ரேவண்ணாவின் பெரிய கொடுக்கி, ஊர்மிளா, பூப்பெய்தி விட்டாளா? அதற்கு கட்டிலும் பீரோவும் மிக்சியும் புதுக்குடித்தனம் புகுவது போல... அல்லது கல்யாண சீர்வரிசை டிஸ்ப்ளேபோல காட்சி தருமா?
ரேவண்ணா, கேரள ஸ்பெஷல் லாட்டரி 5 கோடி அல்லது 10 கோடி அடித்து விட்டாரா? அல்லது திருப்பதி லட்டு சேல்ஸ் பிரான்ச் ஏதாவது தனியாக ஆரம்பித்து விட்டாரா?
அண்ணிகாருவுக்கு பூர்வ சொத்து ஏதாவது கிளைய்ம் ஆகிவிட்டதா?
'ஏதோ ரேவண்ணா குடும்பத்தினர் வாழ்வில் தரித்திரம் ஒழிந்தால் எல்லோருக்கும் நிம்மதி..!'
"குண்டுராஜாகாரு...! எங்கள் தேவுடு... ஏடு கொண்டலவாடா...!" என்று வரவேற்றான் ரேவண்ணா வாயெல்லாம் பல்லாய்.
குண்டுவை இன்னும் ஸ்டிக்கர் பிய்க்காத புதிய நாற்காலியில் அமர வைத்து, ஆரத்தி சுத்தாத குறை!
தம்பதிகள், அவனுக்குச் சுடச்சுட பால் பாயசம் நைவேத்தியம் செய்தார்கள்.
"என் மீது அன்பு மழை பொழிய ஆந்திர தேசத்திலிருந்து வந்திருக்கும் இந்த அற்புத மனிதர்கள் வாழ்க...!" என்று உளமாற வாழ்த்தி பாயசத்தை அருந்தினான் குண்டு.
அனுமனைப்போல் உள்ளே நுழைந்தான் அப்பாராவ்!
"என்னடா ராவ், நான் இல்லாத ரெண்டு நாள்ல உன் முதலாளி ஜாக்பாட் அடிச்சுட்டாரா? ஒரு டெலிபோன் செஞ்சு சொல்லத் தேவலை...?" என்றான் குண்டு.
தம்பதியர் யாரையோ வரவேற்க வாசலுக்கு போக, வேகமாய் அருகில் வந்தான் ராவ். குனிந்து குண்டுவின் செழித்த காதில் அந்த தலைப்புச் செய்தியைச் சொல்ல, குண்டுராஜாவுக்கு யாரும் சுற்றாமலேயே தலை சுற்றியது!
"அட தேவுடா...!" என்று தலையில் கை வைத்துக் கொண்டான்.
'கிழவி என்னைப் பொலிபோட்டுடப் போறது உறுதி!'
ராவ் சொன்ன செய்தியின் சாராம்சம்:
குண்டுராஜா, ரேவண்ணாவிடம் பத்திரமாக வைத்திருக்கச் சொல்லியிருந்த மூன்று வடச் சங்கிலியை, அவன் பத்திரமாக சேட்டுக் கடையில் வைத்து, இரண்டு லட்சம் வாங்கி விட்டான்!
"அண்ணிகாரு, இது நியாயமா?" என்று கதறினான் குண்டு.
"கவலை லேதுடா தம்புடூ. உடனே புது மெசின் வாங்கி பிரின்ட் போட்டு, ரொட்டேஷனு பண்ணி, டபிள் மடங்கு தருவதா சொல்லி இருக்காரு குண்டு, சிந்திஞ்சகண்டே...கவலைப்பட லேது...!" என்றாள் புதுப்பட்டு புடவை முந்தானையைச் செருகியபடி பதறாமல்.
பட்டு பஞ்சக்கச்சம் டிசைன் தெரிய, பின்புறத்தை ஆட்டி ஆட்டி நடந்து வந்தான் ரேவண்ணா.
"அடப்பாவி, ரேவண்ணா. சங்கிலிய கபளிகரம் செஞ்சிட்டே. நான் கொடுத்த தாத்தாவின் ஒரு லட்சம் ரொக்கம் எங்கே?" என்று பதறினான் குண்டு.
தான் வாங்கிய வீட்டு அலங்காரப் பொருட்களைக் காட்டினான் ரேணிகுண்டா ரேவண்ணா.
சர்க்கரை அளவு கூடி, இரத்த அழுத்தம் குறைந்து, நெஞ்சில் படபடப்பு அதிகமாகி, இடது பக்க இதயத்தில் புத்தம்புது வலியொன்று உருவாக, ஒரு முழு மெடிக்கல் செக் அப்புக்குத் தயாரான குண்டுராஜா, தான் கீழே விழுந்து விடாமலிருக்க அப்பாராவைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டான்.
*****
பல மாதங்கள் உழைத்து, பல மீட்டிங்குகள் போட்டு, பாடுபட்டு உருவாக்கி, தலைகீழாக எண்ணி, விண்ணில் அனுப்பப்படும் விண்கலம் நெருப்பு கக்கி கொண்டு மேலே செல்லும். அப்படி 101- வது மிஷன் போனபோது மூன்றாவது அடுக்கு பிரிகையில் தோல்வி கண்டதுகூட பரவாயில்லை. ஆனால், தோல்விக்கான விளக்கம் தரும் இஸ்ரோ தலைவர் படும்பாடு அவருக்குதான் தெரியும். சுப்புசாமியின் கதையும் இப்படித்தான் ஆனது. காவிரியைப் போல பொங்கி தனது ஆதங்கங்களை தெரிவித்த தாத்தா, விழா முடிவில் ஆர்ப்பாட்டமில்லாத கூவமாய் ஆகி, நாறித்தான் போனார்.
