தொடர்கள்
கதை
இரண்டு மனம் வேண்டும் - முனைவர் என்.பத்ரி

20250423100056530.jpeg

விச்சு அடுத்த வருடம் மூன்றாம் வகுப்புக்கு போக வேண்டியது. விச்சுவுக்கு ஆரம்பத்தில் கணக்குப்பாடம் நன்றாக வராது. ஆனால் இப்பொழுதெல்லாம் அந்த பாடத்தில் நல்ல மதிப்பெண் வாங்குகிறான். அதற்கு காரணம் அவனுக்கு இப்பொழுது புதுசா வந்திருக்கும் சாந்தி என்கிற கணக்கு டீச்சர்தான்.

விச்சுவின் பெற்றோர்கள் வினோத்தும் விமலாவும் ஆசிரியர்கள் அறைக்கு வெளியே கணக்கு டீச்சர் சாந்தியைப் பார்க்க காத்திருந்தார்கள்.

சரியாக மணி நான்கு முப்பது. அந்த கணக்கு டீச்சர் சாந்தி வெளியே வந்தார். பார்க்க சரஸ்வதியாய் விமலாவுக்கு காட்சி அளித்த அவள், வினோத்துக்கு எங்கேயோ பார்த்த தேவதையாக தோன்றினாள். அவளின் வசீகர முகமும் புன்னகைப் பேச்சும் அவனை மிகவும் வாட்டின.

வெளியே வந்த கணக்கு டீச்சர், விச்சுவின் அப்பா அம்மா யாரு?’ என்று கேட்டுக் கொண்டே எங்களிடம் வந்தார்.’என்ன பார்க்க ரொம்ப நச்சரிக்கிறீங்க? உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கண்டிப்பாகவும் அதே நேரத்தில் அன்பாகவும் கேட்டார் அந்த சாந்தி டீச்சர்.

‘தொந்தரவு பண்றதுக்கு சாரி. டீச்சர், விச்சு கணக்கு பாடத்துல படுமண்டா இருந்தான். ஆனா சமீப காலமா இப்ப கணக்கு பாடத்துல மிகவும் நல்ல மதிப்பெண் வாங்கிகுறான். அதற்கு உங்க முயற்சிதான் காரணம். அதற்கு நன்றி சொல்லி, பாராட்டத்தான் நாங்கள் வந்தோம். அவனுக்கு வீட்டில் எப்படி உதவி பண்ணிணால், கணக்கில் அவன் இன்னும் மதிப்பெண் எடுக்க வைக்க முடியும். அதைக் கேட்டுப் போகத்தான் வந்தோம்’ என்று அவசர,அவசரமாக சொல்லி முடித்தான் வினோத்.

‘அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நானே அவனை பார்த்துக்கொள்கிறேன். அடுத்த வருடம் மூன்றாம் வகுப்பு போகிறான். அப்பவும் நான்தான் அவனுக்கு கணக்கு டீச்சர். . டீச்சரா நான் என் வேலையைப் பார்க்கிறேன். நான் வரட்டுமா? என்று எங்களுடைய பதிலுக்குக் கூட காத்திருக்காமல், ’சர்’ என்று விரைந்து தன்னுடைய அறைக்கு சென்று விட்டார் சாந்தி டீச்சர்.

வழியெல்லாம் கணக்கு டீச்சர் புகழாரம்தான் விமலாவுக்கு. ஆனால் எனக்கு அந்த தேவதையை எங்கேயோ பார்த்த ஞாபகம்.

20250423100134611.jpeg

இப்போது நினைவுக்கு வந்துவிட்டது கும்பகோணத்தில் இருக்கும் பொழுது ஒரு 10 வருடங்களுக்கு முன்னால் சாந்தியைப் பெண் பார்க்க நான் போனேன். அப்பொழுது வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசினாள் சாந்தி. நான் நன்றாக படித்து இருக்கிறேன். கல்யாணத்துக்கு பிறகும் வேலைக்கு போவேன். என் கையில் என் வருமானம் எனக்கென ஒரு தொழில். இதுதான் என் வாழ்க்கை சித்தாந்தம். அதற்காக வீட்டு வேலையையும் விட்டு விட மாட்டேன். நல்ல மருமகளாகவும், நல்ல ஆசிரியராகவும் சுயக்கட்டுப்பாட்டுடன் நான் தொடர்ந்து இருப்பேன். ’நீங்கள் நான் வேலைக்கு போகக்கூடாது என்று சொல்கிறீர்கள் இது எனக்கு சரிப்பட்டு வராது’ என்று சொல்லி.’நீங்கள் வேறு பெண்ணை பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று மன உறுதியுடன் சொன்னவள்தான் சாந்தி. எனக்கு அவளை மிகவும் பிடித்திருந்தாலும், என்னுடைய அப்பா,அம்மாவின் விருப்பத்திற்கு எதிராக என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

இதை விமலாவிடம் சொல்லலாமா? வேண்டாமா? என்று எண்ணிக் கொண்டே வீட்டிற்கு வந்தோம்.சாந்தி எல்லாவற்றையும் மறந்திருப்பாளா ?? இல்லை நடிக்கிறாளா? என்று எனக்கு புரியவில்லை.

சாந்தி எங்கள் பையனுக்கு ஒரு நல்ல கணக்கு ஆசிரியராக மட்டுமே இருந்துவிட்டு போகட்டுமே. பழையதை எல்லாம் புரட்டிப் பார்த்து புதிய பிரச்சனைகள் வருவதை தவிர்க்கலாமே என்று என் ஆழ்மனம் சொன்னது.

’அவளுக்கு திருமணம் ஆகிவிட்டதா?’ அடுத்த முறை பார்த்தால் கேட்க வேண்டும். எப்படி கேட்பது? எவ்வாறு தொடங்குவது?’ என்று எனக்குள் யோசித்துக் கொண்டிருந்த்தேன்.

மறுநாள் முதல், நானே என் பையனை பள்ளியிலிருந்து அழைத்து வருவதாய் சொன்னேன். ’வள்’ லென்று விழுந்த விமலா, ஏன் அந்த சாந்தி டீச்சர பார்க்கணுமா?என்று ஒரு போடு போட்டாளே பார்க்கலாம்.

இது எப்படி அவளுக்கு தெரிந்தது என்று ஆச்சரியப்பட்டேன். கண்ணதாசன் 'இரண்டு மனம் வேண்டும்’ என்று பாடி விட்டுப் போய் விட்டார்.

அவருக்கு தெரியுமா ஒரு ஆணுக்கு எத்தனை மனம் இருந்தாலும் அதை மனைவி கண்டுபிடுத்து விடுவாள் என்று.

’ஏதோ ஒரு வேளையாவது உனக்கு ஓய்வு கொடுக்கலாம்னு நினைத்தேன் ‘என்று சொல்லி அவள் முன் வழிந்தேன்.

"அவங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு பையன் இருக்கான். அஞ்சாங்கிளாஸ் படிக்கிறானாம். விச்சு சொன்னான்."

இந்த பதிக் பொதுவானது தான். எனக்கானது அல்ல என்று தான் தோன்றுகிறது.