நகத்தால் கிள்ளி எறியவேண்டிய முள்செடியை வளர விட்டு, கோடாரியைத் தேடுவது போன்ற செயலுக்குத் தள்ளப்பட்டது அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம். பதிவாளர் கௌரிசங்கர் வெறுத்துப்போய் பதவியை ராஜினாமா செய்தார். எதிர்கொள்ள முடியாமல் துணைவேந்தரும் ராஜினாமா செய்தார். ஆர்ப்பாட்டம் செய்த ஆசிரியர்களில் சிலர் கைது செய்யப்பட்டனர்.
அந்த நிலையில் தற்காலிக துணைவேந்தராக எஸ்.ஆர்.கெய்வார் என்கிற மாஜி ஐ.சி.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டார். பிறகு எஸ்.வி.சிட்டிபாபு துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். அவர் கல்லூரி கல்வி இயக்குனராகவும், மதுரை பல்கலைக்கழக துணைவேந்தராகவும் இருந்தவர். பொறுப்பேற்பதற்கு முன்பு இணைவேந்தரின் செயலாளர் கொடுத்திருந்த பத்திரிகைச் செய்திகளின் கோப்புகளை படித்துப் பார்த்தார். அதனால் நிலவரத்தை தெரிந்து கொண்டிருந்தார். ஹிண்டு நிருபரை சந்தித்துப் பேச வேண்டும் என்று விரும்பினார். அந்த நிருபர் யாரோ என்று நினைத்தபோது, தனக்கு முன்பே அறிமுகமானவர் என்பதை கண்டு மகிழ்ந்தார்.
சிட்டிபாபு மதுரை பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தபோது, அவன் ராமேஸ்வரம் தேவஸ்தான கலைக்கல்லூரியின் முதல்வர். எனவே ஒரு முதல்வர், துணைவேந்தர்களுக்கு இடையிலான நிர்வாகம் மற்றும் கல்வி சம்பந்தமான தொடர்பு அவர்களுக்கிடையே இருந்தது. அவர் உரிமையுடன், அவனிடம், ‘‘நீ எழுதியதை எல்லாம் படித்தேன், எழுதாத விஷயங்கள் ஏதாவது இருந்தால் சொல்லேன்’’ என்று கேட்டார்.
அவன் தேங்காய் உடைப்பது போல் பட்டென்று சொன்னான், ‘‘இங்கே நிர்வாகத்திற்கும், துணைவேந்தருக்கும் இடையே இடைவெளி உண்டு. துணைவேந்தருக்கும், ஆசிரியர்களுக்கிடையேயும் இடைவெளி உண்டு. பிரச்சனைக்கு முக்கிய காரணமே இதுதான். அடுத்து, ‘‘இப்போதைய நிலைமை என்ன” என்று அவர் கேட்டார். அவன் சொன்னான், ‘‘ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்களேயொழிய, வகுப்புகளைப் புறக்கணிக்கவில்லை. ஆனாலும் இதே நிலைமை தொடர்ந்தால் மாணவர்களும் தங்கள் ஆசிரியர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் சேர்ந்து கொள்வார்கள். இப்போதைக்கு ஆராய்ச்சி மாணவர்கள் சிலர் மட்டுமே, ஆர்ப்பாட்டத்தை ஆதரிக்கிறார்கள்’’என்றான். அதைக்கேட்ட சிட்டிபாபுவுக்கு பிரச்சனையின் பரிமாணங்கள் புரிந்தது.
