“தங்கத்தின் விலை குறைந்தது என்றாலும் சந்தோஷத்தில் மக்கள் வாங்குவார்கள். அதன் விலை ஏறுகிறது என்றாலும் பயத்தில் வாங்கி வைத்துக்கொள்வார்கள்.”
தங்கம் வாங்குவது என்பது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயம். அழகு, ஆடம்பரம் என்று ஒரு புறம் இருந்தாலும் நம்முடைய அவசர பணத் தேவைகளுக்கு வங்கிகள் மற்றும் அடகுக் கடைகளில் தங்க நகைகளை வைத்து நாம் பயன்படுத்துகிறோம். இதனால் தான் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்தாலும் அதை ஆர்வத்துடன் மக்கள் வாங்கி மகிழ்கின்றனர். பொன் நிறமான தங்கம் லட்சுமியின் அடையாளம். எனவே, லட்சுமி வழிபாட்டில் தங்கத்தை வைத்து பிரார்த்தனை செய்தால், தங்கம் அட்சயமாக வளர்ந்து செல்வச் செழிப்பைத் தரும் என்று கூறப்படுவதன் பேரில் தங்கம் வாங்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டது. அதனால் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால், அந்த ஆண்டு முழுவதும் மங்கலகரமாக இருக்கும் என்றும், லட்சுமி தேவியே நம் வீட்டிற்கு வருவதாகவும் நினைத்து புதிய தங்க நகைகள், வெள்ளி நகைகள், வைரம் போன்றவற்றை வாங்கியும், தங்களிடமுள்ள பழைய நகைகளை மாற்றி புதிய நகைகளாக வாங்குகின்றனர். அட்சய திருதியை என்றதுமே நகைக் கடைக்குப் போய் தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கடந்த சில ஆண்டுகளாகத் தான் மக்கள் மனதில் உருவாகியுள்ளது.
இதனால் வறுமை நிலையில் உள்ளவர்கள் கூட கடன் வாங்கியாவது அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கிட வேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டார்கள் வணிகர்களும், ஜோதிடர்களும்…
அட்சய திருதியை நாளில் தங்கத்தைத்தான் வாங்கிச் சேர்க்க வேண்டும் என, சாத்திரங்கள் எதுவும் வலியுறுத்திச் சொல்லவில்லை.
அட்சய திருதியன்று ஒரு தவிட்டுப் பானை வாங்கினாலும் தங்கம் நிறைந்த பானையாக மாறும் என்றும், இந்த நாளில் ஒரு குன்றிமணி அளவுக்கு நகை வாங்கினால் குன்று அளவு பெருகும் என்பது ஜோதிட மொழியாகும். முன்பெல்லாம் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவதற்குப் பதிலாக அதனை மற்றவர்களுக்குத் தானமாகக் கொடுத்தார்கள். இதைத்தான் சாஸ்திரங்களும் வேதங்களும் சொல்கின்றன.
“அட்சய திருதியை தினத்தன்று மங்கலப் பொருட்களான கல் உப்பு, மஞ்சள் போன்றவை வாங்கினாலும், பிறருக்கு தான, தருமம் செய்வதாலும் நம்முடைய செல்வம் வளம் உயரும்.”
Leave a comment
Upload