தொடர்கள்
கதை
தாத்தாவின் தங்கம் - கி. ரமணி

20250325173143803.jpeg

82 வயதான ரிடயர்ட் ஹை ஸ்கூல் ஹெட் மாஸ்டர் ஞானப் பிரகாசம் ஐசியூவில் கடைசி மூச்சுகளை கஷ்டப்பட்டு எண்ணிக்கொண்டு இருந்தார். ஒரே பிள்ளை வயிற்றுப் பேரன் பிரகாஷ் அருகில் இருந்தான். கிழவர் மூச்சு இறைத்து கொண்டே சொன்னார்:

"பிரகாசு. என் தாத்தா அந்த காலத்துல வட்டிக்கு பணம் கொடுக்கிற லேவாதேவி பிசினஸ் பண்ணிட்டு இருந்தாரு. நிறைய பணம். குடும்பத்தில் எதுவும் நிலைக்கல. எங்க அப்பா சீக்கிரமே செத்துட்டாரு. நிறைய பேர் தாத்தா கிட்ட நகையை அடகு வச்சுட்டு திருப்பி எடுக்காமலே முழுக விட்டுட்டு போயிட்டாங்க. என் தாத்தா சாகுற போது என்ன கூப்பிட்டு ஒரு லெட்டரை என்கிட்ட கொடுத்துட்டு "இதுல ஆயிரம் பவுன் இருக்கு. படி" என்று சொல்லிவிட்டுப் போய்ச் சேர்ந்தார். லெட்டரில், நம்ம நல்லூர் கிராமத்து வீட்டு மாடியில் இருக்கிற பெரிய இரும்புப்பெட்டி பத்தி சொன்னார். அதுக்குள்ள இருக்கிற எட்டுக்கு,எட்டுக்கு,நாலு இன்ச் சைஸ் பெட்டிக்குள்ள ஆயிரம் பவுன் சொத்து இருக்குன்னு எழுதி இருந்தாரு.

தாத்தா இறந்த பின் நான் அந்த பெட்டி பக்கமே போகல. காரணம் அவர் வட்டிக்கு நகைகளை வாங்கிப் பணம் சேர்த்தது சுத்தமா எனக்குப் பிடிக்கல. என் அப்பாவின் அகால மரணம் வேற என்னை பயமுறுத்தியது. வட்டிக்கு வைத்த நகை நமக்கு எதற்கு?. நம் குடும்பம் உருப்பட வேண்டும் என்று அந்த நகையை மறந்து விட்டேன். இதே காரணத்திற்காக இந்த விஷயத்தை நான் உன் அப்பாவிடம் கூட சொல்லவில்லை. ஏன் உன்னிடம் சொல்கிறேன் என்றால், நீ என் தாத்தாவின் ஐந்தாவது பரம்பரை.எல்லா பரம்பரையிலும் ஒரே பிள்ளை. ஐந்தாவது பரம்பரைக்கு தங்க தோஷம் இல்லை,பாவம் இல்லை என்று நம் ஜோசியர் சொன்னது முக்கிய காரணம்.நகையை எடுத்துக் கொள்வதும் கொள்ளாததும் உன் இஷ்டம். என் கடமை முடிந்தது. இந்தா என் தாத்தாவின்கடிதம் உள்ள கவர். நல்லூர் இரும்புப் பெட்டியின் சாவி என்னுடைய காட்ரேஜ் பீரோவுக்குள் இருக்கிறது. " என்று கூறி ஞானப்பிரகாசம் முடித்துக் கொண்டார். அன்று இரவே அவர் இறந்துவிட்டார்.

எல்லாம் முடிந்தபின் பிரகாஷ் இது பற்றி தன் மனைவி நந்தினியிடம் ஆலோசித்தான். "பாவப்பட்ட பணம் நமக்கு மட்டும் எதற்கு?" என்றாள் மனைவி. நெடு நேரம் யோசித்த பிரகாஷ் சொன்னான். "நான் ஒரு செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில் ஆரம்பிக்க இருக்கிறேன் இல்லையா?. அதற்கு உதவும்.ஆயிரம் பவுன் என்றால் இன்றைய நிலையில் ₹ 5 கோடிக்கு மேல் வரும். நாளை பிசினஸ்ல நல்ல லாபம் வந்தால் இந்த பணத்தை திருப்பதி உண்டியலில் போட்டு விடலாம். ஓர் நல்ல நோக்கத்துக்காகத் தான் இந்த விஷயத்தை நம் காதில் போட்டு இருக்கிறார் கடவுள் " என்றான்.

நந்தினி சிரித்தாள் மறுக்கவில்லை.

