தமிழ் மக்கள் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய பௌர்ணமி தினத்தையும் இறை வழிபாட்டிற்குரிய நாளாகக் கருதுகின்றனர். சித்திரை நட்சத்திரமும் பௌர்ணமியும் சேர்ந்து வரும் நாள் சித்திரா பௌர்ணமி நாளாகும். மற்ற எந்தப் பௌர்ணமிக்கும் இல்லாத சிறப்பு சித்ரா பௌர்ணமிக்கு உண்டு. அன்றைய தினத்தில் நிலா பூரண நிலவாகக் காட்சியளிக்கும். அதோடு தமிழ்ப்புத்தாண்டில் முதன்முதலாக வரும் முழுநிலவு நாள் என்பதாலும் இதற்கு இன்னும் சிறப்பு கூடுகிறது. இந்த நன்னாளில் கிரிவலம் செல்வது மிகவும் சிறப்பு. மேலும் கடல் மற்றும் புனித நதிகளில் நீராடினால் பாவங்கள் அகலும் என்பதும் நம்பிக்கை. குறிப்பாக இந்த தினத்தில் சித்திரகுப்தரை வழிபட வேண்டும் என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. இன்றைய தினம் சித்திர குப்தரின் பிறந்தநாள் என்றும் சில சாஸ்திர குறிப்புகள் கூறுகின்றது.
சித்ரகுப்தர் என்பவர் தெய்வீக கணக்காளராகவும், எம தர்மராஜனின் உதவியாளராகவும் இருக்கிறார். நேர்மையான முறையில் தன் கடமையைச் செய்து வருகிறார். உலகில் வாழும் ஜீவராசிகளின் பாவ புண்ணிய கணக்குகளைத் துல்லியமாகக் கவனித்து ஒன்று விடாமல் எழுதிவைத்து, அதற்குரிய பலனுக்குப் பரிந்துரைக்கின்றார்.
இந்த ஆண்டு (2025) சித்ரா பௌர்ணமி மே 12 ஆம் தேதி திங்கட்கிழமை வருகிறது.
புராணங்களில் சித்ரா பௌர்ணமி:
சித்ரா பௌர்ணமி அன்று இந்திரன் பாபவிமோசனம் வேண்டி அனைத்து சிவஸ்தலங்களையும் சென்று வணங்கி வரும் நிலையில், மதுரை சொக்கநாரைத் தரிசித்து பாவ விமோசனம் பெற்ற புண்ணிய நாள். மேலும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன் வந்து வழிபடுகிறார் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது.
சித்ரா பௌர்ணமி அன்று தான், சீதா, இராமர், லட்சுமணன் வனவாசம் முடிந்து நாடு திரும்பியதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
சித்ரா பௌர்ணமியும், திருவிழாக்களும்:
சித்ரா பௌர்ணமி அன்று எல்லா கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மேலும் சில கோயில்களில் சித்திரைத் திருவிழாக்கள் நடத்தப்பட்டு பௌர்ணமி தின சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்படுகிறது.
மதுரையில் சித்ரா பௌர்ணமி அன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்குத் தரிசனம் தருவது ஆண்டு தோறும் நிகழும் சிறப்புமிக்க திருவிழாவாக நடைபெறும்.
கன்யாகுமரியில் அன்று மட்டும் ஒரே நேரத்தில் சூரியன் மறைவதையும் சந்திரன் தோன்றுவதையும் கண்டு மகிழலாம்.
திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலம் வருவது பிரசித்தி பெற்றதாக இருக்கிறது.
சித்ரா பௌர்ணமி நாளில் ஸ்ரீராமாநுஜருக்கு வரதராஜப் பெருமாள் காட்சி அளித்து அருள்பாலித்த வைபவத்தைக் கொண்டாடும் விதமாகக் காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ‘நடவாவி’ என்னும் கிணற்றுக்குள் எழுந்தருளும் திருவிழாவும் நடந்து வருகிறது.
சித்ர குப்தர் அவதாரம்:
சித்ர குப்தர் சிவன் வடித்த சித்திரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டதாலும், சித்திரை மாதத்தில் பிறந்ததாலும் சித்ர குப்தர் என்று அழைக்கப்படுகிறார். கல்வி வேள்விகளில் சிறந்தவரான சித்ர குப்தரை தகுந்த வயதில் எமதருமனிடம் அனுப்பி, மனிதர்களின் பாவ, புண்ணியங்களை நெறி தவறாமல் எழுதி, எமனுக்கு உதவி செய்யும்படி சிவபெருமான் பணித்தார் என்கிறது புராணம்.
