தொடர்கள்
கதை
மீண்டும் ஒரு காதல் கதை - பஞ்சுதாத்தா ரொமான்ஸ் - சு ஶ்ரீ

20250626070523225.jpeg

காதல் கதைகள் எப்பொழுதுமே சுவாரஸ்யம்.

பஞ்சு தாத்தாவாகிய எனக்கு இப்ப 85 வயசு. இப்போது 80 வயசாகும் பார்வதி என்கிற பாருவை காதலிச்சு கல்யாண பண்ணிண்ட கதை உங்களுக்கு தெரியாதுதானே?இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க!

வந்த என் நண்பர் ஸ்வாரஸ்மாக கேட்கத் தொடங்கினார்.

அம்மா, அப்பாவோட எங்க குடும்ப நண்பன் பாச்சுவோட கல்யாணத்துக்கு கோவில்பட்டிக்கு நான் போனேன். மாப்பிள்ள அழைப்புக்காக வெளுக்க வேஷ்டி கட்டிண்டு, புது சட்டை ஸ்டைலா போட்டுண்டு சத்திரத்துல ஒதுக்கியிருந்த ரூமை விட்டு வெளியில நான் காலை எடுத்து வைக்கவும், அந்த பாவாடை- தாவணிப் பெண் ஓட்டமாய் ஓடி வந்து என் மேல மோதி ,கைல இருந்த சந்தன கிண்ணத்தை என் மேல கவுத்ததும் இறைவனின் திருவிளையாடல்..

அச்சச்சோ! பாத்து வரக் கூடாதோ’னு நான் எனது சட்டையை இடது கையால துடைக்க முயற்சி பண்ணினேன். அந்த பொண்ணு வலது கைல இருந்த குங்கும கிண்ணத்தையும் என் மேலயே கவுத்து, விட, வடநாட்ல ஹோலி விளையாடுவாளே ,அந்த கோலத்துக்கு என்னைக் கொண்டு வந்து விட்டாள் அந்தப் பெண்.

எனக்கு மூக்குக்கு மேல கோவம் ஏற, நான் என் கையை ஓங்கினேன். அந்தக் கணத்தில் மிரட்சியோட தலை நிமிர்த்தி அவளைப் பார்த்தேன் அந்த அழகு முகத்தைப் பார்த்து,ஒரேடியா இளகிப் போனான் இந்த பஞ்சு. என்னோட முகத்தை பார்த்து பயந்துப்போன அந்தப் பெண் புள்ளி மானாய் துள்ளி ஓடிப் போனாள்.

அப்புறம் தேடித் தேடி பார்த்தும் அன்னிக்கு பூரா அந்த தேவதை என் கண்ல படலை.அன்னிக்கு இராத்திரி என் தூக்கம் ஏனோ தொலைந்து போனது.

மறுநாள் 6.30மணிக்கு முகூர்த்தம்..

நல்லா டிரெஸ் பண்ணிண்டு ரூம் கதவை ஜாக்கிரதையா திறந்து வெளியில வந்தப்ப, என்னை விட ஜாக்கிரதையா அந்தப் பொண்ணு ரெண்டு கையால கணுக்கால் வரை பாவாடையை தூக்கிக் கொண்டு மெல்ல நடந்து வந்தாள்.

அவளுடன் நான் பேச முற்பட்டேன்.ஆனால்,வெட்கப்பட்டுக் கொண்டே அவள் சிட்டாய் பறந்து விட்டாள்.

“கெட்டி மேளம் கெட்டி மேளம், மாங்கல்யயம் தந்துனானே மம ஜீவன ஹேதுனாம்”. மந்திர உச்சாடனத்துடன் தாலி மணப்பெண் கழுத்தில் ஏறியது. அட்சதை மழைத் தூரலாய் மணமக்கள் மேல பொழிந்தது.

முகூர்த்த சக்கரைத் தட்டோடு அவள் என் முன்னால வந்தப்ப, பாவாடை தாவணியில் இருந்தாள். பாருவைப் திகைத்துப் போனேன் நான்.

20250626070720264.jpeg

எனக்கு மூளை நிலைக்கு வர சில நொடிகள் பிடித்தன.. கைல சக்கரைத் தட்டும், முகத்தில் குறும்பு புன்னகையுமாய் நின்ற அவளைப் பாத்த நான அவளுக்கு மட்டும் கேக்கறாப்பல “உனக்கு கோவில்பட்டில எங்கே இருக்கு வீடு?”என்றேன் அவளிடம்.

“ச்ச்சீ எங்க ஆம் இந்த பட்டிக்காட்டுல ஒண்ணும் இல்லை. மெட்ராஸாக்கும்” நல்லதாய் போச்சு.நினைத்தது என் மனம்.

“ஏய் குட்டி, உன் கூட கொஞ்சம் பேசணும் அந்த தட்டை யாரு கிட்டயாவது கொடுத்துட்டு மாடிக்கு வாயேன்.”

“நான் மாட்டேன்பா.. பயமா இருக்கு.”இது அவள்.

“ஏய் பொண்ணு உன்னை நான் கடிச்சு ஒன்னும் தின்னுட மாட்டேன். வா ஒரு அஞ்சு நிமிஷம் மட்டும்.”என்றேன் நான்.

“போங்க…” வெட்கத்தோட வந்தது வார்த்தை.

அடேயப்பா இன்னொரு தடவை சொல்லு”

“போங்ங்ங்க… நான் வரலை”

“அடுத்த பத்து நிமிஷத்துக்குள்ளே அதோ அந்த மாடி வளவு கிட்ட உனக்காக காத்திருப்பேன்” சட்னு படி ஏறி போனேன் நான்.

கொஞ்ச நேரமாயிற்று.

“என்னவாம், எதுக்கு கூப்டேள்? சொல்லுங்கோ ருக்குமணி, அதான் எங்க அம்மா, பாத்தா வெளுத்துடுவா” பக்கத்தில் வந்து கிசு கிசுத்தாள் பாரு.

சட்னு அவளோட ரெண்டு கைகளையும் பிடிச்சிண்ட நான்,

“ஏய் பார்வதி நீ என்னைக் கல்யாணம் பண்ணிப்பயா, நான் உன்னை கடைசி வரை கண் கலங்காம பாத்துப்பேன்.”என்றேன் நான்.

பாருவுக்கு கண் சிவந்து தாரையா கண்ணீர் கொட்டியது.“எனக்கு தெரியாது யாரும் இப்படி என்னை கேட்டதில்லை, அதிர்ஷ்டம் இருந்தா நடக்கும். நான் போறேன் விடுங்கோ.’’சொல்லி விட்டு போய்விட்டாள் அவள்.

’இதுதான் பாருவை முதல்ல இந்த பஞ்சாபகேசன் சந்திச்ச முதல் காதல் கதை. அப்புறம் கல்யாணமாச்சு.இரண்டும் பெண்பிள்ளைகளும் க்ல்யாணமாகி வெளிநாடல இருக்கா. நானும் பாருவும் இங்க தனிக்குடித்தன்ம்தான்.போதுமா.இது நடந்து 60 வருடம் ஆச்சு.இதோ பாரு காஃபி கொண்டு வர்ரா.அதை குடிச்சிட்டு மீதியை பேசட்டுமா?

மெல்ல சிரித்தபடி நகர்ந்தார் எதையோ பேச வந்த அவர் நண்பர்.