பிரசித்தி பெற்ற பசுபதீஸ்வரர் ஆலயம் வழக்கமான பூசைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம், கார் ஒன்று வாசலில் நிற்க, அதிலிருந்து இறங்கியத் தம்பதி ஊருக்குப் புதியவர்கள் போல் தோற்றமளித்தனர், சுவாமி தரிசனம் செய்ய இறங்கி உள்ளே சொல்ல, வாகன ஓட்டுநர் முத்து காரில் அமர்ந்திருந்தார்.
ஏன் நீ உள்ளே போகலையா ? என்று யாரோ கேட்பதைப் போல் குரல் கேட்டு இறங்கி சுற்றும் பார்த்தான், யாருமில்லை, ஆனால் குரலில் ஒரு ஈர்ப்பு சக்தி இருந்தது, மீண்டும் தேடி பார்த்துவிட்டு காரில் வந்து அமர்ந்தான் முத்து மீண்டும் குரல் அருகில் கேட்கவே கீழிறங்கிய பார்த்தபோது, நாய்ஒன்று வால் குழைந்து இவன் முன் நின்றது, வேறு ஆள் அரவமில்லை மெல்ல நாய் கிழக்குத்திசை நோக்கி நகர ஆரம்பித்தபோது அதனைப் பின் தொடர்ந்துச் சென்றான்.
கட்டிடம் கட்டப் படாமல் அஸ்திவாரம் மட்டுமே எழும்பிய நிலையில் இருந்த ஒரு சுவற்றில் , தோற்றத்தில் புத்தி சுவாதீனம் குறைந்தவர் போலவும், தலை முடிகள் படர்ந்து அழுக்கு வேட்டி கிழிந்த துண்டுமாய் அமர்ந்து இருந்தவர் முன்னே ஒரு சிறிய இலையில் இரண்டு இட்டிலிகளை யாரோ அப்போதுதான் வைத்து விட்டுப் போயிருக்க வேண்டும்,
அவர் அதை கவனியாது மேல் நோக்கி தனியாகப் பேசியபடி இருந்தார், அவர் முத்துவை தன் விழிகளால் பார்த்து கண்களால் வருடியபோது ஆலயத்தில் மணி அடித்தது, அந்த நேரம் முத்துவின் மனத்தில் ஒரு மணி சத்தம் அடித்தது, அந்தப் பார்வையில் ஒரு கருணையும், ஏதோ இவனிடம் அவர் சொல்ல வருவது போல இருந்ததாக உணர்ந்தான்.
அவரின் அருகே சென்ற நாய் அந்த இட்லியை சீண்டாமல் அருகில் அமர்ந்து கொண்டதைப் பார்த்த முத்து இவர் சாதரண ஆளில்லை என்பதை புரிந்துக் கொண்டான்.
" பிச்சைக்காரனை பிச்சையிடம் அழைத்து வந்த பிச்சையே ",
ஏன் நீ ஆலயம் உள்ளே போகலை ? என கேட்டார்.
நான் என் வேலையில் இருக்கின்றேன் சாமி என்ற முத்துவிடம்,
ஏன் அவனிடம் கேட்பதற்கு உன்னிடம் இல்லையா ? இல்லை, கொடுப்பதற்கு அவனிடம் ஒன்றும் இல்லை என்று நினைத்தாயா ? எனக் கேட்டார் கேட்பதற்கு நிறைய உள்ளது. அது எல்லாம் அவருக்குத் தெரியாதா ? என்றான் பவ்யமாக..
பசியிருக்கும் என தாயிக்குத் தெரிந்தாலும், அழுத பிள்ளைக்குத்தான் உடனே பால் கிடைக்கும் என்றார்.
இட்டிலியை ஒரு துண்டு எடுத்து சாப்பிட்டவர், மற்றொரு துண்டெடுத்து நாயின் வாயில் கொடுத்தார், அடுத்து ஒரு துண்டை எடுத்து இவனிடம் நீட்டியதை வாங்கி வாயில் போட்டதும், கிடைக்காத ஒன்று கிடைத்துவிட்டது மாதிரியான அனுபவம் அவனுள் நிகழ்ந்தது.