அவரைப் பொறுத்தவரை தான் செய்த வித்தியாசமான ஆர்ப்பாட்டங்கள் சபையோரிடம் முறையாகச் சென்று, விளைவுகளை ஏற்படுத்தும் என்று காத்திருந்த வேளையில், தாழி உடைந்ததுபோல ஹாஃப் பிளேடு செய்த காரியம் ஏற்படுத்தி விட்டது.
கோமு மட்டம் தட்டியிருந்தால்கூட மன்னித்திருப்பார். வளர்த்த கிடா மார்பில் பாய்ந்த கதையாக திருட்டுப்பயல் கருணா அவரை உண்டு - இல்லை என்று ஆக்கியதை ஏழேழு ஜென்மத்திற்கும் மன்னிக்கத் தயாரில்லை.
*****
சுப்புசாமியின் ஆவேச சீமான் பேச்சு உரையால் உறைந்திருந்த கூட்டம், தலைவி கோமு எழுந்ததும் அமைதியாக இருந்தது.
தன்மீது படிந்த கறைகளை இந்தத் தலைவி சமாளித்து விடுவாள் என்பது தெரிந்த விஷயம்தான். ஆனால், அதை அவள் எப்படி வெளிப்படுத்தப் போகிறாள் என்று அனைவரும் ஒரு மர்மக்கதை மன்னனின் சஸ்பென்ஸ் யுக்தி திறமையை எதிர்பார்த்துக் காத்திருப்பதுபோல் காத்திருந்தனர்.
போடியத்தில் ஒரு கையை ஸ்டைலாக ஊன்றி கொண்டு, மைக்கை தன் பக்கம் சிறிது நகர்த்திக் கொண்டாள் கோமு. பொங்கி எழுந்த கணவரை தீர்க்கமாகப் பார்த்தாள். பின்னர், சக தோழிகளைப் பார்த்து, பதறாமல் ஒரு டாக்டர் ஐயா புன்சிரிப்பு!
"டியர் லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன், நன்றி, நன்றி. 'நன்றியுணர்வு என்பது ஆன்மாவிலிருந்து துளிர்க்கும் அழகான மலர்!' என்று ஹென்றி வார்ட் அழகாகச் சொல்லியுள்ளார். நம் அனைவரின் சார்பாக இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராகப் பங்கு பெற்றுள்ள மரியாதைக்குரிய தி சென்னை சிட்டி பேமஸ் கருணா அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள். அவரது வருகையால் இந்த அழகிய பாராட்டு விழா சிறப்பாக அமைந்தது. பழுத்த மரம் கல்லடி படும் என்பார்கள். என் கணவர் என்னை, ஆண் விடுதலையை நாடி தன் கருத்துகளை முன் வைத்திருக்கிறார். சாதாரணமாக இதுபோன்ற நுட்பமான கருத்துகளை அவர் இதுவரை வைத்ததில்லை. அப்படியே சிறு சிறு எதிர்ப்புகளை அவர் காட்டியிருந்தாலும் அதில் வெற்றி பெற்றதே இல்லை. ஆனால், இன்றைய நிகழ்வு திட்டமிட்ட ப்ரோக்ராம். இதை நிகழ்த்தியவர் எனக்கோ அல்லது உங்களுக்கோ யார் என்று நன்கு தெரியும். இருந்தாலும் நமக்கு அது தேவையில்லை...!" சற்று நிறுத்திய பாட்டி, பொன்னம்மாள் டேவிட்டை கருணையாகப் பார்த்துக்கொண்டே சிறிது தண்ணீர் அருந்தினாள்.
மறுபடியும் அங்கத்தினர்களை அன்போடு நோக்கிவிட்டு, பின்னர் தொடர்ந்தாள்.
"அப்கோர்ஸ் நான் என் கணவருக்குப் பதில் அளிப்பது என் கடமை..."
"நீங்கள் ஏன் பெரியம்மா பதில் சொல்ல வேண்டும்? நான் சொல்கிறேன்...!" என்று எழுந்தான் கருணா ஆவேசமாக.
கோமு, சுப்புசாமி உட்பட அரங்கு திடுக்கிட்டு அவனைப் பார்த்தது.
"நடுவால கிராஸ் பண்ணுறதுக்கு சாரிம்மா. மொதல்ல என்னையப்பத்தி சார்ட்டா சொல்றேன். ஒரு ஹாஃப் பிளேடு, கொஞ்சம் உதார், நான் ஒரு ரவுடி. பிக்பாக்கெட் அடிக்கிறவன். இதை சொல்றதுக்கு எனக்கு ஷேமும் கிடையாது. என்னைப்போல பேர்வழிங்களையும் தன்னோட அன்பால் கட்டிப்போடும் இந்தப் பெரிய மனசு அம்மாவைக் கும்புட்டுகிறேன்...!" - என்ற கருணா, சுப்புசாமியை அலட்சியமாகப் பார்த்தான். பிறகு சொன்னான்:
"நீங்களெல்லாம் பெரிய
மனுஷனாய்யா...?"
தாத்தா அதிர்ந்தார். அவர் மட்டும் இன்னொரு ஷேக்ஸ்பியராய் இருந்திருந்தால் இன்னொரு காவியம் பிறந்திருக்கும்!
(அட்டகாசம் தொடரும்...)
தொடர்கள்
தொடர்கள்
Leave a comment
Upload