தொடர்கள்
தொடர்கள்
பத்திரிகை ஆசிரியர் சுப்புசாமி...! 8 -புதுவை ரா. ரஜனி ஓவியம்: மணி ஸ்ரீகாந்தன்

20250403093501143.jpg

விழா நடக்கும் திறந்தவெளி மேடை. சிவப்புக் கம்பளம் அருகே, போடியம்வரை பிரசிடெண்ட் வாகனம் நுழைய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கோமுவின் கார் ஊர்ந்து வரும் லாவகத்தைப் பார்த்ததும் கைதட்டல்கள் எழுந்தன. சில கிழவிகள் விசில் அடித்தனர்; சிலர் காற்றை மட்டும் வெளியேற்றினர்.

நாசூக்காக தனது காரை நிறுத்திய விழாநாயகி, ஸ்டைலாய் டம்பப் பை ஊஞ்சலாட இறங்கினாள். தானே சுற்றி வந்து முன்பக்கக் கதவைத் திறந்தாள்.

'அட பிரெசிடெண்ட் யாரோ வி.ஐ.பி.யோடு வந்திருக்கிறாள்...!'

'பார்ப்பதற்கு வேடமிட்ட கமல்ஹாசன்போல்... அட கமல்தானா?'

பாட்டி கதவைத் திறந்துவிட்டு நிற்க, ஹாஃப் பிளேடு பதறிப்போய் இறங்கினான்.

"அட என்ன பெரீம்மா... நீங்க போய் எனக்கு மருவாதி தந்துகினு...?"

"உஷ்...!" என்றாள் பாட்டி. "நான் சொல்லும்வரை அமைதியாய் இரு, கருணா. எல்லாம் நன்மைக்கே...!"

அரங்கு ஸ்தம்பித்தது.

யாரது இந்த விஐபி லோக்கல் ரவுடி கெட் அப்பில்...?

வரவேற்புக் குழுவினர் சாதனைத் தலைவியை உபசரித்து நடுநாயகியாக அமரச் செய்தனர். அவரது பக்கத்தில் கருணா அமர வைக்கப்பட்டான்.

பாட்டிக்கு பெரிய பொக்கே ஒன்றை கொடுத்தனர். பாட்டி சைகை செய்ய இன்னொரு பொக்கேவை, சிறப்பு விருந்தினருக்குக் கொடுத்து கவுரவித்தனர்.

பிளேடு நாற்காலியின் நுனியில் அமர்ந்திருந்தான்.

"ப்ளீஸ் கருணா, நீ இந்த விழாவின் மிக முக்கியமான விருந்தாளி. சீட்டு நுனியில் உட்காராமல் நன்றாகப் பின்பக்கம் தள்ளி கேஷுவலா உட்கார்...!" என்றாள் பாட்டி.

"இருக்கட்டும்மா...!" என்று பவ்யம் காட்டினான். அவனுக்கு ஒரே கூச்சம்.

ரொட்டிக் கடையில் விதவித வண்ணத்தில் கேக்குகள் இருப்பதுபோல எதிரே விதவிதமான கிழவிகள். எண்ணெய் வழியச் சீவிய தலை, பாப் கட்டிங் மற்றும் சம்மர் கட்டிங்ஸ் தலைகள், கொண்டைத் தலை, குஞ்சலம் வைத்த நீண்ட வெள்ளிச்சடை, ஒரே ஒரு மொட்டைத் தலை என்று அவனுக்கு ஆச்சரியமான ஆச்சரியத்தை உண்டு பண்ணியது அந்தக் கூட்டம்.

ஆனால், அத்தனை பேரும் மினுக்கிக் கொண்டிருந்தார்கள். வைர மூக்குத்தி மூக்கு கிழவி, நெக்லஸ் கிழவி, நெற்றிச்சுட்டி - ஒட்டியாணம் அணிந்த பரதநாட்டியக் கிழவி, கிம்பர்லி வைரம் பூட்டிய ஆங்கிலோ - இந்தியக் கிழவி, மாடர்ன் தங்கட்டி கிழவி, ஜிமிக்கிக் கிழவிகள் மற்றும் எக்ஸட்ரா, எக்ஸட்ரா.

'ஒவ்வொரு பாட்டியையும் உஷார் பண்ணினால், ஏழு ஜென்மத்திற்கு குந்திக்கினு துண்ணலாம்...!'

'ச்சே...!' என்று மனதுக்குள் தன்னை அறைந்து கொண்டான் பிளேடு!

'இப்பத்தானே காருக்குள்ள பெரீம்மா படிச்சு படிச்சு அறிவை ஊட்டுச்சு. அதுக்குள்ளே குரங்கு மாதிரி மனசு தாவுதே. இன்னா மனுஷன்டா நீயி...?'

"ஹலோ மைக் டெஸ்டிங்..."