நல்லூருக்கு காரில் செல்லும் போது மனைவி சொன்னாள். "ஆயிரம் பவுனில் எனக்கு, நூறு பவுன்,உங்க அம்மாவுக்கு ஐம்பது பவுன். உங்க அப்பாவும் தன்னோட சில்லறை கடனைத் தீர்க்க ஐம்பது பவுன் கேட்டார்."

"அரச மரத்தையே சுத்த ஆரம்பிக்கல. அதுக்குள்ள புள்ளைக்கு பேர் வைக்கிறீங் களே?"

கல்லூர் தாண்டி, தாமிரபரணி வாய்க்கால் தாண்டி,தாமரைக் குளம் தாண்டி,ஆலமரம் தாண்டி, வலப்பக்கம் மேலத் தெருவுக்குள் நுழைந்தான். வலதுபக்கம் பன்னிரண்டாவது வீடு எள்ளுத்தாத்தா வீடு.

ஊர் முக்கியஸ்தர்களுடன் கொஞ்சம் பேசிவிட்டு நந்தினியிடம் "நகை பற்றி மூச்சு விடாதே யாரிடமும். நம்ம பாட்டுக்கு எல்லாரிடமும் கேஷுவலாக இருந்து விட்டு மதியம் மாடியில் போய் இரும்புபெட்டியைப் பார்க்கலாம்."என்றான்.

மூன்று மணிக்கு சத்தம் போடாமல் இருவரும் வீட்டு நடையில் உள்ள மரப்படிக்கட்டில் ஏறி மேலே உத்திரத்தில் இருந்த சதுர மரக்கதவைத் திறந்து, மாடிக்கு ஏறினார்கள். ஒரே தூசி.குப்பை கூளம். எட்டுக்கால் பூச்சிப் படை. விர்ர் என்று பறக்கும் கரப்பான் மிசைல்கள்.

எள்ளுத் தாத்தாவின் இரும்புப் பெட்டி ராட்சசன் போல் நின்றது. தன் பாக்கெட்டில் இருந்து அதன் சாவியை பத்திரமாக எடுத்து ஓட்டைக்குள் நுழைத்து மூன்று திருப்பு திருப்பித் திறந்தான் பிரகாஷ். எலி கீச்சிடுவதைப் போல சப்தமிட்டது.

உள்ளே இருந்த கதவை வேறு சாவி போட்டு திறந்த போது 8"x8"x4" சைஸ் இரும்பு பெட்டி தெரிந்தது. கூடவே சில மரப்பெட்டிகள் ஓலைச்சுவடிகள் எல்லாம் இருந்தன. ஏகப்பட்ட கரையான்கள்.

ஒரு மாதிரி சந்தேகத்துடன் நந்தினியை பார்த்தான் பிரகாஷ். ஆயிரம் பவுன் நகை என்கிறாரே எள்ளுத் தாத்தா. இந்தப்பெட்டி ரொம்ப சின்னதா இருக்கு இல்ல. அவ்வளவு நகையும் காணுமா?"

"நீங்கள் சொல்வது சரிதான். சின்னது தான் பெட்டி."

சுத்தியலால் தட்டிப் பெட்டியைத் திறந்தான் பிரகாஷ். கரையானால் பாதிக்கு மேல்கடித்துக் குதறப்பட்டு மீதி இருந்த இரண்டு தைக்கப்பட்ட ரூபாய் நோட்டு கட்டுகள் உள்ளே இருந்தன.

பிரகாஷ் அப்பளம் போல் உதிரும் ரூபாய் நோட்டுக் கட்டு ஒன்றைக் கையில் எடுத்து சற்று நேரம் உற்றுப் பார்த்து விட்டுப் பின் ஏமாற்றத்துடன் சிரித்தான்.

" இதெல்லாம் ஆறாவது ஜார்ஜ் அரசர் படம் போட்ட மொத மொதல்ல பிரிண்ட் ஆன பிரிட்டிஷ் இந்திய நூறு ரூபாய் நோட்டுகள்.

எள்ளுத் தாத்தா,கிட்டத் தட்ட,ஆயிரம் பவுனயும் வித்து, அந்த காலத்து இருபதாயிரம் ரூபாயாக, சர்வ ஜாக்ராதையா மாற்றி இரண்டு நூறு ரூபாய் கட்டாக உள்ளே வைத்திருக்கிறார். அப்போ பவுன் விலை சுமாரா 20 ரூபாய் போல.

தாத்தாவின் தங்கம் அத்தனையும் அந்தக் காலத்து பணமாக இருந்தது. அதுவும் பாதி கரையான் அரித்து.

பிரகாஷும் நந்தினியும், பாவத்தை சுமக்காமல் ஊர் திரும்பினார்கள்.