தொடர்கள்
அனுபவம்
‘ஆ’...தங்கம்.! அலறும் நடுத்தர மக்கள் -மாலாஸ்ரீ

20250324193320352.jpg

தங்கம் ஒரு அருமையான முதலீடு . அழகுக்காக வாங்கி வைத்தாலும், ஆபத்துக்கு கை கொடுப்பது தங்கம் தான். எனவே பொன்னிலே பணத்தைப் போடும் வழக்கம் நம் நாட்டில் எப்போதும் இருக்கிறது.

கடந்த 1960-ம் ஆண்டு காலகட்டங்களில் குறைந்த வருவாயில், நிறைய பிள்ளைகளைப் பெற்றிருந்தாலும், அக்கால பெற்றோர்களிடம் அதிகளவு சேமிக்கும் பழக்கம் இருந்து வந்தது. அப்போது தங்கத்தின் விலையும் மிக மிக சொற்பம்தான்… இதனால் சிறுக சிறுக சேமிக்கும் பணத்தை வைத்து அதிகளவில் தங்கத்தை வாங்கி வந்தனர்.

தங்களின் பெண் குழந்தைகளுக்கு நகைகளை போட்டு அழகு பார்ப்பதுடன், அவர்களுக்கு அந்நகைகளை திருமணத்தின்போது சீதனமாக வழங்குவது வழக்கம். நாளடைவில் தங்கத்தின் விலை சிறிது சிறிதாக அதிகரிக்கத் துவங்கியது. எனினும், மக்களிடையே சேமிக்கும் பழக்கம் இருந்ததால், சேமிப்பு திட்டத்தின் மூலம் நகைகளை வாங்கி பயனடைந்து வந்துள்ளனர்.

நிற்க… சமீபகாலமாக தங்க நகைகளின் விலை நாளுக்கு நாள் வானளாவிய அளவில் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் நகைக் கடைகளுக்கு ஏழை மற்றும் நடுத்தர மக்கள் ஆயிரக்கணக்கில் பணத்தை எடுத்து சென்றாலும், ஒரு கிராம்… 2 கிராம் அளவிலேயே நகைகளை வாங்குவதற்கே தடுமாற வேண்டியிருக்கிறது.

இதுகுறித்து சென்னை நகர கடைகளில் நகை வாங்க முடியாமல் திணறும் மக்கள் சிலரை சந்தித்து பேசினோம். அவர்கள் அனைவரும் பீதி கலந்த குரலிலேயே நம்மிடம் தகவல்களை பரிமாறிக் கொண்டனர்.

மல்லிகா, வியாசர்பாடி:

"எனக்கு 10 பவுன் போட்டு கல்யாணம் பண்ணி வெச்சாங்க. ஆனா, இப்போ என் பொண்ணு கல்யாணத்துக்கு 2 பவுன் நகைகூட வாங்க முடியலே… நேத்து வந்து கேட்டா ஒரு விலையும், இன்னிக்கு வந்தா அதைவிட அதிகமாவும் இருக்கு. எங்களை மாதிரி அன்றாட கூலித்தொழிலாளிகளுக்கு முன்பெல்லாம் சேமிப்பு திட்டத்தின் ஓரளவு நகை சேமிக்க முடிஞ்சுது. நகை வாங்க ₹2 லட்சம் எடுத்துட்டு வந்தோம். இதுல, தாலிக்கு மட்டும்தான் தங்கம் வாங்க முடிஞ்சுது. மீதமுள்ள நகைகளை வாங்க வீட்டைதான் விக்கணும் போலிருக்கு!"

குணசேகரன், பொழிச்சலூர்:

' எனக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்காங்க. நானோ, சினிமா ஷுட்டிங்கில் வேலை செய்யும் தினக்கூலி தொழிலாளி. ஆனா, ஊருல எல்லாரும் என்னை சினிமா ஹீரோவா பாக்குறாங்க. இப்போ, வரப்போற பொண்டாட்டிக்கு ஆசையா ஒரு தங்க நகை வாங்கி கொடுக்கலாம்னா, விலையை கேட்டு தலையை சுத்துது… இதுல வேற, நாமும் தாலிக்கு தங்கம் கொடுக்கணும்னு பெத்தவங்க கேக்கறாங்க. நான் காசுக்கு எங்க போவேன்?

வடபழனியில் துணை நடிகைகளில் சிலர் பேசுகையில், நாங்க எல்லாம் தினமும் ஷுட்டிங் வேலைக்கு போய் கிடைக்குற பணத்தை சிறுக சிறுக ஒரு கிராம், 2 கிராம் நகைகளை வாங்கி சேமிப்போம். வேலை இல்லாத நாள்ல அதை அடகு வைக்க போனா, ‘இதுல பொடி அதிகமா இருக்கு. நீங்க கேக்குற பணத்தை கொடுக்க முடியாது’னு கடைக்காரங்க சொல்றாங்க. இதேபோல் தங்கம் விலை நாளுக்கு நாள் சர்ர்னு ஏறிக்கிட்டே போனா, நாங்க எல்லாம் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்த முடியுமானு சந்தேகம்தான் வருது.