சித்ர குப்தர் பூஜை:
சித்ரா பௌர்ணமி அன்று காலையில் வீட்டின் பூஜை அறையில் ஒரு மனையில் மாக்கோலம் போட்டு சித்ர குப்தர் படம் வரைந்து "மலையத்தனை பாவம் செய்திருந்தாலும் கடுகளவு புண்ணியத்தைக் கொடுக்க வேண்டிக் கொள்கிறோம்" என்று ஒரு காகிதத்தில் எழுதி அதனை மனை மேல் வைத்து பூஜை செய்து...
“சித்ர குப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபுத்ர தாரிணம்.
சித்ரா ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்” என்ற சித்ரகுப்தரின் ஸ்லோகத்தைத் தியானம் செய்து தீபம், தூபம் மற்றும் பூக்களால் அர்ச்சிப்பதுடன், சித்திரகுப்தருக்கு பிரியமான சித்திரான்னங்களான தேங்காய் சாதம், தயிர்ச் சாதம், உளுந்து வடை ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். நாம் செய்த தவறுகளை மன்னிக்க மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். சித்ரா பௌர்ணமி அன்று காலை விரதத்தை ஆரம்பித்து "ஓம் சித்ரா குப்தாய" என்று நமக்கு முடிந்தவரைச் சொல்ல வேண்டும்.
அன்றைய தினம் உப்பில்லாமல் உணவருந்தி, பசும்பால், பசு நெய், பசுந்தயிர் தவிர்த்து சித்திரா பௌர்ணமி விரதம் இருந்து ஒரு மூங்கிலாலான முறத்தில் அரிசி, வெல்லம், மாங்காய், ஒரு நோட்டுப்புத்தகம், பேனா முதலியவையும் தானம் செய்யலாம்.
இந்தியாவில் பதினொரு இடங்களில் சித்ரகுப்தருக்குத் தனிக் கோயில் இருந்தாலும், தென்னகத்தில் காஞ்சிபுரத்தில் மட்டும்தான் கோயில் உள்ளது.
சித்திரகுப்தர் மூல மந்திரம்:
“சித்ரகுப்தம் மஹா ப்ராக்ஞம். லேகணிபத்த தாரிணம் சித்தர ரக்னாம்பரதரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்”
நல்ல அறிவாற்றலையும் திறமையான சிந்தனையையும் கொண்டவரே, எழுத்தாணி, ஏடு இவற்றைக் கையில் தாங்கிக் கொண்டிருப்பவரே, நவரத்தினத்தாலான உடையை அணிந்து இருப்பவரே, அனைத்து உயிர்களையும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் நடுநிலைமையுடன் நீதி கூறும் அரசராக இருப்பவரே, சித்திரகுப்தனானா உன்னை மனதார வணங்குகின்றோம். இந்த ஸ்லோகத்தை சித்ரகுப்தனை மனதார நினைத்து வழிபடுவதன் மூலம் நம் மனமானது மரணபயத்திலிருந்து நீங்கும்.
சித்ரகுப்தர் காயத்ரீ மந்திரம்:
“ஓம் தத்புருஷாய வித்மஹே
சித்ரகுப்தாய தீமஹி
தன்னோ லோகஹ் ப்ரசோதயாத்”
இந்த காயத்ரீ மந்திரத்தை சொல்லி வணங்கினால் ராகு, கேது தோஷமும், ஆயுள் ரீதியான தோஷங்களும் விலகும்.
வழிபாட்டுப் பலன்:
சித்ரா பௌர்ணமியன்று சித்திரகுப்தரை வணங்கினால் அறியாமல் செய்த பாவங்கள் மலையளவாக இருந்தாலும் அது கடுகளவாக மாறும். அதுபோலவே அன்று செய்யும் தானமும் கடுகளவாக இருந்தாலும் அது மலையளவாக மாறுவது உறுதி.
இதில் முக்கியமாக நோட்டுப்புத்தகம், பேனா, பென்சில் முதலிய எழுதப் பயன்படும் பொருட்களைத் தானமாக வழங்கினால் வாழ்வு சிறக்கும் என்பது ஐதீகம்.
சித்ரா பௌர்ணமி நன்னாளில் சித்திரகுப்தரை வணங்கி நாம் அறியாமல் செய்த பாபங்களிலிருந்து விமோசனம் பெறுவோம்!!
Leave a comment
Upload