அந்த லாக்-அப் இருட்டாகவும் புழுக்கமாகவும் இருந்தது. அருகில் சுத்தம் செய்யப்படாத டாய்லெட். ஒத்துக்கொண்டபின்னும் முதுகில், முழங்கையில் லட்டி அடி. எப்போதோ விழவேண்டியது, காலம் தன் கடமையைச் செய்கிறது என்று உணர்ந்தான், லோகு.
“பசிக்குதா ?” ரைட்டர் கேட்டார்.
பசித்தது. ஆனால், வேண்டாம் என்று தலையசைத்தான்.
“டேவிட், போய் இவனுக்குச் சாப்பிட வாங்கிட்டு வாங்க!”
பெரிய அதிகாரி வந்தார். FIR படித்துப் பார்த்தார். இவனையும் பார்த்தார். வந்தவர்களை உட்காரச் சொன்னார்.
*** *** ***
தனசேகர், வங்கிகளுக்கு வாரா கடன் வசூலித்துத் தரும் கம்பெனி நடத்துகிறார். அங்கு வேலை செய்யும் 80 பேரில் லோகுவும் ஒருவன். காலில் சக்கரம்கட்டிக்கொண்டு இதுவரை 30க்கும் அதிகமான வேலை பார்த்துவிட்டான். சுய பிஸினஸ் இரண்டு செய்து சறுக்கிவிட்டான். இப்போது கலெக்ஷன் வேலை.மனசின் அலை ஓயவில்லை. ஒரே குறிக்கோள், சொந்தமாக டாக்ஸி வாங்கிஓட்டவேண்டும். இப்போது அவன் தகுதிக்கு ஸ்டியரிங்கூட வாங்கமுடியாதநிலை.
இன்றைக்கு அவன் அசைன்மென்ட் சிவநாதன். எப்போதும் தவணை தவறாமல் கிரெடிட் கார்டுக்கு பணம் செலுத்தி விடுபவர். என்ன காரணமோ, இரு முறை தவணை தப்பிவிட்டது. வசூல் செய்யவில்லையா என்று தனசேகருக்கு வங்கி கடும் நெருக்கடி கொடுத்தது. லோகுவை வாசலில் பார்க்கும்போதெல்லாம் சிவநாதனுக்கு வெறுத்துப்போய்விடும். “என் கார்டை வெச்சுக்கோங்க. ஒரு புண்ணாக்கும் வேண்டாம், ஏதோ புரட்டி, ஒரே தவணைல மொத்தப் பாக்கியும் கட்றேன். ஆளை விடுங்கப்பா” என்று சொல்லிவிட்டார்.
அந்த வார்த்தைகள் லோகுவை இரவு முழுக்க யோசிக்க வைத்தது. அடுத்த நாள். ரொக்கமாக ஐந்து லட்சம் பணம் பெற்று பொய் ரசீது கொடுத்துவிட்டான்.ஆனால், கம்பெனியில் பணம் கட்டவில்லை. சிவநாதன் இன்னும் டைம் கேட்கிறார் என்று பொய் சொல்லி, வேலையை உதறிவிட்டு, கையாடல் பணத்தை முன். பணமாகக் கட்டி, புத்தம் புது டூரிஸ்ட் கார் வாங்கி, வேறு ஊரில்ஓட்டி வந்தான்.
தனசேகர் முதலில் லோகுவுக்கு என்ன ஆனதோ என்றுதான் கலவரப்பட்டார். பிறகுதான், காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்தார். பணத்தோடு. போனது பற்றி அவர் ஆதங்கப்பட்டாரா, ஆத்திரப்பட்டாரா என்று யாராலும்கணிக்கமுடியவில்லை. ஆச்சு ஆறு வருஷம். யார் கண்ணிலும் படாமல் தப்பித்தலோகு, இப்போது லாக்-அப்-ல்.
*** *** *** ***
சமீபத்தில், மன நிம்மதிக்கு மீனாட்சி அம்மன் தரிசனம் தீர்வு தரும் என்று மதுரை போனார், தனசேகர். அதிகாலையிலேயே அவளை பச்சை ஆடையில்தரிசித்துவிட்டு, பழைய நண்பர்களோடு ஒரு வாரம் இருந்துவிட்டு, சென்னை கதை எதுவும் பேசாமல், முழுக்க முழுக்க சந்தோஷ அரட்டை, மெஸ் சாப்பாடு, பழைய படம் ஓடும் தியேட்டரில் நைட் ஷோ, பொட்டலம் சுண்டல் பார்சல்வாங்கி கீழ ஆவணி மூல வீதியில் வாக்கிங், நண்பன் தாணுவின் வீட்டுமொட்டை மாடியில் எல்லோரும் நிலாவைப் பார்த்து, பேசிப்பேசி தூங்கியது… இதுவரை இல்லாத ஏதோ ஒரு மனமாற்றத்தைக் கொடுத்தது இந்த மதுரை. ட்ரிப்.
விடிந்ததும் தாணு, “வா… ட்ரெயினுக்கு என் டாக்ஸிலயே போய்இறங்கிக்கலாம்” என்று ஒரே பிடிவாதம். காரில் ஏறினால், டிரைவர் சீட்டில் லோகு. அவன் முகத்தில் பயத்தின் உச்சம். உணர்ச்சிவசப்படாமல், தனசேகர்அடையாளம் தெரியாதது போலவே நடந்துகொண்டார்.
“தனா… என் பிஸினஸ் விஷயமா பெங்களூரு போயிட்டு மார்னிங்தான் வண்டிவந்தது. என் டிரைவர் மிஸ்டர் லோகு. சொன்னேன்ல. நான் போகவேண்டிய இடம் லோகு போனாப் போதும். அவ்ளோ சரியான ஆள். அமையணும்னுசொல்வாங்களே… அப்படி அமைஞ்சாரு.”
லோகுவைப் பற்றி தாணுவிடம் எதுவும் வாய் திறக்கவில்லை. தனக்கு ஏற்பட்டதுரோகத்தை, தான் மன்னிக்கிறோம் என்பதை உணர்ந்தபோது, காரின் ஜன்னல்காற்று இன்னும் குளிர்ந்தது.
*** *** *** ***
விதி வலியது.
சென்னை போலீஸ் லோகுவைப் பிடித்து விசாரிக்கவேண்டிய கட்டம் வந்தது.தனசேகர் சிவநாதனிடம் பேசி நஷ்டத்தை ஈடு செய்து கேஸை திரும்பப் பெற வைத்துவிட்டார். அப்படியும் ஒரு நாள் ஜெயில் வாசம் தவிர்க்க முடியாமல்போனது. லோகுவுக்கு அந்த லட்டி அடியும் வலியும் தேவைப்பட்டது. காக்கி சம்பிரதாயங்கள் முடிந்தன.
காலையில் மூவரும் சேர்ந்தே ரத்னா கஃபேயில் சாப்பிட்டார்கள். அதே டாக்ஸியில் தாணுவும் லோகுவும் மதுரைக்குக் கிளம்பினார்கள்.
*** *** *** *** ***
Leave a comment
Upload