய சிறு போர்வைகளையும்
மரம்மரமாய் ஏறி வைக்கின்றேன்.
“பொய் சொன்னா போஜனம் கிடைக்காது“
என்றது ஒரு தாய்க்குருவி.
Leave a comment
Upload