"மார்ச்சுவரி அங்கே...!" என்று பதறிப்போய் கையைக் காட்டினார் ஒரு டாக்டர்.
"நோ டாக்டர், உசிருள்ள பேஷண்ட்தான்...!" என்று சொன்ன எடுபிடியும் உதவியாளர்களும் சுப்புசாமியை கைத்தாங்கலாக பா.மு.கழக வளாக மருத்துவமனை எமர்ஜென்சி வார்ட்டில் சேர்த்தனர்.
*****
'கல் நெஞ்சம் அல்ல; கிரானைட் நெஞ்சம் கொண்ட பிரசிடெண்ட்...!' என்று குமைந்த பொன்னம்மாள் டேவிட். 'எல்லாக் காரியமும் சின்ன பொடி டப்பாவினால் கெட்டது' என்று மனதுக்குள் வெம்பினாள்.
'நான்காவது தூணாம்! இங்கிலீஷில் வேறு ஸ்டைலாக ஃபோர்த் எஸ்டேட்...' என்று மாறி மாறி புகழ்கிறார்கள். இந்த அகல்யா சந்தானம், எத்தனை முறை பிரசிடென்டால் மூக்குடைப்பட்டிருப்பாள்? கொஞ்சம்கூட அவளிடம் வெஞ்சன்ஸ் தன்மை இல்லாமல் கோமுவைப் புகழோ புகழ் என்று புகழ்கிறாள். ஆப்டர் ஆல் இங்கிலீஷ் மேகஸின் எடிட்டர் போஸ்ட்! இதை யார் வேண்டுமானாலும் செய்யலாமே? ஏன் எனக்கு வராதா? உதவி ஆசிரியர்கள் எழுதிக் கொண்டு வரப்போக அதில் பத்திருபது வரிகளை "கட்" பண்ணுவது பெரிய காரியமா?' என்று பொ.டே. மனதுக்குள் புலம்பினாள்.
*****
ஏதோ சில்லென்ற திரவத்தை மூக்கிலும் வாயிலும் புகட்டினார்கள்.
"அப்பாடா, தீப்பிடித்ததும் உடனே வந்த பயர் எஞ்சின் மாதிரி புண்ணியம், டாக்டரம்மா... நர்ஸம்மா...!" என்று அவர்களது கைகளை கண்களில் ஒற்றிக்கொண்டார் தாத்தா.
மூக்கின் இரு துவாரங்களிலும் கொஞ்சம் பஞ்சை வைத்து, சுற்றிலும் சிறு பேன்டேஜ் போட்டனர். "இனிமே மூக்குப்பொடியா, மிளகாய்ப் பொடியான்னு பார்த்துப் போடுங்க, தாத்தா...!" என்று வழியனுப்பி வைத்தனர்.
*****
பொன்னம்மாளின் குரூர நேரம் தகைந்து வந்தது.
மைக்கைப் பிடித்தாள்.
"இதோ, எனக்குப் பிறகு நம் எவர் கிரீன் பிரசிடெண்ட் பேசப்போகிறார்கள். அது தேவையா? ஏன் பேச வேண்டும்? எதற்காகப் பேச வேண்டும்? நாம் பேசிக் கொண்டிருப்பது போதாதா? அவர்கள் மௌனமாக எழுந்து போனால்கூட அதில் ஓர் அர்த்தம் இருக்கும் என்பதற்காகச் சொல்ல வருகிறேன். எனக்குத் தெரியாதா? ஏன் நமக்குத் தெரியாதா நம் தலைவியின் தங்கமான தரத்தை பற்றி?
"புரிகிறது. நான் எதற்கோ பீடிகை போடுகிறேன் என்று உங்கள் நெஞ்சத்தின் கேள்விகளை நான் அறிவேன். மிஸஸ் கோமு சுப்புசாமி அவர்கள் (சுப்புசாமியை வேண்டுமென்றே அழுத்திக் கூறியது குறிப்பிடத்தக்கது!) தான் செய்யும் ஒவ்வொரு காரியத்திலேயும் கண்ணும் கருத்துமாக விளங்குபவர். இதோ ஒரு ரவுடியைத் தன் பக்கத்தில் அமர்த்தி இருக்கின்றார் எனில், அதில் ஓராயிரம் அர்த்தங்கள் இருக்கும். நம் தானைத்தலைவியின் புகழுக்கு மகுடம் வைத்தாற்போல் வந்த இந்த ஒரு வாழ்த்து மடலே போதும்...!" என்று நிறுத்தி தனது இடுப்பில் செருகியிருந்த அந்தப் பெரிய துண்டுக் காகிதத்தை அரங்கம் பார்க்க வேண்டும் என்று உயர்த்திப் பிடித்தாள்.
சபை மிக அமைதியாக இருந்தது.
கோமு, திகைத்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் புன்னகை புரிந்தபடி இருந்தாள். 'திஸ் பிளாக் ஷீப் என் காலை வார ஏதோ சரி சதி செய்கிறது' என்று யோசிக்க ஆரம்பித்திருந்தாள்.
"அன்பிற்குரிய கோமுவுக்கு, உன் கணவர் சுப்புசாமியின் அனேக ஆசீர்வாதங்கள்....!" - பொன்னம்மாள் டேவிட், சுப்புசாமியின் பாராட்டு மடலை வாசிக்க ஆரம்பித்திருந்தாள்.
"பொன்னம்மாள் டேவிட்... ஆஹா, என்ன அழகான பெயர்? அகல்யா சந்தானம் என்ன அற்புதமான பெயர்? ஜம்புகேஸ்வரி ஞானலிங்கம் அடடா எத்தனை மென்மையான பெயர்? இந்த வரிசையில் கோமு சுப்புசாமி சேர்ந்திருந்தால் எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும்? கோட்டை விட்டுவிட்டாள் என் அன்புக் காதலி கோமு...
"பெண் விடுதலை என்பது கணவன் பெயரை விலக்கிவிட்டு எழுதுவது மட்டும்தானா? உனக்கு நான் என்ன குறை வைத்தேன்?
நீ ஆடிய ஆட்டத்துக்கு... உன் மனம் போன போக்குக்கு, என்றாவது நான் குறை வைத்திருக்கிறேனா...?"
கூட்டத்தில் அமைதியோ அமைதி.
"கோமு ஞாபகம் இருக்கிறதா?" - பொன்னம்மாள் ஏற்ற இறக்கத்தோடு வாசித்தபோது திடீர் சலசலப்பு.
மூக்கைச் சுற்றி பேண்டேஜ் அணிந்த ஒரு வெண்ஜிப்பா உருவம், மேடைப் பக்கவாட்டில் போடியம் நோக்கிவர...
அது...அவரா...அவரேதானா?
சுப்புசாமி...!
உணர்ச்சிப்பிரவாக சிவாஜி கணேசனாக நடந்து வந்து கொண்டிருந்த சுப்புசாமி, மூன்றாம்பிறை கமல்ஹாசன்போல, மேடையின் ஒரு சவுக்குத் தூணில் இடித்துக்கொண்டு விழுந்து, பின் தட்டுத்தடுமாறி எழுந்தார்!
(குறும்பு தொடரும்...)
Leave a comment
Upload