தொடர்கள்
விகடகவியார்
அமைச்சர்கள் vs நீதிமன்றம்-விகடகவியார்

20250402194029742.jpeg

ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பை சொன்னதை கொண்டாடிக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு சென்ற வாரம் நீதிமன்றம் அடிமேல் அடியாக உத்தரவுகளை பிறப்பித்தது.

முதலில் துரைமுருகன் விஷயத்திற்கு வருவோம். 1996 -2001 திமுக ஆட்சி காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் வருமானத்திற்கு அதிகமாக 3.92 கோடி சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கை வேலூர் சிறப்பு நீதிமன்றம் கடந்து 2007-ஆம் ஆண்டு ரத்து செய்தது. இந்த வழக்கில் துரைமுருகனை விடுவித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் சென்ற வாரம் ரத்து செய்து தீர்ப்பளித்தார். வேலூர் சிறப்பு நீதிமன்றம் 6 மாதங்களுக்குள் இந்த விசாரணையை நடத்தி முடித்து விட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அடுத்து செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட வழக்கில் அவர் அமைச்சராக தொடர வேண்டுமா அல்லது ஜாமினில் தொடர்ந்து இருக்க வேண்டுமா என்பதை நான்கு நாட்களில் முடிவு செய்ய வேண்டும் என்று செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான ஒரு உத்தரவை பிறப்பித்து இருந்தது. நீதிபதி ஒகா " ஜாமினா, அமைச்சர் பதவியா இரண்டில் ஒன்றை தேர்வு செய்யுங்கள் " என்று கண்டிப்புடன் கூறியிருந்தார்.

அமலாக்கத்துறை உத்தரவு சட்டவிரோதம் என அறிவிக்க கோரி தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். அந்த உத்தரவில் அமலாக்கத் துறையின் விசாரணை சட்டவிரோதம் அல்ல என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்கள். தீர்ப்பு வந்த சில மணி நேரங்களிலேயே இதற்காகத்தான் காத்திருந்தது போல் அமலாக்கத்துறை டாஸ்மாக் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு வாருங்கள் என்று உத்தரவிட்டிருக்கிறது.

பொது மேடையில் அமைச்சர் பொன்முடி பெண்கள் பற்றியும் சைவ வைணவம் பற்றி இழிவாக பேசியிருந்தார். இந்த விஷயம் பெரிய சச்சையானது பாஜக அதிமுக கண்டித்தது. அதிமுக அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. இது போதாது என்று அதிமுக மகளிர் அணி பொன்முடியை கண்டித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தது.

அடுத்த கட்ட நடவடிக்கையாக நீதிமன்றம் பொன்முடி பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது நீங்கள் உடனே ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை. நீங்கள் வழக்கு பதிவு செய்ய மாட்டீர்கள் நாங்களே இந்த வழக்கை எடுத்துக் கொண்டு விசாரிக்கிறோம் என்றும் உத்தரவு போட்டது தொடர்ந்து அமைச்சர்களுக்கு எதிராக உச்சநீதி மன்றம், உயர்நீதிமன்றம் என்று சென்ற வாரம் ஆணைகள் வந்த வண்ணம் இருக்க முதலமைச்சர் அதிரடி முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்.

பொன்முடியை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள் என்று அமைச்சர் ஏவா வேலு மூலம் சொல்லி அனுப்பினார் முதல்வர். அவர் முதலில் ராஜினாமா செய்ய மறுத்தார். இதனால் எரிச்சலான முதல்வர் அவராக ராஜினாமா செய்தால் நல்லது இல்லை என்றால் டிஸ்மிஸ் செய்யப்படுவார் என்று எச்சரிக்கை செய்தார்.

உடனே பொன்முடி துணை முதல்வரை தொடர்பு கொண்டு என் மனைவி உடல்நிலை சரியில்லை. ஒரு மாதம் அவகாசம் தாருங்கள் அதன் பிறகு ராஜினாமா செய்கிறேன் என்றார். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததும் எனக்கு கட்சி கொரடா பதவி தர வேண்டும் என்றெல்லாம் பேசிப் பார்த்தார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு எந்த வகையிலும் உதவி செய்ய முடியாது என்று கையை விரித்து விட்டார். அதன் பிறகு தான் பொன்முடி ராஜினாமா செய்தார்.

செந்தில் பாலாஜி விஷயத்தில் நான் நிறைய நல்ல திட்டங்கள் மக்களுக்காக செய்தாலும் செந்தில் பாலாஜி வழக்கு நமக்கு எதிர்மறையான விமர்சனத்தை தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கும் போது நாம் இன்னமும் செந்தில் பாலாஜியை சுமந்து கொள்ள வேண்டுமா வேண்டாம் அவரை கழற்றி விடுவோம் என்று முதல்வருக்கு வேண்டியவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அவரை ராஜினாமா செய்ய சொல்லி முதல்வர் உத்தரவிட அவர் ராஜினாமா செய்தார்.

பொன்முடியைப் பொறுத்தவரை இனிமேல் அவருக்கு கட்சியில் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்று சொல்ல முடியாது. கட்சியில் நீண்ட நாட்கள் ஆக பதவியை அனுபவித்தவர் ஆட்சியிலும் நீண்ட காலம் அமைச்சராக இருந்தவர் இத்தோடு போதும் இனிமேல் அவருக்கு கட்சியிலும் ஆட்சியிலும் வாய்ப்பு கிடைக்காது என்ற பேச்சு வரத் தொடங்கி விட்டது.

செந்தில் பாலாஜி மீது முதல்வர் இப்போதும் பாசமாக இருக்கிறார். துணை முதல்வர் ஆதரவு அவருக்கு என்றும் உண்டு என்றெல்லாம் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் பேசிக் கொண்டிருந்தாலும் முதல்வர் குடும்பம் செந்தில் பாலாஜி வழக்கே அவர் அதிமுகவில் அமைச்சராக இருந்தபோது ஊழல் செய்தார் என்று தொடரப்பட்ட வழக்கு. நாம் அவரை பாதுகாப்பதற்காக இது அதிமுகவில் அவர் அமைச்சராக இருந்தபோது போடப்பட்ட வழக்கு என்பதை கூட சொல்ல முடியாமல் நாம்மூடி மறைத்து அவரை பாதுகாக்க வேண்டி இருக்கிறது இது தேவையா என்று இப்போது யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள் முதல்வர் குடும்பத்தினர்.

செந்தில் பாலாஜி எதிர்காலமும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பதுதான் உண்மை என்கிறது அறிவாலயம் வட்டாரம். அமைச்சர் பதவி பறிபோனதை தொடர்ந்து பொன்முடி செந்தில்பாலாஜி இருவரும் சட்டசபைக்கு வருவதை நிறுத்திக் கொண்டார்கள். உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றம் என்று திமுக அமைச்சர்களுக்கு எதிரான தொடர் தாக்குதலை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திமுக முழித்துக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.