கட்டுரையாளர் பரணீதரனுடன் கடந்த 114 வாரங்களாக கத கேளு கத கேளு தமிழோட கத கேளு என்ற கலந்துரையாடல் பாணியில் அமைந்த இந்த தொடர் இனிதே முடிவுற்றது.
இந்த தொடரில் தமிழ் மொழியோட கதையையும் அதன் அணிகலன்களையும் ஒரு நாவலுக்கு இணையான விறு விறுப்போடு தருவார் என்று ஆரம்பத்தில் சொல்லியிருந்தேன்.
அதற்கு ஏற்றார் போல் இந்த தொடர். முடிந்த பின் அதத் தொடர்ந்து படித்து ஆனந்தித்த அனைத்து தமிழ் நெஞ்சங்களில், இது நமது உயர் மொழியாம் உயிர் மொழி தமிழ் மொழியின் வரலாறு, இந்த பூமியில் இன்றும் சான்றாக இருந்திடும் அந்த வரலாற்று சான்றுகள், சம காலத்தில் வளர்ந்த மொழிகளோடு வளர்ந்த ஒப்பிடல், தொல் இலக்கியங்களின் மேற்கோள்கள்,படங்களுடன் விளக்கங்கள் மேலும் தமிழின் தற்போதைய கையாடல் என வியப்பிற்குரிய அளவிலான கட்டுரை தொடர் அமைத்த விதம் இவை எல்லாம் கட்டுரையாளரின் தமிழ் மொழி மீதான அளப்பரிய காதலை வெளிப்படுத்துகிறது. அவர் எந்த அளவுக்கு தமிழ் கடலில் ஆழமாக நீண்டும் பரந்தும் விரிந்தும் ஆய்வு செய்து தந்திருகின்றார் எனத் தெரிகிறது.
தமிழுக்கு இந்த தொடர் முத்தென ஒரு அணிகலனாய் அமைந்திருக்கும் என்பது நிச்சயம். இந்த ஆவணம் வருங்காலத்தில் தமிழ் மொழி ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்க்கு ஒரு அரிய குறிப்பு புள்ளியாய்(reference point) அமைவது என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.
தமிழன்னையின் ஆசி இவருக்குண்டு என்றே எனது முடிவு. இத்தனைக்கும் இவர் ஒரு தகவல் தொழில்நுட்பத்துறை பொறியாளர். அந்த துறையில் உலகின் பெரிய கம்பெனியில் chief architect ஆக பணி புரிந்து வருபவர்.
இந்த தொடரை ஒரு அட்டவணை மூலமே குறிப்பான தலைப்புகளாக்கி அதன்படியே ஒவ்வொரு வாரமும் உரையாடி வந்திருக்கிறார்.
இந்த தொடரைத் தொடர்ந்து வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் தக்க நிரூபணங்களோடு தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். அதன் படி அவரை
பக்தியால் தமிழ் வளர்ந்ததா, தமிழால் பக்தி வளர்ந்ததா? என்ற கேள்வியோடு அணுகினேன். இதோ அவரது பதில்
எந்த மொழியுமே முதலில் உருவாகும் பொழுது, அதன் கூடவே கடவுள் பக்தியும், நம்பிக்கைகளும் சேர்ந்தே உருவாகிவிடும். அதனால் தான் எந்த மொழி இலக்கியத்தை எடுத்தாலும், கடவுள் வாழ்த்து இல்லாத இலக்கியங்களை நம்மால் காண முடியாது. திருக்குறளில் கூட கடவுள் வாழ்த்து உள்ளது. நம்மிடம் இப்போது உள்ள மிகத் தொன்மையான தமிழ் நூலாகிய தொல்காப்பியத்தில் கூட தமிழ் நிலங்களில் கடவுள்களை பற்றிய குறிப்புகள் உள்ளன. பழம் நாகரிகங்களான, பாபிலோன், எகிப்து, சிந்து சமவெளி, சீனா போன்ற நாகரிகங்களில் கூட, கடவுள் மற்றும் பக்திக்கு என்று தனியாகவே மந்திரங்களும் அதற்குரிய வழிபாட்டு முறைகளும் இருந்தன. பிற்காலத்தில் உருவான ஆங்கிலோ சக்சன்ஸ், வைக்கிங்க்ஸ் போன்ற நாகரீகங்களும் தங்களுடைய படை கருவிகளில் கூட கடவுளின் முத்திரைகளையும் மந்திரங்களையும் எழுதி வைத்திருந்தார்கள். இப்படி உலகில் தோன்றிய அனைத்து விதமான மக்கள் கூட்டங்களிலும் பக்திக்கு என்று ஒரு தனி இடமே இருந்தது. நம்முடைய சங்க இலக்கியங்களில் கூட, நடுகல், வீரன் வழிபாடு, கோவில் அமைத்து வழிபாடு, இயற்கை வழிபாடு என அனைத்து விதமான பக்தி செயல்களும் நடந்து கொண்டுதான் இருந்தன. தொல்காப்பியத்தில் கூட
கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே
என்று கொடிநிலையையும் ( மன்னருக்குரிய கொடி, கடவுளின் கொடி), கந்தழி (நடுகல் வழக்கத்தையும்), வள்ளி(ஒரு வகை கோடி மற்றும் வள்ளல் தன்மை அதாவது அறம்) ஆகிய மூன்றும் கடவுள் வாழ்த்திற்கு நிகரானது என்று தொல்காப்பியர் கூறுகிறார். இன்றும் கூட நமது கோயில்களில் கொடிமரம் என்ற பெயரில் கொடிநிலையும், சிற்பங்களின் வழியில் கந்தழியும், தல விருட்சங்கள் என்ற பெயரில் வள்ளியும் வணங்கப்படுகின்றன.
