மே 2, 2025 அன்று ஆதி சங்கரரின் 2,532 பிறந்த நாள்.
(குகை மந்திர், மத்திய பிரதேசம்)
2,535 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது கி மு 509 ஆம் ஆண்டு கேரளத்தில் காலடியில் அவதரித்து ஐந்தே வயதுக்குள் வேதங்கள் அனைத்தையும் கற்றுத் தெளிந்து இந்து மதத்தை தன் 32 வயதிற்குள் இந்தியாவில் மீண்டும் நிரந்தரமாக நிலை பெறச் செய்தவர் ஆதி சங்கரர்.
அவர் சிறுவனாக இருந்த போது, தனது குருவைத்தேடி நர்மதையை அடைந்து அங்குதான் ஒரு குகையில் தனது குருவான ஸ்ரீகோவிந்த பகபத் பாதரை அடைந்தார். குரு கோவிந்த பகவத்பாதாளிடம் சந்நியாசம் பெற்று சாஸ்திரங்களை கற்றார் ஆதிசங்கரர்.
அந்த குகை மந்திரை உலகிக்கு அறிமுகப்படுத்தியதில் காஞ்சி காமகோடி பீடத்தின் 68ஆவது பீடாதிபதியான ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் பங்கு ஒரு லீலை என்றே சொல்ல வேண்டும்.
ஸ்ரீமஹா பெரியவரும் ஶ்ரீஆதிசங்கரரும் ஒன்றே.”
1970களில் மத்ய பிரதேசத்தில் மின் வாரியத்தில் மின் பொரியாளராக பணியாற்றி வந்த நாகராஜ சர்மா தான் இந்த குகையைக் கண்டுபிடித்தார்.
ஒரு தமிழ்ப் பாட்டியின் அசரீரி கேட்டதை உணர்ந்த அவர், 1971-ம் ஆண்டு அந்தப் புனிதமான குகை எங்குள்ளது என்பதை தேட ஆரம்பித்தார்.
“நர்மதை ரகசியம்” என்ற இந்தி புத்தகத்தில், ஆதி சங்கரர் சாங்கல்காட் என்ற இடத்தில் இருந்ததாக படித்ததில் நாகராஜ சர்மாவுக்கு உற்சாகம் மேலிட்டது.
நர்மதையின் மறுகரையில் அந்த குகை இருப்பதாக தெரிந்து படகில் ஆற்றைக் கடந்தனர். நர்மதைக் கரையோடு சுமார் நாலு கிலோ மீட்டர் நடந்தபிறகு ஒரு மலைமேட்டை அடைந்தனர். அங்குதான் ஒரு குகை தென்பட்டது. நதியிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அந்த குகை இருந்தது. புலி முதலான துஷ்ட மிருகங்கள் அந்த குகையில் வாசம் செய்து கால்நடைகளை தாக்கி வந்ததால் குகையின் வாயிலை பல ஆண்டுகளாக மூடியிருந்தார்கள்.
சங்கரரும் ஷண்மதமும் என்ற ஆங்கில புத்தகத்தில் ஆதிசங்கரர் தன் குருவை சங்கர கங்கா என்ற இடத்தில் சந்தித்தார் என்று கண்டிருந்தது. இந்த இடம் ஸ்ரீ மஹா பெரியவாளுக்கு மட்டுமே தெரியும் என குறிப்பிட்டிருந்தது.
தேனம்பாக்கத்தில் பல நாட்களாக ஸ்ரீ பெரியவா அருள் பொழிந்து கொண்டிருந்த சமயம் அது.
ஸ்ரீ நாகராஜ சர்மா தரிசனத்திற்குப் போய் நின்றபோதே ஸ்ரீ பெரியவர் ஒரு அதிசயத்தை நிகழ்த்தி அருளினார். இவர் வந்திருப்பதை பார்த்ததும் ஸ்ரீ பெரியவா இவரை பிற்பாடு கூப்பிடுவதாகவும் அதுவரை நேரத்தை வீணாக்காமல் எடுத்துவந்த புத்தகங்கள், குறிப்புகள், வரைபடங்கள் முதலானவைகளை ஒரு முறை நன்றாக பார்த்து வைத்துக் கொள்ளும்படியும் உத்தரவிட்டார்.
