தொடர்கள்
பொது
நவீன சந்திரஹரி பாகிஸ்தான் -தில்லைக்கரசிசம்பத்

2025042308310385.jpeg

இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம் அறிவித்தபிறகு மே11அன்று கராச்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட்வீரர் ஷாஹித்அஃப்ரிடி பாக்வெற்றியை(!), ராணுவத்தின் உடையணிந்து கொண்டாடிவீதிகளில் வலம் வந்தார். அவருக்கு முன்னாள் பாக்பிரதமர் இம்ரான்கானின் இடத்தை பிடிக்க ஆசை.

இம்ரான் தற்போது இருக்குமிடம் சிறை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர்கள், அடிக்கடி பதவிநீக்கம் செய்யப்படுகிற, கைது செய்யப்படுகிற, நாடுகடத்தப்படுகிற, கொல்லப்படுகிற, பாகிஸ்தானில் பிறந்து அரசியலுக்குவர ஆசைப்படலாமா? வெற்றி ஊர்வலத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் பலுசிஸ்தான்,சிந்துபகுதிகளில் சுதந்திரம்கோரி தீவிரமான போராட்டங்கள் வெடித்து,

அவ்வெற்றி ஊர்வலத்துக்கு ஒத்து ஊதியது.

சுதந்திரம் வாங்கி எங்களுக்கென்று தனிநாடு என சென்ற ஜின்னா, நேரு போலவே கடவுள் மறுப்பாளர் என்பது பலருக்கு தெரியாது.

பாக் சுதந்திரநாள் உரையாக “மதத்தை வீட்டோடவச்சிக்க . நீ யாரா இருந்தாலும் வெளில இந்த நாட்டோட பிரஜை .சமஉரிமைக்கொண்டவன். “ என்றார்.

ஜின்னா புண்ணியத்தில் பாகிஸ்தான் இந்தியாவை போலவே ஒரு மதச்சார்பற்றநாடாகவே மலர்ந்தாலும் வெறும் 13 மாதங்களிலேயே தீவிர காசநோயால் ஜின்னா உயிரைவிட மலர்ந்த வேகத்திலேயே கசக்கி எறியப்பட்டு படிப்படியாக 1956ல் முழுஇஸ்லாமிய நாடாக மாறியது.

இப்படியாப்பட்ட நாட்டுவரலாற்றில் ஜின்னாவின் சுதந்திர உரை தொண்டையில் மாட்டியமுள் போல் இன்றுவரை நெருட, இவரது பேச்சை 2000மாவது ஆண்டுவரை பள்ளிபாடங்களில் கூட தூக்கிவிட்டார்கள்.

பாகிஸ்தான் மக்கள் கட்சி போன்ற மதசார்பற்றகட்சிகள் எப்போதாவது ஜின்னாவின் சுதந்திர உரையை குறிப்பிட்டு பாக் மதசார்பற்றநாடாக மாறினால்தான் உருப்பிடமுடியும் என்று முணுமுணுக்கும்போதெல்லாம் “ உஷ்! ஏதோ ஜின்னா வாய்தவறி சொன்னதையெல்லாம் உண்மைனு எடுத்துக்ககூடாது “ என்று மதவாதகட்சிகள் அடிப்படைவாதிகள் கண்ணை உருட்டி கொண்டிருக்கிறார்கள்.

2017ல் பாக் தொலைக்காட்சி நேரலையில் நெறியாளர் ஒருவர் ஜின்னாவின் உரையை மேற்கோள்காட்ட முற்பட்டபோது கபால் என பாய்ந்து ஒலிபரப்பையே நிறுத்தினார்கள்.

1979ல் ஜெனரல் ஜியாஉல்ஹக் கொண்டுவந்த மத அடிப்படையிலான கிதாப்அல்-ஹுதுத் சட்டத்தால் (திருட்டுக்கு கைவெட்டுதல், விபசாரத்திற்கு கல்லாலடித்து கொல்லுதல்,மதுஅருந்துவதற்கு நீண்டகால சிறைத்தண்டனை) பெண்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். பாலியல் வல்லுறவுக்காளான பெண்கள் மேலேயே விபச்சாரக்குற்றம் சுமத்தி தண்டனை கொடுத்தார்கள். நல்லவேளையாக 2006ல் முஷாரஃப் பாதிசட்டங்களை திருத்தம் செய்தார்.

