தொடர்கள்
பொது
ஏலியன்கள் இருக்கின்றன!? -தில்லைக்கரசிசம்பத்

20250325080211112.jpg

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளியின் வானியல் ஆராய்ச்சியாளர் விஞ்ஞானி நிக்கூ மதுசூதன், வேற்று கிரகத்தில் உயிர் இருப்பதற்கான தடயங்களை கண்டுப்பிடித்துள்ளார். வேற்று கிரகத்தில் உயிரினங்கள் என்றவுடன் மின்னும் கொட்டாங்குச்சி கண்களோடு, குச்சி விரல்களோடு மொட்டை தலை ஏலியன்கள் அந்த கிரகத்தில் குடித்தனம் பண்ணி கொண்டிருக்கின்றன என அவசரப்பட்டு எண்ண வேண்டாம். விஞ்ஞானி நிக்கூ கண்டறிந்தது அந்த கிரகத்தின் வாயு மண்டலத்தில் இருக்கும் டைமெத்தைல்சல்ஃபைடு எனப்படும் DMS வாயு. 2023 ஆம் வாக்கில், விஞ்ஞானி நிக்கூ மதுசூதன் தலைமையிலான குழு, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் மூலம், பூமிக்கு 120 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள K2-18b என்ற ஒரு கோளில், இந்த அதிசயத்தை கண்டறிந்தது. அறிவியல் உலகமே, விஞ்ஞானி நிக்கூ மதுசூதனின் இந்த கண்டுப்பிடிப்பால் பிரமித்து போய் உள்ளது. அதெப்படி அவ்வளவு தொலைவில் உள்ள ஒரு கோளின் வளிமண்டலத்தில் DMS இருப்பதை கண்டறிந்தார்கள் என ஆச்சரியமாக இருக்கலாம். ஒரு கோள் அதன் நட்சத்திரத்தைச் சுற்றி வரும்போது, அக்கோளின் வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள் அந்த நட்சத்திரத்தின் ஒளியில் குறிப்பிட்ட அளவு சிதைவுகளை ஏற்படுத்தும். இதனை ஸ்பெக்ட்ராஸ்கோபி முறையில் கண்டறியலாம். பூமி சூரியனை சுற்றுவது போல் K2-18b கோள், எம் வகை சிவப்பு சிறுகதிர் நட்சத்திரத்தை (M-type red dwarf star) சுற்றி வருகிறது. ஜேம்ஸ் விண்வெளி தொலைநோக்கியின் மூலம் அந்த நட்சத்திரத்தின் ஒளியை ஆராய்ந்து, அதில் DMS வாயுக்களின் தனிப்பட்ட கதிர்வீச்சு அடையாளங்களை (spectral fingerprints) பதிவு செய்தார்கள். அதன் மூலம் DMS வாயு K2-18b கோளின் வளிமண்டலத்தில் இருக்கிறது என்பதை கண்டறிந்துள்ளார்கள். DMS என்பது நமது பூமியில் உயிரினங்கள், குறிப்பாக கடலில் வாழும் நுண்ணிய தாவரம் பைட்டோபிளாங்ட்டன் (Phytoplankton )மற்றும் சில பாக்டீரியாக்கள் உற்பத்தி செய்யக்கூடிய ஒரு வாயு. சொல்லப்போனால் உயிரினங்கள் இல்லாமல் இந்த DMS வாயு இயற்கையில் தானாகவே உருவாகாது. K2-18b என்ற இந்த கோள் வளமான ஹைட்ரஜன் வளிமண்டலத்துடன், நீரை மேற்பரப்பாக கொண்டிருக்கும் உலகம். இது பூமியைவிட 2.6 மடங்கு பெரியது. இதில் மீத்தேன் மற்றும் கார்பன் டைஆக்சைடு போன்ற வாயுக்களும் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் அமோனியா குறைவாக உள்ளதால், இக்கோள் உயிர் வாழக்கூடிய சூழலைக் குறிக்கிறது. DMS என்பது உயிர் உருவான பிறகு உண்டாகும் வாயு. எனவே அங்கே இருப்பது மனிதர்களை போன்ற ஏலியன்களா என்பதை விட அவை நுண்ணுயிர்களாக (microbes) இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். இருந்தாலும் உயிர் உயிர்தானே!

நமது பூமி நெருப்பு பந்தாக இருந்து பின் குளிர்ந்து உயிர் வாழும் சூழ்நிலைக்கு மாறி 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தான் நுண்ணுயிர்கள் தோன்றின. பின் 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பாசியிலிருந்து இன்று மனிதன் வரை வந்தாகிவிட்டது. இதே போன்ற நெடும்பயணத்தை K2-18b கோள் ஆரம்பித்து இப்போது தான் நுண்ணுயிர் கட்டமே வந்திருக்கிறதோ என்னமோ!

இது உண்மை என்கிற பட்சத்தில், சில பில்லியன் ஆண்டுகள் கழித்து அங்கே நம் பூமி போலவே உயிர்கள் செழித்து வாழ வாய்ப்பும் சாத்தியமே. அந்த சமயத்தில் K2-18b மண்ணின் மைந்தர்கள் “120 ஒளியாண்டுகள் தொலைவில் ஒரு நெருப்பு பந்து போல் தன் ஆயுளின் கடைசிக்கட்டமாக எரிந்து, அழிந்துக்கொண்டிருக்கும் ஒரு கிரகம் முன்னொருக்காலத்தில் உயிர்களோடு இருந்து வந்ததாக தெரிகிறது” என பூமியை பற்றி கண்டறியலாம்.

“அழிந்துபோனவன் உயிர்தெழுவான்.. உயிர்த்தெழுபவன் அழிந்துபோவான் “ என சொல்வதற்கேற்ப, வாழ்க்கை மட்டும் வட்டமில்லை, இந்த பிரபஞ்சமும் தான் என வேடிக்கையாக சொல்லத்தோன்றுகிறது.

K2-18b பற்றி இன்னும் பல ஆய்வுகள் நடக்கவிருக்கின்றன. ஆனால் விஞ்ஞானி நிக்கூ மதுசூதனின் கண்டுபிடிப்பு, வருங்காலங்களில் வேற்று கிரகங்களில் உயிர்களை கண்டறியும் ஆராய்ச்சிகளுக்கு மிகப்பெரிய ஆதாரக்காரணமாக விளங்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.