கடந்த பிப்ரவரி மாதத்தில் கோவை -திருப்பதி இன்டர்சிடி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ஆந்திராவைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணை , ஹேமந்த் குமார் என்னும் ஆண் பலவந்தப்படுத்திய சம்பவம் நினைவில் இருக்கிறதா ?
தன்னைக் காத்துக்கொள்ள அப்பெண் போராடியதும் , அவளை அடைய முடியாத அந்த முரடன் ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விட்டதும் , அதனால் அப்பெண் படுகாயம் அடைந்ததும் ,அவள் சுமந்த நான்கு மாத கரு கலைந்ததும் நம் விகடகவி இதழில் " பயணங்களும் பாதுகாப்பில்லை" என்ற தலைப்பில் விவரமாக எழுதி இருந்தோம் .
ரயில்வே காவல் படையின் காவலை மீறி நடக்கும் இது போன்ற சம்பவங்கள் நடந்துக் கொண்டு இருக்கின்றன. ரயிலில் தனியே பயணம் செய்ய நினைக்கையில் ஒரு பதட்டமும் , பாதுகாப்பற்ற மனநிலையும் பெண்களுக்கு ஏற்படவே செய்கிறது ,
இந்த பதட்டத்தைத் தணிக்க , ரயில்வே காவல் துறை 'பெண் பயணிகள் பாதுகாப்பு குழுவை' துவக்கி உள்ளது . பெண் பயணிகளைக் கொண்டே இக்குழுவை அமைத்துள்ளது
இக்குழுவில் ரயில்வே போலீசார் , ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், ரயில்வே அதிகாரிகள் , மாதாந்திர சீசன் டிக்கட் எடுத்து பயணிக்கும் பெண்கள், வழக்கமாக ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகளை உறுப்பினராக்க முடிவு செய்யபட்டது .
இது பற்றி அறிந்தவுடன் , தினமும் அல்லது அடிக்கடி ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகள் உற்சாகத்துடன் இக்குழுவில் இணைந்துக் கொள்ள முன் வந்துள்ளனர் . தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கு உறுதுணையாக இவர்கள் இருப்பார்கள்
கடந்த ஒரு மாதத்தில் சுமார் 3000 பெண்கள் இப்பாதுகாப்பு குழுவில் தன்னார்வலராக தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் . சென்னை ரயில்வே காவல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இப்பாதுகாப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பெரிய ரயில் நிலையங்களில் தலா 100 பெண்களும்,சிறியரயில் நிலையங்களில் தலா 50 பெண்களும் இக்குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிற்கும் தலைமை .பொறுப்பாளராக காவல்துறை ஆய்வாளர் , உதவி ஆய்வாளர் உள்ளனர்.சென்னை சென்ட்ரல் , எழும்பூர் , சேலம் ,கோவை போன்ற பெரிய ரயில் நிலையங்களில் தலா நூறு பெண்கள் இக்குழுவில் சேர்ந்துள்ளனர் .
பயணத்தின் போது பெண்களுக்கு எதிராக வன்முறை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை இக்குழு உறுப்பினர்கள் தகவல் தருவார்கள்.சக பயணிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இவர்களது செயலாக்கம் இருக்கும்.
சக பெண் பயணிகளைக் கொண்டே பெண்கள் பத்திரமாக பயணம் செய்ய ரயில்வே காவல் படை இத்தகைய முயற்சியை மேற்கொண்டு இருப்பது பாராட்ட தக்கது .
Leave a comment
Upload