இப்போ நாங்க சிறுக சிறுக நகைகூட சேமிக்க முடியாது போலிருக்கு. பின்ன என்னங்க… நாங்கள் மாசா மாசம் ₹1000 சேமிச்சா, 12 மாசத்துக்கு ₹12 ஆயிரம் வரும். கடைக்காரர் ₹1000 போட்டா… ₹13 ஆயிரம். இதுல இனி ஒரு கிராம் தங்கம்கூட கிடைக்காது போலிருக்கே!” என்றனர்

வள்ளியம்மாள், வளசரவாக்கம்:

"நான் நகைக் கடைக்கு போற பழக்கமே குறைஞ்சு போச்சு. அடகு கடையில ஏலம் போற நகைகளை கேட்டா, புது நகையின் விலையை சொல்றாங்க. முன்னெல்லாம் தங்கத்தின் தரம் ஒரே அளவா நிர்ணயிச்சாங்க. இப்போ கடைக்கு கடை முத்திரை குத்திக்கிட்டு, அது சரியில்லை… இது சரியில்லைனு நகைகளை விக்கும்போது விலையை சரமாரியா குறைச்சுடுறாங்க. வாங்கற விலையைவிட விக்கிற விலையை குறைச்சா, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் எப்படி நகைகளை வாங்க முடியும்? நாங்கெல்லாம் இனி ‘குந்துமணி’ தங்கம்கூட வாங்கறது கஷ்டம்தான்!"

சீத்தாபதி, மடிப்பாக்கம்:

"அந்தக் காலத்துல இருந்து திருமணத்தில் தாலிக்கு பெண், மாப்பிள்ளை வீட்டார் இருவரும் சரிசமமாக தங்கம் வழங்குவர். இதில், அவற்றை தங்க தாலிச் சரடுடன் வாங்கி விடலாம். இப்போ என் பேத்தி கல்யாணத்துக்கு தாலி வாங்கப் போனா, ஒரு பவுன் ரூ.72 ஆயிரத்துக்கு மேல போகுது.

இதை பார்த்ததும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ‘உங்களால முடிஞ்சதை வாங்குங்க’னு நைசா நழுவிட்டாங்க. நான் வெச்சிருந்த பணத்தில் தாலி மட்டும்தான் வாங்க முடிஞ்சுது. சரடு வாங்க இன்னும் ஆயிரக்கணக்கில் செலவாகும். மஞ்சள் கயித்துலதான் தாலியைக் கோக்கணும் போலிருக்கு?!"

சென்னை நகர சிறு நகைக்கடை உரிமையாளர்களை சந்தித்து பேசியபோது, "முன்பெல்லாம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சிறுக சிறுக சேமித்து நகைகளை வாங்குவதால், எங்களுக்கு நாள்தோறும் விற்பனை இருந்து வந்தது. இப்போ, நாளுக்கு நாள் தங்கம் விலை உயர்ந்துக்கிட்டே போறதால, அவங்களும் நகை வாங்க முடியலை. நாங்களும் விற்க முடியாம திணறிட்டு இருக்கோம்.

ஆனா, பிரபல நகை கடைகள் எல்லாம் ஆங்காங்கே பிரமாண்ட ஷோரூம்களை திறந்து அதிகளவில் விளம்பரப்படுத்தறாங்க. இதை பார்த்து அங்கு மக்கள் கூட்டம் கூடுது. ஆனால், அங்கே போகும் ஏழை மக்களில் சிலர் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிவதாக கூறுகின்றனர். ‘நாங்க வெச்சிருக்கிற பணத்துக்கு, அங்கே ஒரு பொட்டு தங்கம்கூட வாங்க முடியாது’னு புலம்பறாங்க. எங்க கடைகளுக்கு கூட்டம் வர்றது குறைஞ்சு போச்சு. இதனால் நாங்க கைக்காசை போட்டு கடையை நடத்த வேண்டியிருக்கு!" என்றனர்

மக்களின் "ஆ ...தங்கம் " நம்மால் உணர முடிகிறது

தங்கத்தின் விலை தினம் தினம் உயர்வதைக் காணும் போது அது எளிய , ஏழை மக்கள் தொட முடியாத உயரத்துக்கு சென்று விட்டதை கேட்க முடிகிறது.

தங்கம் விலை குறைய வேண்டும் என்பதே” மக்கள் குரலாக” “ஒலிக்கிறது