நாகராஜ சர்மாவிற்கு இதைக் கேட்டதும் தூக்கிவாரிப்போட்டது. எதற்காக வந்துள்ளோம் என்பதை அங்கு யாருக்கும் அவர் தெரிவிக்கவில்லை. இந்த விஷயமாக புத்தகங்கள், குறிப்புகளோடு வந்திருப்பதையும் யாரிடமும் சொல்லவில்லை. அப்படியிருக்க மகான் எப்படித்தான் இதை கண்டு பிடித்தாரோ என்ற பிரமிப்பு மேலோங்க, பரீட்சை ஹாலுக்கு நுழையுமுன் மாணவன் படிப்பது போல ஸ்ரீ பெரியவாளின் உத்தரவுபடி எல்லா குறிப்புகளையும் ஒருமுறை அவசரமாக அசை போட்டார்.
நாகராஜ சர்மா ஆவலுடன் எதிர்பார்த்த நேரம் வந்தது. ஸ்ரீ பெரியவாளுடன் நேருக்கு நேராக உட்கார்ந்து பேசும்படி வசதி செய்யப்பட்டிருந்தது. "நீ எவ்வளவு தூரம் இந்த குகை பற்றி ஆராய்ந்திருக்காய்? அதைச் சொல்லு” என ஸ்ரீ பெரியவா ஆரம்பித்தார். இவர் தயங்கினார். மொத்த விவரங்களையும் சொல்வதென்றால் நேரமாகுமே, அங்கு தரிசனத்திற்கு காத்திருப்பவர்களுக்கு இடைஞ்சலாகுமே என அவர் எண்ணம் ஓடியது.
"ஏன் பேசாமலிருக்கே? தைரியமாச் சொல்லு. மத்தவாளைப் பத்தி கவலைப்படாதே. அவாளும் தெரிஞ்சிக்கட்டுமே” என்றார் ஸ்ரீ பெரியவா. சுமார் இருபது நிமிடங்கள் இதைப்பற்றி விவரித்தார். நடுவில் இவர் தடுமாறிய சமயங்களில் சரிபடுத்தியும், உச்சரிப்பில் எழுந்த குற்றங்களை திருத்தியும் ஸ்ரீ பெரியவா அருளினார். முடிவில் சுமார் ஐந்து நிமிடங்கள் தியானத்தில் இருந்தார். தன் ஞானதிருஷ்டியால் அறிந்தவர் போல அருளுரை வழங்கினார்.
“நீ பார்த்த சாங்கல்காட் குகை நர்மதை நதியிலிருந்து தூரத்தில் இருப்பதா சொன்னாய். குகை நதியின் பக்கத்திலேயே இருக்கவேண்டும். நதியின் நீர் குகைக்குள் வர ஒரு வசதியும் இருக்க வேண்டும். ஆகையால் சாங்கால்காட் குகையாக அது இருக்க முடியாது. சொரூபானந்தர் அந்த பக்கத்துக்காரர்தானே? நான் சொன்னதை வைத்துக் கொண்டு மீண்டும் அவரையே பார்” என்றார் ஸ்ரீ பெரியவா.
சாட்சாத் ஆதிசங்கரரின் திரு அவதாரமான ஸ்ரீ பெரியவாளே அந்த குகைக்கான அடையாளங்களை சொன்னதில் நாகராஜ சர்மாவிற்கு மேலும் சில விபரங்கள் புலப்படலாயின. ஸ்ரீ சங்கரநாராயண சாஸ்திரிகள் எழுதின “சங்கரர் காலம்” என்ற ஆங்கில நூல் கிடைத்தது.
ஸ்ரீ மஹா பெரியவர் சொன்ன அடையாளங்களை கொண்டு தேடியதில் 1978-ம் ஆண்டு சிவராத்திரியன்று அந்த குகை இருந்த இடத்தை நாகராஜ சர்மா காணும் பேரு பெற்றார். பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான ஓம்காரேஷ்வரர் ஆலயம் நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ளது. கங்கைக் கரை விஸ்வநாதர், இறந்தபின் அளிப்பது முக்தி, ஆனால் நர்மதை கரை ஓம்காரேஷ்வரர் இருக்கும்போதே சித்தி அளிப்பவர்.
ஆதிசங்கரருக்கு இந்தத் தலத்தில்தான் சந்நியாசம் அளிக்கப்பட்டது.