கல்விக் களத்தில் அவன் இருந்தபோது, அவனைக் கேள்வி கேட்கும் அதிகாரம் சிட்டிபாபுவுக்கு இருந்தது. இப்போது நிருபராக அவரைக் கேள்வி கேட்கும் நிலையில் இருந்தான் அவன். ஆனாலும் கூட அவர், பேசுவதில் நிதானமாகவே இருந்தார். அவரிடமிருந்து வார்த்தைகளை வரவழைப்பது கடினம்.- பழைய பழக்கம் காரணமாக அவனுக்கும், துணைவேந்தருக்குமான உறவு பழுதில்லாமல் தொடர்ந்தது. அவ்வப்போது, பல்கலைக்கழகம் பற்றி அவனது அபிப்பிராயம் என்ன என்பதை கேட்டுத் தெரிந்து கொண்டார். ஆனால் அவர் மனதில் என்ன இருக்கிறது என்பதை யாரும் எளிதில் புரிந்து கொள்ள முடிந்ததில்லை.
ஒருமுறை அவனுக்கு பல்வைத்தியம் செய்த அவனது நண்பரான டாக்டர் சீனிவாசன், “I extracted a tooth from Vice Chancellor” என்றார். அவன் பட்டென்று சொன்னான், “You can extract from him tooth but not truth”. டாக்டர் சொன்னா£ர், “பல் உடைந்தாலும் உனக்கு சொல் உடையவில்லையே, உனக்கு Vice Chancellor மீது கோபமா?” என்று கேட்டார். “இல்லையே அவர் மரியாதைக்குரியவர்” என்றான். அவனது நடுநிலைமை, ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த ஆசிரியர்களுக்கும் புரிந்திருந்தது.
அதிரடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த துணைவேந்தர் சிட்டிபாபு, 7000 மாணவர்கள் அங்கு இருப்பது சரிப்படாது என்று உணர்ந்தார். அவருக்கு அரசாங்கத்தில் செல்வாக்கு இருந்தது. எனவே 4000 மாணவர்கள் கொண்ட பட்டப்படிப்பு வகுப்புகளை நிறுத்திவிட முடிவு செய்தார். அரசாங்கத்தை வற்புறுத்தி சிதம்பரம் அருகே முட்லூர் என்ற ஊரில், புதிய அரசு கலைக்கல்லூரி தொடங்கச் செய்து, அத்தனை பட்டப்படிப்பு மாணவர்களையும் அங்கே சேர்த்து விட்டார். ஆக வளாகத்தில் பட்டமேற்படிப்பு வகுப்புகள் மட்டுமே இருந்தன.
பட்டப்படிப்பு வகுப்புகளை துணைவேந்தர் நிறுத்திவிட்டார் என்பதை செய்தியாக்கிய அவன், ‘Undergraduate courses axed’ என்று தன் செய்திக்கு தலைப்பு கொடுத்திருந்தான்.தலைப்பைக் கண்டு கொதித்துவிட்டார் சிட்டிபாபு. “axed, axed&ன்னா என்னய்யா? இப்படி எழுதியிருக்கிற? என்னை கொலைகாரன் போல் காட்டியிருக்கிறாயே? எங்கய்யா இங்கிலீஷ் படிச்சே?’’ என்று கேட்டார். ‘‘இங்கேதான்’’ என்று அவன் சொன்னபோது, அவர் கோபப்படவும் முடியவில்லை, சிரிக்கவும் முடியவில்லை. அதே நேரத்தில் ஒருபக்கம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உதவியாக இருந்த கல்வியாளரும், அப்போதைய எம்.எல்.சி.யுமான சி.ஆர்.லட்சுமிகாந்தனிடம் சிட்டிபாபு பேசி, பிரச்சனையை தீர்க்கும் வழிவகைகளைப் பற்றி ஆலோசித்தார். ஒரு திறமையான நிர்வாகி என்கிற முறையில் சிட்டிபாபு ஆர்ப்பாட்டக்காரர்களை அழைத்துப்பேசி ஒரு சுமூகமான முடிவுக்கு வந்தார்.
