தொடர்கள்
தொடர்கள்
பங்காளிகள் – கே.ரங்கநாதன்

20250409193759919.jpeg

“விக்னேஸ்வரி, சீக்கிரம் வாம்மா. ஸ்கூலுக்கு நேரத்துக்குப் போகவேண்டாமா?” தாத்தா அவசரப்படுத்தினார்.

“எனக்கு போலீஸ்னா பயம் தாத்தா. ஏன் அந்த அடகுக்கடை ஓனரை அழைச்சுட்டுப்போறாங்க?”

நாலாம் வகுப்பு படிக்கும் விக்னேஸ்வரிக்கு வீரபத்திரன், தாத்தா மட்டுமல்ல, வயசான தோஸ்து. ப்ரீ கேஜி முதல் கைப்பிடித்து பள்ளிக்கூடம் கூட்டிச் செல்கிறவர். வழியெல்லாம் அவர் கதைகளும் சம்பவங்களும் சொல்லிக்கொண்டே போவதை அந்த ஏரியாவே வேடிக்கை பார்க்கும். படிக்கிற பெண்ணுக்கு நீதி நேர்மை என்று சிலபஸ் எடுப்பார். பேத்தியிடம் அவர் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை, ‘அறம்’.

*** *** ***

வீட்டின் எதிரே கடைத்தெரு. மாவு மிஷின் தாண்டும்போது நெடி அடிக்கும். சில நேரம் சாம்பார் பொடி… ஒரு நாள் சீகக்காய். கடந்து போகிறவர்களை ஈர்க்கும். அந்த மிஷின் கடை நடத்துபவருக்கு ரைஸ் மில்லும் உண்டு. ஒரே மகன் பிரகாஷ். ஜெர்மனியில் படித்து நல்ல வேலையில் சேரப்போகிறான். அடுத்த வருடம் கல்லூரிக்குப் போகிற விக்னேஸ்வரியை மணந்துகொள்ள ஆசைப்பட்டு, வீட்டில் பேசிவிட்டான்.

பரம்பரையாகவே வசதி. நிலம், கட்டடம், கடைகள் என்று வாடகையே இலட்சக்கணக்கில் வரும். இப்படிப்பட்ட சம்பந்தம் தானாகவே அமைவது அதிர்ஷ்டம் என்று விக்னேஸ்வரியின் உறவுகள் சிலாகித்தன.

*** *** ***

“அந்த அடகுக்கடைல ஏன் போலீஸ் வந்து விசாரிச்சாங்கன்னு சொல்லவே இல்லையே. தாத்தா?”

“அதுவா, திருட்டு நகைன்னு தெரிஞ்சும் அதை வாங்கி வெச்சுப் பணம் கொடுத்திருக்காரு. ஏதோ… ஆசை யாரை விட்டது? கடைக்காரன் நல்ல மனுஷன் தான்…” என்று தாத்தா நிறுத்த,

“தப்புதான்… தப்புன்னா தப்புதான்” என்று அழுத்திச் சொன்னாள் பேத்தி.

*** *** ***

விக்னேஸ்வரி, படித்த கல்லூரியிலேயே விரிவுரையாளர் ஆகிவிட்டாள். ரைஸ் மில்காரர் குடும்பம் வந்து பிரகாஷுக்கு விக்னேஸ்வரியைக் கேட்டுவிட்டுப் போனார்கள். நம்ம வீட்டுப் பொண்ணுக்காக அந்தச் சம்பந்தம் காத்திருந்ததே என்று அம்மாவுக்குப் பெருமை.

*** *** ***

நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடக்க, குடும்பத்தோடு வெளியூரில் இருக்கும் குலதெய்வம் கோயிலுக்குப் போய்விட்டு வந்தார்கள். ஒன்பது மணிக்குத்தான் ஊர் திரும்பும் இரயில்.

மழை இலேசாகப் பெய்ய ஆரம்பித்தது. நடுவில் கூரை இல்லாத பகுதியில் மழையின் ஈரம் சித்திரம் போலிருந்தது. வெண்ணிறப் பூக்கள் தரையெல்லாம் நனைந்து கிடந்தன. விருட் விருட்டென்று பறந்து திரிந்த கோபுரத்துப் பறவைகள் கண்முன் வந்து போயின. ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு உடல் முழுதும் சுகந்தத்தால் நிரப்பிக்கொண்டாள். ஏதோ புது மனுஷியாகத் தன்னை உணர்ந்தாள்.

*** *** ***

தரிசனம் முடித்து வந்ததிலிருந்து யாரும் சிரித்த முகத்துடன் இல்லை.

“காரணம் சொல்லாம வேண்டாம்னா எப்படி? வசதியான சம்பந்தம் இப்படி கைவிட்டுப் போகலாமா? என்ன ஆச்சு அவளுக்கு?” அழுவதுபோல் அப்பாவிடம் முறையிட்ட அம்மாவை அதற்குமேல் பேசவிடாமல் விக்னேஸ்வரி பேசினாள்.

“இது நடக்காதது கூட அம்பாளோட அனுக்கிரஹம்னு நினைச்சுக்கோ. கோவில் கோபுரத்துக்கு தெற்கு வாசல் பக்கமிருந்த அந்த பெரிய போர்டைப் பார்த்துதான் இந்த முடிவுக்கு வந்தேன்.

அதுல கோவில் சொத்தை யார் யார் வாடகை தராம அனுபவிக்கறாங்க… எத்தனை வருஷம்… எவ்வளவு பாக்கின்னு பெயர் விலாசத்தோட இருந்ததைப் பார்த்தீங்களா?

லிஸ்ட்ல – அதுவும் லீடிங் தொகைல – அந்தக் குடும்பம். ஏதோ தப்பாத் தெரியுது எனக்கு.

சிவன் சொத்து குல நாசம்னு தெரியாதவங்களா? பணத்துக்கா பஞ்சம்? ஆனாலும் அதிகாரம்… மெத்தனம். இன்னமும் தண்டனை இல்லாம போர்டுல இருக்காங்க. கடவுள்ங்கிற பெரிய போலீஸ்காரன் இருக்கான். ஏமாத்த முடியுமா?

அதனால என்ன… அதனால என்ன..ன்னு சொல்ற நாமதான் இந்த உலகம் மாறினதுக்குக் காரணம். முன்னாடில்லாம் இத்தனை வியாதி வெக்கை இருந்ததா? முதியோர் இல்லம் உண்டா? விபத்து உண்டா? விவாகரத்து உண்டா? மன அழுத்தம் உண்டா?

பெரிய இடம்தான். பையன் குணத்துல தங்கம்தான். ஆனா, ஒத்துக்க முடியாத குத்தம் செஞ்சவங்களோட சம்பந்தம் வெச்சு, அவங்க பாவத்துல நாம பங்காளிகள் ஆகணுமா? விட்ருமா!” என்று உள்ளே போனவள், அப்பாவிடம் வந்து,

“அப்பா! நான் எடுத்த முடிவு உங்களை அப்செட் பண்ணியிருக்கும். மன்னிச்சிருங்க. ஆனா, அவங்களுக்கும் புரிய வைங்க.” என்றாள்.

குடும்பமே திகைத்து நின்றது. வீரபத்திர தாத்தாவுக்கு மட்டும் எதுவும் அதிர்ச்சியாக இல்லை.

‘அறம்’

அவர் கைப்பிடித்து பள்ளிக்குக் கூட்டிச் சென்ற பேத்தியின் குட்டிக் குரல் கேட்டது… “தப்புன்னா தப்பு தான்!”

*** *** *** *** ***