தொடர்கள்
அரசியல்
தராத பேட்டி-மிஸ்டர் ரீல்

உதயநிதி ஸ்டாலின்

உங்கள் கட்சித் தலைவர் முதல்வர் 2045-இல் கூட திமுக தான் ஆட்சியில் இருக்கும் என்று சொல்லி இருக்கிறாரே ?

அது உண்மை தானே !! ஆனால் 2045-ல் இன்பநிதி முதல்வராக இருப்பார் என்று ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். அப்படி சொல்லாததால் இன்பநிதி கோபித்துக் கொண்டு சண்டைக்கு வந்து விட்டார். அப்புறம் பாட்டி தான் சமாதானம் செய்து வைத்தார். கட்சித் தலைவர் முதல்வர் எல்லாம் நமது பரம்பரை சொத்து யாருக்கும் போகாது பயப்படாதே என்று சொன்னதும் தான் கூல் ஆனார்.

கூட்டணி கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்கிறார்களே ?

ஆட்சியில் பங்கு என்றால் ஊழலில் பங்கு அமலாக்கத்துறை சோதனையில் பங்கு இதையெல்லாம் சமாளிக்கும் தைரியம் இருந்தால் ஆட்சியில் பங்கு நிச்சயம் உண்டு.

தொடர்ந்து அமலாக்கத்துறை திமுக அமைச்சர்கள் வீடுகளில் சோதனை செய்கிறதே?

அமலாக்கத்துறை அதிகாரிகள் பாவம் டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வர ரொம்பவும் சிரமப்படுகிறார்கள். எனவே அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தை சென்னையில் அமைச்சர்கள் வசிக்கும் பசுமை வழி சாலையில் வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் மனு தந்து இருக்கிறோம். பசுமை வழிச் சாலையில் அமலாக்கத்துறை அலுவலகம் இருந்தால் அமைச்சர்கள் வீட்டுக்கு அவர்கள் நடந்தே போய் சோதனை செய்யலாம். அமைச்சர்களும் நெஞ்சுவலி என்றெல்லாம் சொல்லாமல் வாக்கிங் போவது போல் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கும் வருவார்கள்.

இப்படி எல்லாம் திறமையாக உங்களுக்கு யோசிக்க யார் கற்றுக் கொடுத்தது?

இது திராவிட மாடல் ஆட்சி இங்கு திறமைக்கு தான் மரியாதை மதிப்பு வாரிசுகளுக்கு கிடையாது. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழக ஆளுநர் பற்றி ... ?

அவர் ரொம்பவும் நல்லவர் அவரே தொடர்ந்து ஆளுநராக இருக்க வேண்டும் என்றுதான் என்னுடைய அம்மா கோயில் கோயிலாக போய் பிரார்த்தனை செய்கிறார்.

அன்புமணி ராமதாஸ்

உங்களுக்கும் மருத்துவர் ஐயாவுக்கும் என்னதான் பிரச்சனை?

ஒரு பிரச்சனையும் கிடையாது நேற்று கூட அவரை தொலைபேசியில் அழைத்து பிபி மாத்திரை சாப்பிட்டீர்களா என்று விசாரித்தேன். ஒரு மகனாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவன் இப்படி எனக்கு இரட்டை வேடம் இருந்தாலும் எனது கடமையை நான் சரியாக செய்கிறேன்.

ஆனால் அவர் அழைக்கும் ஆலோசனை கூட்டத்திற்கு நீங்கள் போக மாட்டேன் என்கிறீர்களே?

அப்படியெல்லாம் இல்லை சென்னையிலிருந்து திண்டிவனம் போக நான்கு மணி நேரம் ஆகிறது ஏகப்பட்ட டிராபிக் ஜாம் நான் போவதற்குள் மீட்டிங் முடிந்து பெரிய ஐயா தூங்கப் போய் விடுகிறார் இதுதான் உண்மையில் நடந்தது. நானும் வந்தது தான் வந்தோம் என்று தோட்டத்துக்கு போய் பச்சை மிளகாய் காய்கறி கொத்தமல்லி கருவேப்பிலை கீரை என்று பறித்துக் கொண்டு வீடு திரும்புகிறேன்.

ஆக நீங்கள் மீட்டிங் போகவில்லை காய்கறி பறித்துக் கொள்ள தான் போய் இருக்கிறீர்கள்?

இப்படி எல்லாம் நீங்கள் திமுக மாதிரி பேசக்கூடாது நான் நடந்ததை சொன்னேன்..

சரி நான் தான் முடிவு செய்வேன் நான் தான் முடிவு செய்வேன் என்று திரும்பத் திரும்ப பெரிய அய்யா சொல்கிறாரே?

கண்டிப்பாக கட்சியின் நிறுவனர் என்ற முறையில் அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அவர் என்ன முடிவு செய்ய வேண்டும் என்பதை கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி அவர்களிடம் சொல்லி அனுப்புவேன் அவர் போய் சொல்வார் அதன் பிறகு அவர் முடிவெடுப்பார்.

சரி எந்த கட்சியுடன் கூட்டணி?

பாட்டாளி மக்கள் கட்சி சமூக நீதிக்காக கட்சி இட ஒதுக்கீடுக்காக போராடும் ஒரே கட்சி யார் எனக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி தருகிறார்களோ யார் எனக்கு மத்தியில அமைச்சர் பதவி தருகிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி இது சமூக நீதிக் கூட்டணி வன்னியர்களுக்கான கூட்டணி என்பதை மறந்து விடாதீர்கள்.