சிவபெருமானின் உடுக்கை சத்தத்தாலேயே தமிழும் சமஸ்கிருதமும் உருவாகின என்று பழைய வடமொழி இலக்கியங்களான சம்புரகஸ்யம் மற்றும் மாகேஸ்வர சூத்திரங்கள் கூறுகின்றன. அகத்தியருக்கு தமிழ் மொழியை அருளியவர் சிவ பெருமான் என்று சம்புரகஸ்யம் கூறுகிறது.
இதையே அப்பர் என்று அழைக்கப்படுகின்ற திருநாவுக்கரசர் பெருமான், வானவன் காண் வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண் என்று சிவபெருமானை போற்றி துதிக்கிறார்.
இதேபோல நமது இலக்கியங்களும் (அவை எவ்வகையான இலக்கியமாகவும் இருக்கலாம்), உலகம் அனைத்திற்கும் வித்தாக இருப்பது இறைவனே என்று உரைக்கிறது. எடுத்துக்காட்டாக,
இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் -
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே என்று தொல்காப்பியர் கூறுகிறார்
பக்தி இலக்கியமான பெரிய புராணத்தில் - உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் என்று சேக்கிழார் பெருமான் பாடுகிறார்.
உலகப் பொதுமறையாம் திருக்குறளில் - ஆதி பகவன் முதற்றே உலகு என்று திருவள்ளுவ பெருமான் கூறுகிறார்.
பக்தி இலக்கியமாகிய கம்பராமாயணத்தில் - உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும் என்று கவிச்சக்கரவர்த்தி கம்பர் பாடுகிறார்.
பக்தி இலக்கியமாகிய திருவாசகத்தில் - எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று மாணிக்கவாசகப் பெருமான் பாடுகிறார்.
இதில் நாம் காட்டி இருப்பது மிகவும் சொற்பமான இலக்கியங்களை ஆகும். இதில் கூட சில இடங்களில் எந்த கடவுளை பற்றி பாடுகிறோம் என்று பெயர் கூட வராமல் அகத்திணையாகவே பாடி உள்ளார்கள். இதனால் தான் திருக்குறளில் திருவள்ளுவர் கடவுளை பற்றி பாடவே இல்லை என்று சிலர் உண்மையை இருட்டடிப்பு செய்கிறார்கள். இதற்கு நல்ல உதாரணம் கம்ப ராமாயணம். கம்பராமாயணம் என்பதே ராமனை பற்றிய புகழை பாடத்தான் கம்பர் உருவாக்கினார். அதில் உள்ள கடவுள் வாழ்த்தில், ராமன், திருமால் போன்ற எந்த கடவுளின் பெயரும் வராது. பொதுவாக இறைவன் என்ற பதம் ஆகவே இருக்கும். மாணிக்கவாசகம் என்னாட்டவர்க்கும் இறைவன் என்று சிவபெருமானை கூறுகிறார். இப்படி அவர்கள் எந்த கடவுளை வணங்கி கூறினோம் என்பதை வெளிப்படையாக கூறாமல் சென்றதால் தான் இன்று சில பிரிவினைவாதிகளால் நமது இலக்கியங்கள் தவறாக கோடு காட்டப்பட்டு அதற்கு தவறான அர்த்தங்களையும் கற்பிக்கிறார்கள். அகத்திணையில் கடவுளை வணங்கும் பொழுது, அவர்களின் பெயரோ அல்லது அவர்களின் குறிப்புகளோ எதுவும் வெளியே வராது என்ற அடிப்படையான ஒரு விஷயத்தை கூட தெரிந்து கொள்ளாமல், இவர்கள் தர்க்கங்கள் மற்றும் வாதங்கள் செய்கிறார்கள்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். பக்தியால் தமிழ் வளர்ந்ததா அல்லது தமிழால் பக்தி வளர்ந்தது என்ற கேள்விக்கு பதில் தமிழும் பக்தியும் சேர்ந்து வளர்ந்தது என்று தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதை புரிய வைக்கத்தான் தொல்காப்பிய முதல் பிற்கால சங்க இலக்கியங்கள் வரை நாம் மேலே பார்த்தோம். இதில் ஒரு படி மேலே போய் திருமூலர் தன்னுடைய திருமந்திரத்தில்,
பின்னைநின்று என்னே பிறவி பெறுவது
முன்னைநன் றாக முயல்தவம் செய்கிலர்
என்னைநன் ராக இறைவன் படைத்தனன்
தன்னைநன் ராகத் தமிழ்செய்யு மாறே - திருமந்திரம்
தமிழ் இலக்கியங்கள் செய்வதற்காகவே தன்னுடைய பிறவியை இறைவன் படைத்தான் என்று வலிமையாக தன்னுடைய வாதத்தை வைக்கிறார். ஞான நூலாகிய திருமந்திரத்தில் இல்லாத விஷயங்களே கிடையாது. அப்படிப்பட்டதான நூலில் திருமூலர் தமிழ் மொழியைப் பற்றியும் தன்னுடைய பக்தியை பற்றியும் ஒருங்கே கூறி பக்தியும் தமிழும் வேறு வேறு அல்ல என்பதை மிகவும் தெளிவாக காட்டுகிறார்.