பெண்போராளிகள் ஆஸ்மாஜஹாங்கீர், ஷஹ்வார்அலி போன்றோரின் போராட்டங்களால் இன்று பாலியல்குற்றங்களை கிரிமினல்சட்டத்திற்குள் கொண்டுவந்து இருக்கிறார்கள்.

இந்த கிதாப்அல்-ஹுதுத் சட்டம் , மதஅவமதிப்புக்கு மரணதண்டனை, அஹ்மதிமுஸ்லீம்கள் வெளியேற்றம் என எதையெல்லாம் ஜின்னா எதிர்த்தாரோ அவையெல்லாம் மொத் தவடிவமாக எடுத்து இன்று பாகிஸ்தானில் பேயாட்டம் ஆடிக்கொண்டு நிற்கிறது.

ஜின்னாபேச்சு காற்றோடுபோச்சு. ஆனால் நாம் ஜின்னாவை மறக்கக்கூடாது.

பாகிஸ்தானின் இன்றைய கூட்டத்தை வைத்துக்கொண்டு பாகிஸ்தானே மாரடிக்க முடியாமல் திண்டாடுகிற இந்நேரத்தில் நமக்கு அந்த தொல்லை வராமல் தீர்க்கதரிசியாக பிரித்து கூட்டிப்போனார் பாருங்கள்.

எப்போது கேட்டாலும் “தீவிரவாதியா?நாங்க பாத்ததுகூட இல்லையே!” என உலகின் முன்பு வாய்கூசாமல் அடித்துவிடும் நவீன சந்திரஹரியான பாகிஸ்தான் தோல்வியைகூட வெற்றியென வெட்கமில்லாமல் தம்பட்டமடித்தே பழக்கப்பட்டது.

நாளையே பாகிஸ்தான் பலுசிஸ்தான், சிந்த்தேசம் என இன்னும் பிரிந்தாலும் “இனமாக,மதமாக நாங்கள் அனைவரும் ஒன்று. இப்பொது பங்களாதேஷுடன் சேர்த்து 4பாகிஸ்தான்களாக இருக்கிறோம்” என பெருமை அடித்துக்கொண்டு ஷாஹித்அஃப்ரிடி போன்றவர்கள் வெற்றிஊர்வலம் போவார்கள்.

அடி வாங்கினாலும் “ஐ.!எனக்கு வலிக்கலையே !” என்று சொல்லிவிட்டு ஐஎம்ஃப்-ல் அப்படியே உல்ட்டாவாக “சேதம் பயங்கரம் எனவே உதவி செய்யுங்கள் “ என பில்லியன் டாலர்கள் கடன் வாங்குவார்கள்.

இங்கே காஷ்மீருக்கு சுதந்திரம் வேண்டும் என நீலிக்கண்ணீர் வடிக்கும்போது “உம்மிடம் உ‌‌‌ள்ள ஆக்ரமிப்பு காஷ்மீருக்கு முதலில் விடுதலை கொடு” என கேட்டால், கேட்பவரின் குரல்வளையை கடிக்கவருவார்கள்.

சமீபத்திலொரு பாகிஸ்தான் வீடியோவில் நெறியாளர் “ இந்தியா-பாக் எது வலிமையான நாடு?” எனும்போது அந்த பாக்இளைஞன் “ பாகிஸ்தான் தான்” என்கிறார்.

அப்போது தொப்பியணிந்த ஒரு முஸ்லீம் பெரியவர் குறுக்கே வந்து ” ஜி20 உலகின் செல்வந்தநாடுகளின் குழு. அதில் இந்தியா உறுப்பினராக உள்ளது.பாக் கடன் வாங்கிய ஐஎம்எஃப்-ன் முதல் பெண் துணைநிர்வாக இயக்குநர் கூட ஒரு இந்தியர். இதுகூட தெரியவில்லை“ என்றபடி தலையில் அடித்துக்கொண்டு நகர்கிறார்.