தன் முதலாளி, இறை பக்தி அதிகம் உள்ளவர், அவரையும் அழைத்து வந்து இவரை பார்க்கச் சொல்வோம் என மனதில் நினைத்த முத்துவிடம், அவனை அழைத்து வா, என உத்திரவு அவரிடத்திலிருந்து பதில் வந்தது.
முதலில் மறுத்தவர்கள், பின் முத்துவின் வற்புறுத்தலால் வந்தனர், வந்தவர்களிடமும் இட்டிலி நீட்டப்பட, அவரின் தோற்றத்தைப் பார்த்து வேண்டாம் என மறுத்து விட்டனர்.
"இருப்பவர்களிடம் இருப்பதில்லை, இல்லாதவனிடமே இருப்பான்" என்றவர் கையை அசைத்து போ போ என சைகை காட்டி அவர்களை அனுப்பினார்.
ஐயா, அவரைப் பார்த்ததும் எனக்கு ஒரு நம்பிக்கை வருகிறது என்று ஓட்டுனர் சொன்னதற்கு, அவன் ஒரு ஆளு, நீ கூப்பிட்டியே எனதான் வந்தேன் என்றார் முதலாளி.
மறுநாள் அவர்களது இருபது வயது சிறப்புக் குழந்தையை பள்ளிக்கு அழைத்துப் போகும் போது,
தம்பியை அவரிடம் அழைத்து போனால் என்ன ? என யோசித்தவன் முதலாளிடம் சொல்லாமலே அவரிடம் அழைத்துச் சென்றான்.
அதே இடத்தில் இன்றும் அமர்ந்து இருந்தவரிடம் போய் நின்றதும், அவனை அருகில் அழைத்தவர் முதுகில் தனது கரங்களால் தடவிக் கொடுத்து, அருகில் இருந்த மண்ணை எடுத்து அவன் வாயில் போட்டார், அவ்வளவுதான்,அந்தச் சிறப்புக் குழந்தை தெளிவாக பேசி நடக்க ஆரம்பித்ததை கண்டு இவன் மகிழ்ச்சியில் பூமிக்கும் வானத்திற்கும் குதித்தான், கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக அவரின் காலில் விழுந்து வணங்கி, கை கால் நடுங்கி இதுவரை காணாத ஒரு அனுபவத்தை உணர்ந்த முத்துவை போ, என்றார்
ஆனந்தத்தில் பள்ளிக்குப் போகாமல், முத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றான் முதலாளி பார்த்தால் நிச்சயம் சந்தோஷமடைவார்கள் என்று.
எத்தனை சிகிச்சைகள், கோயில், வேண்டுதல் மற்றும் பரிகாரங்கள்,என நினைத்தவன் அதற்கான நேரம் வந்ததும் எல்லா செயலும் தானாக யார் மூலமாகவோ நடந்து விடுகிறது என்பதை உணர்ந்து இருந்தான்.
முற்றிலும் மாறி இருந்த மகனை கட்டித் தழுவினர் பெற்றொர்கள், நடந்ததை முத்து அவர்களிடம் விளக்க, உடனே அவரைப் பார்க்க வேண்டும் என கிளம்பினர்.
முத்து எத்தனையோ மறுத்தும், தட்டில் பழங்கள்,வைத்து அதில் கட்டுக்கட்டாக பணம் வைத்து மேலே ஒரு ரூபாய் நாணயம் வைத்து அவரிடம் நீட்டினார் முதலாளி,
மெலிதாக சிரித்தவர் முத்துவைப் பார்த்தார். இவர்கள் திருந்தவே மாட்டார்களா ? என்பது போல இருந்தது அந்தப் பார்வை முத்துவிற்கு. அந்த ஒரு ரூபாய் நாணயத்தை குச்சியால் கீழே தட்டிவிட்டு அதை பார்த்தார், முத்துவைப் பார்த்தார் எழுந்து நடந்து போய்விட்டார்.
மெய் எது என உணர்ந்த முத்து அந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து பத்திரப்படுத்தினான்.
Leave a comment
Upload