சமயக்குரவர்கள் மற்றும் நாயன்மார்கள் அருளிய தேவார திருவாசகங்கள் மற்றும் திருமுறைகள், ஆழ்வார்கள் அருளிய 4000 திவ்ய பிரபந்தங்கள், அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ், வள்ளலார் பெருமான் அருளிய திருவருட்பா மற்றும் பல்வேறு புலவர்கள் பல்வேறு சமயங்களில் உருவாக்கிய பல்வேறு தமிழ் நூல்கள் அனைத்திலும் பக்தி ரசம் சொட்ட சொட்டவே உள்ளது. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என்ற முதுமொழிக்கு ஏற்ப, தமிழ் மொழியில் மற்றும் தமிழரின் வாழ்வில் கடவுள் மற்றும் பக்தி கிடையாது என்று பலர் கூறினாலும், வரலாற்றுச் சான்றுகளும், சங்க இலக்கியங்களும், நமது கோவில்களும், கல்வெட்டுகளும், நம்முடைய சாஸ்திர சம்பிரதாயங்களும் கடவுளும் பக்தியும் தமிழில் என்றும் உண்டு என்பதை நமக்கு மீண்டும் மீண்டும் உரக்க கூறிக் கொண்டுதான் இருக்கிறது. மூவேந்தர்களும், வேளீர்களும், நாட்டார்களும், ஊர் தலைவர்களும் பண்டைய காலம் முதலே கடவுளுக்கான கோவில்களை தமிழ்நாடு முழுவதிலும் கட்டி வைத்துள்ளார்கள். தமிழ் மொழியில் பக்தி என்றும் உள்ளது என்பதை காட்டுவதற்கு இது ஒன்றே போதும். மொழியில் மட்டும் தான் பக்தி இருக்க முடியுமா என்று கேட்டால், மௌனத்தில் கூட பக்தியை நம்மால் கொண்டு வர முடியும். அதற்கு நல்ல உதாரணம் தட்சிணாமூர்த்தி சுவாமி ஆவார். மௌனமே பதிலாக அவர் மோன ரூபியாக தான் எங்கும் காட்சியளிக்கிறார்கள். அதேபோல தவம் செய்யும் காட்சியில் சிவபெருமானும், யோக நித்திரையில் பெருமாளும், தவம் செய்யும் பார்வதி தேவியும், முருகப்பெருமானும், மற்றும் பல கடவுளரையும் நம்மால் பல்வேறு கோவில்களில் பார்க்க முடியும். அதேபோல பல கோயில்களில் ( பொதுவாக கேரளத்து கோவில்களிலும், நம்முடைய தென் தமிழ்நாட்டுக் கோயில்களிலும்) தாந்திரீக வழிபாடு என்று கைகளை வைத்து முத்திரைகளை உருவாக்கி சில பூஜைகளை செய்வார்கள். அவற்றில் மந்திரங்கள் இருக்காது. இதன் மூலமாக செயல்களாலும் பக்தி செய்ய முடியும் என்பதை நம்முடைய முன்னோர்கள் நமக்கு காட்டியுள்ளார்கள். இப்படி மனம், சித்தம், வாக்கு, காயம் (உடம்பு) போன்ற அனைத்து விதமான பொருள்களிலும் நம்மால் பக்தி செலுத்த முடியும். இதில் வாக்கிற்கு மட்டுமே மொழி தேவை. மற்ற அனைத்திற்கும் மொழி தேவையில்லை. இதனால் நாம் தெரிந்து கொள்வது தமிழும் பக்தியும் ஒரு சேர வளர்ந்தது என்பதுதான்.
இதன் தொடர்ச்சி அடுத்த இதழில் தொடரும்......
Leave a comment
Upload