தொடர்கள்
பொது
இறவாமை!!! 2050க்கு பின்! - தில்லைக்கரசிசம்பத்

சாகா வரம் கொண்டு வாழ்வதற்கு வழி கண்டுப்பிடித்து விட்டோம் என ஏறக்குறைய அறிவியல் உலகம் அறிவித்திருக்கிறது.

2050ல் மனிதன் மரணத்தை வென்றுவிடுவான் என்கிறார்கள். விஞ்ஞானிகள் மனித மூளையின் செயல்பாடுகளை ரோபோட்களில் இணைக்கும் ஆராய்ச்சிகளில் முன்னேறி வருகிறார்கள். அதில் ஒன்று ஆண்டாராய்டு அவதாரங்கள் (Android Avatars – Escaping Biological Limits) மனிதனின் அறிவும் நினைவுகளும் கணினியில் பதிவுசெய்யப்பட்டு பின்னர், இந்த “மனித மனதை” ஒரு ஆண்ட்ராய்டுக்கு (மனித வடிவ ரோபோட்) இடமாற்றம் செய்தால், உடலை இழந்தாலும், அவன் (இயந்திரத்தனமாக)வாழ்கின்றான். அடுத்ததாக முப்பரிமாணத்தில் பிரதி எடுக்கப்படும் மனித உறுப்புகள். (3D-Printed Organs & Limbs – Reconstructing the Body ).

இது உண்மையிலேயே உயிரியல் புரட்சி. மனிதன் மரணம் அடைய முக்கியக் காரணம் மெல்ல வயதாக வயதாக செயலிழக்கும் இதயம், சிறுநீரகங்கள் போன்ற உடல் உறுப்புகளே!. 3D பிரதிகள் மூலம் உண்டாக்கப்படும் புதிய உறுப்புகளை மனிதனுக்குள் பொருத்தும்போது ஆயுட்காலம் நீடிக்கப்படும்.

தற்போது 3D பிரதி தோல் குறித்த ஆராய்ச்சி அமெரிக்காவின் Wake Forest Institute for Regenerative Medicine ல் நடந்து வருகிறது. இந்த தோல், மனித உடலில் இணைந்து வளரக்கூடியது.இது போல் 3D இரத்தநாளங்கள் (Blood vessels) பிரதிகளை இயற்கையாக இரத்தம் செல்லும் வகையில் KTH Royal Institute of Technology ஸ்வீடனில் உருவாக்கி இருக்கிறார்கள் இஸ்ரேலில் உள்ள Technion Institute, மனித மூளையின் ஒரு சிறிய பகுதியைப் போல செயல்படும் 3D பிரதியை உருவாக்கியுள்ளது.

இது மரணத்திற்கு முந்தைய மூளை செயலிழப்பு (Alzheimer’s disease) போன்றவற்றுக்கு தீர்வாக அமையும். 3D அச்சிடப்பட்ட சிறுநீரகம், இதயம் இன்னும் சோதனை நிலையில் உள்ளன. மரணத்தை வெல்ல இன்னொரு வழிமுறையாக “செயலற்ற உறக்கநிலை பதனப்படுத்தல்” (Cryogenic Preservation) என்ற விதத்தில் ஒரு மனிதனின் உடலை அல்லது அவரின் மூளை போன்ற முக்கிய உறுப்புகளை மரணம் ஏற்பட்டவுடன் -196°C திரவ நைட்ரஜனின் குளிர்ச்சியில் பாதுகாப்பாக வைத்து காப்பாற்றுவது.

ஒரு வேளை எதிர்காலத்தில் நவீன மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் வளரும்போது, அந்த மனிதனை மீண்டும் உயிருடன் கொண்டு வரலாம். ஏற்கனவே உயிரற்ற உடலை பாதுகாக்க என இரண்டு நிறுவனங்கள் (Alcor Life Extension Foundation, Cryonics Institute) அமெரிக்காவில் உள்ளன. தற்போது அதில் குளிர்ந்து கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான மக்களின் உடல்கள் எதிர்காலத்தில் உயிர்த்தெழுதலுக்காக காத்திருக்கின்றன. இதெல்லாம் சயன்ஸ் ஃபிக்‌ஷன் சினிமாவல்ல. அக்மார்க் அறிவியல் ஆராய்ச்சிகள்.

