முதலமைச்சர் ஸ்டாலின்
ஈ.டி பற்றியும் பயம் இல்லை மோடி பற்றியும் பயம் இல்லை என்று துணை முதல்வர் சொல்லியிருக்கிறாரே ?
அவருக்கு பயம் இல்லை தான் அவருக்கு இடுப்பில் மந்திரித்து தாயத்து கட்டிக் கொண்டிருக்கிறார். காளிகாம்பாள் கோயிலில் பூஜை செய்த எந்திரம் ஒன்றையும் பாக்கெட்டில் வைத்திருக்கிறார். அவருக்கு ஈ.டி மோடி பயம் இல்லை. எனக்கு அந்த பயம் உண்டு ,சமீபத்தில் பிரதமரை சந்தித்தபோது கூட நான் பயந்தபடி தான் உட்கார்ந்து இருப்பேன் பார்த்திருப்பீர்களே !!
வைகோவுக்கு இந்த முறை ராஜ்ய சபா வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே?
இது பற்றி துரைமுருகன் துரை வைகோவிடம் பேசி விட்டார். மதிமுகவை பொறுத்தவரை இறுதி அதிகாரம் துரை வைகோவிடம் தற்சமயம் இருக்கிறது.
இனிமேல் எடப்பாடிக்கு பதில் சொல்ல மாட்டேன் என்று சொல்லிவிட்டீர்களே ?
ஆமாம், ரொம்பவும் கலாய்க்கிறார் இது பற்றி பிரதமரிடமும் புகார் சொல்லியிருக்கிறேன். நான் அமித்ஷாவை விட்டு பேச சொல்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது?
தமிழ்நாடு அமைதி பூங்கா நேற்று கூட நான் கொளத்தூர் தொகுதிக்கு போனேன் ஒரு பிரச்சனையும் இல்லை போன மாதம் 200 பிக்பாக்கெட், 17 கொலை, 18 கற்பழிப்பு . இந்த மாதம் காவல்துறை தந்த புள்ளிவிவரம்படி 198 பிக்பாக்கெட், 16 கொலை, 17 கற்பழிப்பு குறைந்திருப்பதாக காவல்துறை புள்ளி விவரம். இதிலிருந்து தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
சோனியா ராகுலை சமீபத்தில் சந்தித்தீர்களே?
தமிழக காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் உங்களைப் பாராட்டியும் புகழ்ந்தும் பேசுகிறார்களா இல்லையா என்று கேட்டார்கள் தினந்தோறும் எனக்கு ஜலதோஷம் வரும் அளவுக்கு அவர்கள் பாராட்டு இருக்கிறது எந்த பிரச்சினையும் இல்லை. தமிழ்நாட்டில் காங்கிரஸ் வளராமல் நான் பார்த்துக்கொள்கிறேன் கவலைப்பட வேண்டாம் என்று சொன்னேன்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்
பாரதிய ஜனதாவையும் எதிர்க்கிறீர்கள் திமுகவையும் கடுமையாக விமர்சனம் செய்கிறீர்கள் எதற்கு ?
தமிழக வெற்றி கழகம் பெயர்தான் தமிழகமே தவிர மத்தியிலும் ஆட்சி பிடித்து மாணவர்களுக்கு நாலு புத்தகம் பென்சில் பேனா வழங்க வேண்டும் என்ற கொள்கையுடன் பெரியார், வேலு நாச்சியார், வ.உ.சிதம்பரம், எஸ். ஏ சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் போன்ற உன்னத தலைவர்கள் அடிச்சுவட்டை பின்பற்றி நாங்கள் அரசியல் செய்கிறோம்.
உங்களுக்கு அமலாக்கத்துறை பயம் இல்லையா?
ஆரம்பத்தில் இருந்தது. இப்போது உச்ச நீதிமன்றம் இருக்க அந்த பயம் போயே போச்சு.
2026-இல் நீங்கள் முதல்வர் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா ?
நான் முதல்வர் பிராடக்ட் கிடையாது. முதல்வர் பதவி ஏற்கனவே திரிஷாவுக்கு ஒதுக்கி ஆகிவிட்டது. நான் பிரதமர் பிராடக்ட் ஜனநாயகன் படம் பாருங்கள் தெரியும்.
அந்த படத்தில் நீங்கள் போலீஸ் என்று தானே சொன்னார்கள்?
யாரோ லைட் பாய் சொல்வதெல்லாம் கேட்டுவிட்டு என்னிடம் இப்படி கேள்வி கேட்காதீர்கள் அந்தப் படத்தில் நான் பிரதமராக நடிக்கிறேன். பிரதமர் பெயர் தாமோதர் விஜயேந்திர மோடி. மோடி என்ற பெயருக்கு தான் நல்ல வாக்கு வங்கி என்று எனது ஆலோசகர்கள் சொன்னதால் இந்தப் பெயர். அடுத்த பாராளுமன்ற தேர்தலில் நான் வாரணாசியில் போட்டி போட்டு வெற்றி பெற்று அமெரிக்க அதிபர் ரஷ்ய அதிபர் இவர்களிடம் எல்லாம் பேசுவேன் பாருங்கள்.
Leave a comment
Upload