தொடர்கள்
தொடர்கள்
நயத்தகு நற்றிணை 24 -மரியா சிவானந்தம்

20250407195851230.jpg

பொருள் தேடிச் சென்று விட்ட காதலனின் நினைவில் காதலி மருகிக் கொண்டு இருக்கிறாள் .

பிரிவின் துயரம் அவளை வாட்டியது .

இருப்பினும் தன் துயர மறைத்து , இயல்பாக இருப்பது போல நடமாடிக் கொண்டு இருக்கிறாள்.

அவளைக் காணும் தோழிக்கு, தன் தலைவியை எப்படி தேற்றுவது என்று தெரியவில்லை.

"கலக்கம் கொள்ளாதே தலைவி , பொருள் தேடிச் சென்றவன் விரைவில் வருவான் " என்று உற்சாக மொழிகளைக் கூறி அவளை அமைதிப் படுத்த முயல்கிறாள்.

அவள் எண்ணத்தை உணர்ந்துக் கொண்ட தலைவி ,' அவன் பிரிந்துச் சென்றால் , நான் உயிர் வாழ மாட்டேன் என்று அறிந்தவர் அல்லர்..இது ஆண்களின் இயல்பு தானே ? என்று தனக்கு ஆறுதல் சொல்ல வந்தவளுக்கு பதில் மொழி கூறுகிறாள்.

உலகில் நடக்கும் இயல்பான நிகழ்வுகளை எடுத்துக்காட்டுகளாக்கி அவள் சொல்லும் அழகான தத்துவங்களைப் படிக்கும் போதே நெஞ்சம் நெகிழ்கிறது

தலைவி சொல்வது :

'மருந்தைத் தரும் மரத்தின் பட்டைகளை முழுமையாக சீவி அம்மரத்தை யாரும் பட்டுப் போகும்படி செய்ய மாட்டார்கள்.

தவம் செய்பவர் , தன் உடல் உரம் கெடும் அளவுக்குத் தன்னை வருத்திக் கொண்டு தவத்தில் ஈடுபட மாட்டார்கள்.

ஆட்சி செய்யும் அரசர் தன் குடிமக்கள் வளமை நீங்கி , வறுமையில் வாடும் அளவுக்கு அவர்மேல் வரிகளைச் சுமத்த மாட்டார்

இவை எல்லாம் அறிந்த என் தலைவன் வெம்மை மிக்க கொடும் பாலை மண்ணில் என்னைத் தனித்து விட்டு பிரித்துச் சென்று விட்டான் .

அவனை பிரியாமல் இருந்தால் நான் வாழ்வேன், பிரிந்துப் போனால் இறந்துப் போவான் என்ற உண்மையை அறியாது விட்டுச் சென்றான் .

இது ஆடவரின் இயல்பு தானே ? இதை இந்த உலகமே அறியுமே'

" யாதும் ஊரே , யாவரும் கேளிர் " என்ற காலத்தால் அழியாத சொற்றொடரை தமிழர் வாழ்வியல் தத்துவமாக தந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய நற்றிணைப் பாடல் இது. காதல் கவிதையில் உலகியலைப் பொதித்து வைத்த அழகான புறப் பாடல் இது .

மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்;
உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப்
பொன்னும் கொள்ளார், மன்னர்- நன்னுதல்!-
நாம் தம் உண்மையின் உளமே; அதனால்
தாம் செய்பொருள் அளவு அறியார்; தாம் கசிந்து,

என்றூழ் நிறுப்ப, நீள் இடை ஒழிய,
சென்றோர்மன்ற நம் காதலர்; என்றும்
இன்ன நிலைமைத்து என்ப;
என்னோரும் அறிப, இவ் உலகத்தானே. (நற்றிணை 226)

மேலும் ஒரு நல்ல பாடலுடன் அடுத்த இதழில் சந்திப்போம் .

தொடரும்