இந்தியப் பெண்களின் வாழ்க்கையில் தங்கம் தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. அதுவும் பெண் குழந்தை என்றால் பிறந்ததிலிருந்து, திருமணத்தின் போது சீர் கொடுப்பது வரை தங்கம் அவர்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக அமைந்து விடுகிறது.
அட்சய திதியை நாளில் வாங்கப்படும் எந்த பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும். அதனால்தான் இந்த நாளில் மதிப்புமிக்க தங்கம் வாங்க மக்கள் விரும்புகின்றனர். ஒரு குன்றிமணி அளவிற்காவது தங்கம் வாங்கினால் இந்த ஆண்டு முழுவதும் தங்கமானது சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது தான் அனைவரிடமும் இருக்கும் நம்பிக்கை.
இந்த ஆண்டு தங்கத்தின் விலை யாரும் எதிர்பாராத வகையில் 10 கிராமுக்கு ரூ.1 லட்சம் என்ற இலக்கை எட்டியுள்ளது. ஏப்ரல் 17-ஆம் தேதி அன்று சர்வதேச அரசியல் காரணங்களாலும், அமெரிக்கா டாலரின் மதிப்பு குறைந்து வருவதாலும், 24 கேரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 97,310 ரூபாயாக அதிகரித்தது. 22 கேரட் தங்கத்தின் விலை 89,200 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டியது.
இந்தாண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஏறுவதும், குறைவதுமாக இருக்கும் இந்நிலையில், கடந்த ஒரு சில நாட்களாக உச்சத்தைத் தொட்டு வருகிறது.
இதனால் வரும் 30ம் தேதி அட்சய திருதியை கொண்டாடப்படுவதைத் தொடர்ந்து நகைக் கடைகள் ஒரு புதிய முறையை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
முன்பதிவு முறை:
அட்சய திருதியைக்குத் தங்கம் வாங்க முன்பதிவு செய்ய வருவோர், விரும்பிய நகைகளைத் தேர்வு செய்து 10 சதவீத தொகையை முன் பணமாகக் கட்டி பதிவுசெய்ய வேண்டும். அட்சய திருதியைக்குத் தங்கம் வாங்க வருகையில், முன்பதிவுசெய்திருந்த தினத்தில் இருந்து அட்சய திருதியை வரை, எந்த நாளில்தங்கத்தின் விலை குறைவாக உள்ளதோ, அந்த விலைக்கே அட்சய திருதியைநாளில் நகை வாங்கிக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளனர். இதனால்பலரும் அட்சய திருதியைக்கு நகை வாங்க முன்பதிவு செய்வதில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
தங்கம் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை:
எப்போது தங்கம் வாங்கினாலும் 916 நகைகளை வாங்க வேண்டும். ஹால்மார்க் நகைகளைத் தவிர வேறு எதையும் வாங்க வேண்டாம். அப்பொழுதுதான் மறு விற்பனைக்குக் கொடுத்தாலும் எந்தவித பிரச்சினையும் இருக்காது.
எந்த கடையில் நகைகள் வாங்கினாலும் பில் கட்டாயம் வாங்க வேண்டும். அதில் வாங்கிய நகைகளின் எடை, தரம் சரியாக உள்ளதாக என்பதைக் கவனத்துடன் பார்க்க வேண்டும்.
கல் பதித்த நகைகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது என்று வாங்கினால் அவை மறு விற்பனைக்கு என்று வரும் போது பாதிக்குப் பாதி விலை குறைந்து விடும்.
அழகிற்காகக் கல் பதித்த நகைகளை வாங்க வேண்டாம்.
அட்சய திருதியை நாளில் தங்க நகைகள் மட்டுமே வாங்க வேண்டும் என்று அவசியமில்லை. அதற்குப் பதிலாகத் தங்கக் காசுகளாக வாங்கிக் கொள்ளலாம். இதற்குச் செய்கூலி, சேதாரம் மிகவும் குறைவு. நாம் எப்போது வேண்டுமானாலும் தேவையான, புதிய வடிவத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
Leave a comment
Upload