பொன்னம்மா டேவிட் வரவேற்புரை நல்க, ஒரு ஒட்டகச் சிவிங்கி கிழவி எழுந்து வந்து கோமுவிற்கான வாழ்த்துரை-1 வழங்க ஆரம்பித்தாள்.
*****
மரத்தின் மறைவிலிருந்து சுப்புசாமி எட்டிப் பார்த்தவர், லைவ் மின்சார வயரை மிதித்தவர்போல ஆனார். பாட்டி பக்கத்தில் தான் அமர வேண்டிய இடத்தில் ஹாஃப் பிளேடு இருப்பதை அவரது நெஞ்சத்தால் தாங்கவே முடியவில்லை. வேறு ஏதோ என்னமோ பிளானோடு காத்திருந்தவர், பாட்டி வீற்றிருந்த மேடையைப் பார்த்ததுமே, படித்த ஒன்று இரண்டு பதில்களை மறந்த பரீட்சை மாணவனின் நிலையை அடைந்தார்.

ஆனால்...விழாவில் பாராட்டு நிகழ்ச்சி நிரல் சுவையாக இல்லாமல், ஒரே மாதிரி அடைமழை பொழிவதை ரசிக்க மறந்த கிழக்கூட்டம், ரவுடி கருணாவையே கேள்விக்குறியோடு பார்த்துக் கொண்டிருந்தது.

பிரசிடெண்ட் கோமு லேசுப்பட்ட ஆள் இல்லை. சோழியன் குடுமி என்று சொல்வார்களே...பிரசிடெண்டின் கொண்டைகூட சும்மா இருக்காது. கழகத்தில் சற்றுப் புகழ் மங்கினாலோ அல்லது நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டாலோ அல்லது ஏதோ ஒரு காரணம்... பிரசிடெண்ட் ஒரு தொழிலதிபரை, ஒரு அயல்நாட்டவரை அழைத்து வந்து நிலைமையைச் சரிகட்டி விடுவாள். இப்போது ஒரு பேட்டை ரவுடியைக் கூட்டிவந்து அமர வைத்திருக்கிறாள்.

'யாராவது கிறுக்குப் பிடித்த பணக்காரன், நடிப்புப் பைத்தியம் பிடித்து ஒப்பனையோடு வந்து அமர்ந்து விட்டானோ?' என்ற கோணத்திலும் யோசித்தனர்.
*****
சுப்புசாமி பரபரத்தார். இன்னும் பொன்னம்மாவிடமிருந்து சமிக்ஞை வரவில்லையே? கோமு பேச ஆயத்தமாகுமுன் அழைப்பதாகச் சொன்னாளே? இருந்த படபடப்பால் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள, ஜிப்பாவிலிருந்து தன் செல்ல பொடி டப்பாவை எடுத்தார். கைகளால் ஆசையோடு அந்த அழகிய சில்வர் டப்பாவை உருட்டி செல்லம் கொஞ்சினார். விரல்களில் ஸ்பரிசம் செய்து மகிழ்ந்தார். மெல்ல மெல்ல மூடிப் பகுதியை திறந்தார். வழிந்து நிரம்பியிருந்த பொடியை மிருதுவாக இரு விரல்களால் ஏந்திப் பிடித்தார். இலேசாய் மண்ணில் உதறவிட்டார். அதற்குள் அவரது மூக்கு விடைத்துக் கொண்டு இன்ப லாகிரியை உள்வாங்க தயாரானது. தாத்தா விரல்களை ஸ்டைலாய் மூக்கு மெயின் துவாரத்தில் வைத்து 'சர்ர்...!' என்று உறிஞ்சி பொடியை ஏத்தியதுதான் தெரியும்...

"ஆ...ஐயோ செத்தேன்...!" என்று அலறினார்.

மூக்குக் குழல்களைத் தாண்டி கபாலமே வெடித்து விடும் அளவுக்கு மூளைவரை பொடி பாய்ந்து பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது

அது மூக்குப்பொடி அல்ல; மிளகாய்ப் பொடி...! ஃப்ரம் சாத்தூர்!

கண்ணிமைக்கும் நேரத்தில் அது நடந்ததால், தாத்தா பொறி கலங்கிப் போய், மூக்குகளும்...சாரி, மூக்கும் மூளையும் கலங்கி எரிச்சலால் கதறினார். நடந்தது எதுவும் புரியாமல் புல் தரையில் காட்டுவாசிகள் நடனம் ஆடுவதுபோல ஒரு டான்ஸ் ஆடினார் சுப்புசாமி.

அந்த நேரம் பார்த்தா பொன்னம்மா சமிக்ஞை கொடுக்க வேண்டும்?
பலன் இல்லை. அவசரமாய் பார்க்கிங் பகுதிக்கு தன் அடியாள் ஒருவரை ஏவி, தாத்தாவை தேடச் சொன்னாள். ஆனால், பார்க்க வந்த ஆள், தாத்தா காருக்குள் துடிதுடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அலறினாள்.

விழா மேடையில் பொன்னம்மாவை பாட்டி அழைத்தாள்.

"பொன்னம்மா, இங்கே ஏதேனும் பயர் ஆக்சிடெண்ட்டா? ஏன் மாறி மாறி அலறிக் கொண்டிருக்கிறார்கள்? கொஞ்சம் உடனடியாகச் சென்று பார்...!" என்று கட்டளையிட்டாள்.

(குறும்பு தொடரும்...)