ஆசிரியர் சங்கம் எழுப்பிய எல்லா கோரிக்கைகளையும் நிர்வாகம் ஏற்கச் செய்தார். நிர்வாகத்திற்கும், ஆசிரியர் சங்கத்திற்கும் இடையே ஒரு இணக்கத்தை உருவாக்கினார். அப்போதும் அவருக்கு எதிர்ப்புகள் இல்லாமல் இல்லை. ஆனால் எல்லாவற்றையும் சமாளித்தார். நிர்வாகமும், அரசாங்கமும் அவருக்கு முழு ஒத்துழைப்பைக் கொடுத்தன. ஒருவழியாக பல்கலைக்கழக வளாகத்தில் அமைதி திரும்பியது, ஆர்ப்பாட்ட காலத்தில் செய்திகளை விரிவாகவும், நடுநிலையாகவும் தந்த ஹிண்டு நிருபருக்கும், அரசாங்கத்துடனும், நிர்வாகத்துடனும் ஒத்துழைத்த எம்.எல்.சி.யான சி.ஆர்.லட்சுமிகாந்தனுக்கும் வளாகத்தில் ஒரு பாராட்டு விழாவிற்கு ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. ஆசிரியர் சங்கம் எவ்வளவு வற்புறுத்தியும் அவன் அந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.
‘‘நான் என் கடமையைச் செய்தேன், அதைத்தாண்டி எதையும் செய்யவில்லை. உங்கள் பாராட்டை நான் ஏற்பது முறையாகாது’’ என்று சொல்லிவிட்டான். “லட்சுமிகாந்தனை பாராட்டும் போது நீங்கள் உடன் இருக்கலாம் அல்லவா?” என்று அவனைக் கேட்டார் ஆசிரியர் சங்கத் தலைவர் ஏ.எல்.சிதம்பரம். ‘‘உங்கள் பாராட்டுச் சொற்கள் காதில் விழாதபடி நான் தொலைவில் இருப்பேன். பாராட்டு விழா முடிந்தபிறகு வருகிறேன்’’ என்று சொல்லிவிட்டான். இது தொடர்பாக சி.ஆர்.லட்சுமிகாந்தன் துக்ளக் இதழுக்கு பின்னர் எழுதிய கட்டுரையில் இருந்து சில வாசகங்கள் இங்கே:
‘‘அந்த பத்திரிகையாளருக்குப் பாராட்டு விழா நடத்த ஆசிரியர் சங்கம் முன் வந்ததற்குக் காரணம் அவரது எழுத்து வீச்சு மட்டுமல்ல; அவரால் சங்கடப்பட்டவர்கள், சில பிரமுகர்களை சென்னைக்கு அனுப்பி, சம்பந்தப்பட்ட பத்திரிகை ஆசிரியரை சந்தித்துப் புகார் கொடுத்தனர். அப்படியும் தொடர்ந்து துணிவுடன் கட்டுரைகள் எழுதிவந்தார். அவருக்கு கொலை மிரட்டல் கடிதம் கூட வந்தது. நடுநிலையுடனும், துணிவுடனும் செயல்பட்ட அவருக்கு அரசு அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்க ஏற்பாடு செய்தேன். மறுத்துவிட்டார். ஈடுபாடு கொண்ட இடங்களில் அவருக்கு ஒரு விலகல் மனப்பான்மையும் உண்டு. அதனால்தான் கால் நூற்றாண்டு காலத்திற்குப் பிறகும் நாங்கள் அவரை மதிக்கிறோம்.’’ (நன்றி: துக்ளக், 28.12.2005).
முன்னாள் மாணவன் என்கிற முறையில் அவன் தன் ஆசிரியர்களை ஆதரித்து களத்தில் அர்ஜுனனாக நிற்கவில்லை. முன்னாள் செனட் உறுப்பினர் என்ற முறையில் பீஷ்மராக நிர்வாகத்தை ஆதரிக்கவில்லை. உலகின் முதல் போர்க்கள நிருபர் சஞ்சயன் போல் போராட்ட நிகழ்வுகளை உள்ளது உள்ளபடி மேலிடத்திற்குத் எழுதி வந்தான். இந்த சஞ்சயனின் மேலிடம் வாசகர் வட்டம்தான்.
Leave a comment
Upload