இதுவரை எந்த உடலும் உயிரோடு எழவில்லை என்றாலும், இது போன்ற ஆராய்ச்சிகள் , உயிரோடு இருப்பவர்களை கூட குறிப்பிட்ட காலம் வரை செயலற்ற உறக்கநிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்கின்றன. உயிருள்ள ஒருவரின் உடலை குளிர்விக்கும் போது நீர் உறைவினால் உயிரணுக்களில் உண்டாகும் சேதம் “பனிபடிகங்கள் சேதம் “(Ice crystal damage)எனப்படுகிறது. தற்போது சேதமில்லாமல் உடலை குளிர்விக்கும் தொழில்நுட்பங்களை கண்டறிந்துள்ளார்கள். சிறு உயிரினங்களான வட்டப்புழுக்கள், முயல் மூளைகளை உறைய வைத்து மீண்டும் அவைகளை வெற்றிகரமாக உயிர்ப்பித்திருக்கிறார்கள் வருங்காலங்களில் தொலைதூர பிரபஞ்ச பயணங்களில் ஒரு மனிதன் தனது 30 வயதில் பிரயாணிக்கிறார் என்றால், இந்த முறை படி 1000 ஆண்டுகள் கழித்தும் மனிதன் தன் உடலுக்கு அழிவில்லாமல் அதே 30 வயதில் சேரவேண்டிய புது கிரகத்தில் சோம்பல் முறித்தபடி அழகாக கண் விழிக்கலாம். நாசாவின் “டார்ப்பர்“(torpor) ஆராய்ச்சி இது குறித்து தான் நடந்துக்கொண்டிருக்கிறது.

எத்தனை பேருக்கு இப்படி பயணித்து இன்னொரு கிரகத்தில் விழிக்க ஆசையிருக்கும் என்று தெரியவில்லை. எழுந்தவுடன் டீ காபி கிடைக்குமா கவலை படுபவர்கள் இந்த ஆட்டைக்கு வரக்கூடாது.

அடுத்ததாக மின்னணு உணர்வும், அதை சேமிக்கும் நிரந்திர இணைய உலகமும் (Digital Consciousness & Virtual Realms – Existing in the Cloud) மனிதன் மரணத்தை வெல்லும் வழியாக கண்டறிந்துள்ளார்கள். ஒரு மனிதனின் தன்னுணர்வை (Consciousness) மின்னணு வடிவமாக மாற்றி, மெய்நிகர் உலகத்தில் (Virtual Realms) நிரந்திரமாக வாழவைப்பது.அவர் உடல் இல்லாமல், இருந்தாலும் அச்சு அசலாக மனிதர்தான். ஆன்மாவைப் போல நம்முடன் வாழ்வார்.

அரசியல்கட்சிகளின் பிரபல அரசியல் தலைவர்கள் இறந்து போனாலும் அவர்களின் ஆன்மாக்கள் கட்சிகளை வழி நடத்தும் கொடுமைகளையும், இன்னும் கட்சி முழுமையாக தம் கையில் வந்து சேரவில்லையே என்ற ஆதங்கத்தில் “ டேய் தகப்பா?!” என வாரிசுகள் ரகசியமாக புலம்புவதையும் ஜாலியாக பார்க்கலாம். இந்த மின்னணு ஆவிகளை பிடித்து வைக்க எலான் மஸ்க்கின் Neuralink போன்ற நிறுவனங்கள் முயன்றுகொண்டிருக்கின்றன. Cyborg Integration – Cyborg என்பது “Cybernetic Organism” என்ற சொல்லின் சுருக்கம். அது மனிதன் + இயந்திரம் என்ற கலவையை குறிக்கிறது. எதிர்காலத்தில் நனோ ரோபோக்கள் நம்முடைய உடலை தினசரி பராமரிக்கும் “உள்ளிருக்கும் மருத்துவ குழுவாக” இயங்கும்.

சுஜாதாவின் யயாதி கதை படித்திருக்கிறீர்களா... ?? குளிகை சாப்பிட்டு கடைசியில் ஒரு குழந்தையாக மாறும் அந்த சிறுகதை தற்போது நினைவுக்கு வருகிறது.

இந்த ஆராய்ச்சிகள் எல்லாமே சாத்தியங்கள் தான். சந்தேகமேயில்லை.

இளமையாகவே இருப்பதில் நம்மூர் விளம்பரங்கள் வலிந்து வலிந்து கிரீம் விற்கும் நிலையில், இது போன்ற அறிவியல் ஆராய்ச்சிகள் சில நேரங்களில் பயமுறுத்துகிறது.

மரணம் என்பது ஒரு வகையான விடுதலை. மரணத்திலிருந்தே விடுதலை என விஞ்ஞானம் தீர்வு கொடுத்தால்.......

சாவு இல்லா வாழ்வு...... வரமா? சாபமா ?