“இதோ பாரு ஜெயராஜு… உனக்கு நூறு முறை எச்சரிக்கை பண்ணிட்டேன்.இந்த வாரம் கலெக்டர் வந்து செக் பண்ணினா அபராதம் மட்டும் இல்லை. லைசென்ஸ் கான்செல். கடை ஷட்டர் தாண்டி நடைபாதை பூரா இருக்கற மளிகை சாமானெல்லாம் முதல்ல எடுக்கற வழியைப் பாரு.”
சும்மா கெடுபிடி பண்ணுவதுபோல் மிரட்டுவது, மாமூல் அதிகம் வாங்க ஒரு டெக்னிக். இது ஜெயராஜூக்கும் தெரியும். நடந்த இரண்டு மூன்றுவிபத்துகளுக்கு தன் கடையும் காரணம் என்று அறிந்தாலும் ஆக்கிரமிப்பைக்கைவிட்டதில்லை. அதுக்குப் பேர் எக்ஸ்ட்ரா பிஸினஸ்.
யாருக்கு, எந்தெந்த சீசனில், எவ்வளவு லஞ்சம் கொடுக்கவேண்டும்என்பதெல்லாம் அத்துப்படி. மகன், கடை வேண்டாம் என்று ஐ.டி. கம்பெனிக்கு போய்விட்டான். மகள், வள்ளி. படிப்பு முடிந்து கரை ஏறிவிட்டால், ஊரைப் பார்க்கப் போய்விடுவான். அல்லதுகொடுக்கவேண்டியதைக் கொடுத்து இதையே பெரிய கடையாக்கிஉட்கார்ந்துவிடுவான்.
ஆறு கிலோமீட்டர் பஸ்ஸில் சென்று பின் ஐந்து நிமிடம் நடந்தால் வள்ளியின் பள்ளி.
முன்பெல்லாம் மளிகைக் கடையில் வாங்கும் சிறுவர்களுக்கு கொசுறுகொடுப்பது உண்டு. பெரும்பாலும் உடைத்த கடலை அல்லது துண்டு வெல்லமாக இருக்கும். அது ஒரு வியாபார யுக்தி. இப்போது சூப்பர் மார்க்கெட் வந்த பிறகு அது போய்விட்டது.
ஆனால், மற்ற இடங்களில் வேறு வடிவில் இன்னும் இருக்கிறது. விரும்பிக்கொடுப்பது வேறு. மிரட்டி வாங்குவது வேறு. சாலை ஆக்கிரமிப்பும் கொசுறுதான். இது தான் என் எல்லை என்று இருக்காமல் கொஞ்சம்கொஞ்சமாக அதிகாரம் எடுப்பது. இதில் பக்கத்தில், எதிரில் கடைவிரித்தவனோடு போட்டி வேறு.
இந்த ஊர் என்றில்லை. எந்த ஊரிலும் அறம் அறவே இல்லை என்பதுபோல்ஓர் ஒற்றுமை. துணிச்சலாகக் கேட்கும் அதிகாரிகள் இல்லை. கடை உள்ளே காலண்டர் தொங்கும். அதில், யார் ஆட்சியோ சிரித்தபடி அவர் படம் இருக்கும். கடைக்காரருக்கு அந்தத் தலைவரைப் பிடித்துப்போய் காலண்டர் மாட்டவில்லை. ‘என்னிடம் வைத்துக் கொள்ளாதே… நிம்மதி போய்விடும்’ என்று எச்சரிக்கும் சிக்னல்தான் அது.
சாலையை ஆக்கிரமித்துக் கடையை விரிவுபடுத்துவது ஆபத்தான போக்கு.இதில், ஆளாளுக்கு ஒரு நியாயம். ஏரி நிலத்தை ஆக்கிரமித்தவனைவிட்டுவிட்டு என்னிடம் வருகிறாயே? என்று அவர்கள் கேட்டால் நம்மாலும்பதில் சொல்ல முடியாது.
சொன்ன தொகைக்கு ஆட்டோ புக் செய்தாலும் கொசுறுகொடுக்கவேண்டும். சிலர், கூடுதலாக இத்தனை தர முடியுமா என்று கேட்ட பின்தான் வருகிறார்கள். அதிகம் கேட்க, இரவு நேரமோ, மழையோ காரணம்இல்லை. கேட்டுப் பார்ப்போம் கிடைத்தால் எக்ஸ்ட்ரா லாபம். கொடுப்பவனுக்கு எக்ஸ்ட்ரா நஷ்டம். அதைப் பற்றி எனக்கென்ன ?மறுத்தால், சவாரி கேன்சல். அடுத்த ஆள் புக்கிங். ஆட்டோ இயந்திரம் முதல்அரசு இயந்திரம் வரை கொசுறு இல்லாமல் எதுவும் இயங்காது.
ஹோட்டல்களில் கொசுறு வேறு பெயரில். Tips… To Insure Prompt Service. ரயில்வே புக்கிங்-ல் தட்கல் என்ற பெயரில் அதிகாரப்பூர்வக்கொசுறு. சினிமா தியேட்டர் வாசலில் வெற்றி நடைபோட்ட கொசுறு, இப்போது ஐ.பி.எல். டிக்கெட்-ஆக நுழைந்து உள்ளே சியர்ஸ் கேர்ள்ஸ்-ஆகஆடுகிறது.
…
பள்ளிக்குச் செல்லும் சாலையின் இருபுறமும் எகிறி எகிறி கடைகள். வள்ளிஒருவிதமாக வளைந்து வளைந்தேதான் வரவேண்டியிருக்கும். நடைபாதை தாண்டி சாலை வரை பொருட்களைப் பரத்தி வைத்திருப்பார்கள். அன்றும்வழக்கம்போல்தான் வந்தாள். எங்கிருந்தோ சாலைக்குக் கட்டுப்படாமல்வேகமாக வந்த ஆட்டோ மோதுவதுபோல் வரவும், தப்பிக்க, நம்பிக்கையோடுசாலையோரம் ஒதுங்கினாள். அந்த திடீர் பஜ்ஜி கடையின் கட்டையில்தடுமாறி விழுந்தாள். தளும்பிய கொதிக்கும் எண்ணையில்… வள்ளியின்அலறல் போக்குவரத்தையே நிறுத்தியது.
உயிர் தப்பினாலும், சிகிச்சைக்குப் பின் தழும்புகள் முகத்தில் மாறவில்லை.வேலைக்கும், திருமணம் செய்து புகுந்த வீட்டுக்கும் செல்லவேண்டிய பெண்ணின் முகம் ஜெயராஜின் மனதையே மாற்றிவிட்டது. இப்போதெல்லாம் மாநகராட்சி சிப்பந்திக்கு லஞ்சம் கொடுப்பதில்லை. கடையில் எந்தக்காலண்டரும் இல்லை. அதற்கான தேவையும் இல்லை.
அவன் கேட்காமலேயே வாழ்க்கை அவனுக்குக் கொசுறாக கொஞ்சம்ஞானத்தைக் கொடுத்துவிட்டது.
***
Leave a comment
Upload