ஒரு பெண் கர்ப்பமாகி , அதனை பேணி காத்து, பிரசவித்து, அந்தக் குழந்தையை முதல் இரண்டு வருடங்கள் வரை வளர்த்து எடுப்பது என்பது, மிகப்பெரிய சாதனை என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் இதனை எதிர்கொள்ளும்போது தகுந்த துணை ஒன்று இருந்தால், அது ஒரு வரம் என்றே நினைப்பார்கள். இதற்கு என தனிப்பட்ட கல்வியே இருக்கிறது என்ற செய்தி வியப்பை தரும். இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் MSSW மற்றும் துணை ட்ரஸ்ட் இணைந்து இதனை வழங்குகிறார்கள். இந்த பயிற்சி முடித்த முதல் வருட மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவிற்கு விகடகவியின் சார்பில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு வருடத்திற்கு முன்னால் இந்த படிப்பு குறித்து விரிவாகவே எழுதியிருந்தோம்.
இப்போது அதனை முழுமையாக படித்து முடித்த மாணவர்களை சந்திக்கும்போது பெருமையாக இருந்தது. இதுவரை இந்தியாவில் இல்லாத ஒரு படிப்பை தேர்ந்தெடுத்து அதனை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்த்து சொன்னோம். எல்லோரும் மிகவும் பரபரப்போடும் , ஆவலோடும் இருந்தார்கள். MSSW தலைவர் கே ஏ மாத்யூ தலைமை ஏற்க, சிறப்பு அழைப்பாளர்களாக மகப்பேறு மருத்துவத்துறையில் பல காலமாய் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் மரு.கீதா அர்ஜுன், எழும்பூர் பகுதி கவுன்சலர் பாத்திமா , ஸ்ருஷ்டி மருத்துவ குழுமத்தின் துணை தலைவர் மரு.திவ்யா சிவராமன் MSSW முதல்வர் சுபாஷினி, துணை ட்ரஸ்ட் நிர்வாக தலைவர் சுபஸ்ரீ , பயிற்சி தொடர்பாளர் ஸ்மிதா ராஜன் , முனைவர் வைஜயந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த பயிற்சி படிப்பின் முக்கியத்துவம் பற்றி கீதா அர்ஜுன் விரிவாக விளக்கினார். இவர்களைப்போல இன்னும் நிறைய தகுதியானவர்கள் தேவை என்பதை வலியுறுத்தினார். திவ்யா சிவராமன் எப்படி தங்கள் மருத்துவமனையில் இத்தகைய ஆலோசகர்களின் பணி முக்கியமான ஒன்று என்பதை விளக்கினார். முதல்வர் சுபாஷினி பேசுகையில் துணை ட்ரஸ்ட் நிறுவனர் கிரிஷ்குமார் எப்படி இந்த ஒரு பயிற்சி படிப்பினை இணைந்து வழங்குவதற்கான முயற்சிக்கு வித்திட்டார் என்பதை சொல்லி, முதல் செட் மாணவர்கள் பட்டமளிப்பில் அவர் கலந்து கொள்ள முடியாததை குறிப்பிட்டார். இது பலருக்கும் பயனளிக்க வேண்டும் என்கிற அவரின் உயர்ந்த நோக்கத்தை துணையுடன் இணைந்து செயல் படுத்துவதில் மகிழ்ச்சி அதே நேரத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த பயிற்சி படிப்பினை 150 வருட பாரம்பரியம் கொண்ட தங்கள் கல்வி நிறுவனமான MSSW முன்னெடுத்ததில் பெருமை அடைவதையும் குறிப்பிட்டார்.
எழும்பூர் கவுன்சலர் பாத்திமா பேசும்போது தான் தாமதமாக விழாவிற்கு வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு, அதற்கு கரணம் தனது வார்டில் ஒரு பெண்மணி திடீரெண்டு பிரசவ வலி கண்டு கஷ்டப்பட்டதனால் , அவர்களை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்து விட்டு, இதுநாள் வரையில் மதுவிற்கு அடிமையாகி சரியாக கவனிக்காத அவளின் கணவனுக்கு அறிவுரை சொல்லி கூடவே இருக்க சொல்லிவிட்டு வந்ததாகவும் சொன்னார். இது போன்ற உண்மை நிலையினை கையாள்வதற்காகவே இந்த பயிற்சி படிப்பு அவசியம் வேண்டும் என்றும், அதனாலேயே தான் இந்த விழாவில் கலந்து கொள்ள வந்ததாகவும் சொன்னபோது , அரங்கமே கரகோஷம் எழுப்பியது.
மரு.கீதா அர்ஜுன் , பாத்திமாவோடு இணைந்து இந்த படிப்பில் தேர்ச்சி பெற்ற 13 மாணவர்களுக்கு PGDPH சான்றிதழ் வழங்கினார்கள். மாணவர்களில் ஒருவரான மஞ்சுளா, MSSW கல்லூரியின் தமிழ் பிரிவு முனைவராவார். இந்த படிப்பில் ஆர்வம் கொண்டு இதனை படிக்க விரும்பி படித்ததாக சொன்னார். தங்கள் கல்லூரியின் முதல்வர் கையால் பட்டம் பெற்ற போது அந்த ஆசையும் நிறைவேறி விட்டதாக சொன்னார். பட்டம் வாங்கிய மாணவர்கள் அனைவரும் ஒரு வருட அனுபவத்தை நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்கள். இந்த பயிற்சியின் சிறப்புகளில் ஒன்றான 100 மணிநேர செயல்முறை பயிற்சியில் எப்படி கர்ப்பிணி தாய் மார்களை சந்தித்து பேசினார்கள். அது எவ்வாறு அவர்களின் பார்வையினை மாற்றியது என்று ஒவ்வொருவரும் சொன்னபோது மேடையிலிருந்தவர்களும் , பார்வையாளர்களோடு கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள்.
ஒவ்வொருவரும் இந்த படிப்பினை தேர்ந்தெடுத்த காரணத்தை பகிர்ந்து கொண்டபோது , அது ஆச்சரியமாகவும், நெகிழ்வாகவும் ,பல உணர்வுகளை தருவதாகவும் இருந்தது.
முடிவாக துணை ட்ரஸ்ட் நிர்வாக அதிகாரி சுபஸ்ரீ நன்றி கூறுகையில் , இந்த பயிற்சி படிப்பை வழங்கிட முன்வந்த MSSW கல்லூரிக்கு நன்றி தெரிவித்தார். இந்த படிப்பின் மீதும் அதனை வழங்கிடும் நிறுவனங்களின் மீதும் நம்பிக்கை வைத்த மாணவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்த வருடம் இந்த பயிற்சி படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவேண்டும் அதற்கு எல்லோரின் உதவியும் அவசியம் என்றும், பல தாய்மார்களுக்கு இந்த கவனிப்பும் அக்கறையும் தேவை என்று சொல்லி இந்த வருட பயிற்சிக்கான அறிவிப்பையும் வெளியிட்டார்.
விழாவில் கலந்துகொள்ள மாணவர்களின் குடும்பத்தினர், குறிப்பாக அவர்களின் கணவர்கள், குழந்தைகள் வந்திருந்தது மனதிற்கு நெகிழ்வாக இருந்தது.
அடுத்த வருடத்துக்கான மாணவர் சேர்க்கை மேடைக்கு கீழேயே துவங்கியது பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.
Leave a comment
Upload