அந்தக் குகையில் நிஷ்டையிலிருந்த ஸ்ரீ கோவிந்த பகவத்பாதரை திடீரென்று அங்கே புகுந்த வெள்ளத்திலிருந்த காப்பாற்ற நதிநீரைக் கமண்டலத்தில் மொண்டு நர்மதையை உடனே அடக்கினார். இந்தக் குகையில்தான் இரண்டாண்டு காலம் ஸ்ரீ சங்கர பகவத்பாதாள் தங்கியிருந்து குருவிடம் பயின்று பல நூல்களை இயற்றினார். ஸ்ரீ காஞ்சி முனிவரின் ஞானதிருஷ்டி அருளிய அடையாளங்களைக் கொண்ட குகை ஒன்று தென்பட்டது.
மகான் கூறியபடி குகையிலிருந்து புனித நீரை எடுத்து வர நர்மதை நதிவரை ஒரு சுரங்கம் இருந்ததைக் கண்டதும் நாகராஜ சர்மாவிற்கு வியப்பு மேலிட்டது. ஈஸ்வர சன்னதிக்குப் போய் வர ஒரு சுரங்கமும் இன்னும் இரண்டு சுரங்கங்களும் இருந்தன. இந்த குகைக்கு காளிமந்திர் என்ற பெயர். இதன் அருகிலேயே பாழடைந்த மண்டபத்தை “கோவிந்த சமாதி” என்று கூறினார்கள். இந்த புனித குகை ஓம்காரேஷ்வரர் ஆலயத்தை ஒட்டியிருந்தது. இதை அழகிய மண்டபமாக குருகோவிந்தரின் புத்திரரும், உஜ்ஜயினி அரசருமான ஸ்ரீ ஹர்ஷ விக்ரமாதித்யன் கட்டினார் என இன்னொரு புத்தகத்தில் தெரிந்தது.
ஆக ஸ்ரீ சங்கர பகவத்பாதாள் குருவைக் கண்டு சந்நியாசம் பெற்று இரண்டாண்டு தங்கி நூல்கள் இயற்றிய புனித குகை இதுதான் என நாகராஜ சர்மா ஆதாரங்களை சேகரித்து விட்டார்.
1979-ம் வருடம் பிப்ரவரி மாதத்தில் ஸ்ரீ பெரியவா ஹம்பியில் முகாமிட்டிருந்தபோது தரிசிக்கச் சென்றார். தேனம்பாக்கத்தில் குகையைப் பற்றி ஆரம்பித்த பேச்சு ஹம்பியில் தொடர்ந்தது. எல்லா விவரங்களையும் கேட்டுவிட்டு, இவர் கொண்டு போன எல்லா புத்தகங்கள், நோட்டுகள் முதலானவற்றை ஸ்ரீ பெரியவர் வாங்கி வரும்படி உத்தரவிட்டார். திருக்கரத்தால் ஒருமுறை எல்லாவற்றையும் தடவிப் பார்த்தார்.
சற்று நேரம் மௌனமாக இருந்த ஞானமுனிவர், நாகராஜ சர்மாவை நோக்கி தன் சிரத்தை அசைத்துக் கொண்டே குபீரென்று பெரிதாக வாய்விட்டுச் சிரித்தார்.
ஆதிசங்கரரே நேரில் வந்து தரிசனம் தந்து பாராட்டுவது போல நாகராஜ சர்மா பூரணமாக உணர்ந்தார்.
1980 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அங்கு வருகை தந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அந்த இடத்தின் புனிதத்தன்மையைக் கண்டு வியந்து அதை சீரமைத்து புனரமைக்க போபாலில் ஒரு டிரஸ்ட் ஏற்படுத்தி, குகையின் சீரமைப்பு முடிந்ததும் 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி அதற்கு ‘குகை மந்திர்’ என்ற பெயர் சூட்டி நாட்டுக்கு அர்பணித்தார்.
11 வருடங்களுக்கு இந்த குகை மந்திர் கண்டுபிடிப்பைப் பற்றி முன் நாகராஜ சர்மாவுடனான ஒரு வீடியோ இதோ கீழே.
https://youtu.be/zxvxXsd-1g8?si=76veSapLHTEtrqka
Leave a comment
Upload