தொடர்கள்
அனுபவம்
காடறிதல் -5, மாலையின் மென்துகள்கள். இந்துமதி கணேஷ்

20250624163604735.jpg

ஒற்றை புல்லின் காலடியில் தான் இந்த உலகம் கிடக்கிறது- தாகூர்

பழத்தோட்டங்களை பார்த்து பழங்களை வாங்கி சுவைத்த பிறகு நாங்கள் போன இடம் எலுமிச்சை புற்கள் செழித்து வளர்ந்திருக்கும் ஒரு அற்புதமான புல்வெளி. சுற்றிலும் மலைகள் சூழ எலுமிச்சையின் நறுமணம் நம்மை கிறக்குகிறது. மென் தூறல் இதமாய் சுகம் சேர்த்தது. சுற்றி இருக்கும் இயற்கை காட்சிகளை நாம் பார்க்க லகுவாய் இரண்டு உயரமான பார்வை கோபுரங்கள் அங்கு அமைக்கபட்டிருந்தன. ஆனால் அந்த கோபுரங்களும் அதன் மேலேற செய்யப்பட்டிருந்த படிகளும் மூங்கில் கழிகளால் செய்யப்பட்டவை, அவைகளை கயிறுகள் மற்றும் ஆணிகள் கொண்டு இறுக்கி இருந்தார்கள். நம்முடைய கனத்தை அது தாங்குமா என்ற சந்தேகம் வரவே செய்தது. லேசாக ஆடும் அந்த படிகளில் ஏறுவது சாகசமான செயலாகவே தோன்றியது. ஐந்து பேர் மட்டுமே ஒரு நேரத்தில் ஏறுங்கள் என்று சொல்லி இருந்தார்கள். நாங்கள் தயங்கியபடி கீழ் நிற்க, மகள் வேகமாக மேலேறி விட்டாள், அவளே தைரியமாய் ஏறுகிறாளே என்று நாங்களும் ஏறினோம். அங்கிருந்து சுதந்திரமாய் மலைகளை பார்க்க முடியாதவாறு மேற்கூரை சற்றே இடித்தது. எனினும் குனிந்து பார்த்தால் மிக அருமையாக இருந்தது இயற்கையின் எழில் கூட்டும் வண்ணங்கள்.

கீழே இறங்கும் போது மொத்த பார்வை கோபுரமுமே ஆடுவது போல இருந்ததால் கால்கள் நடுங்கின, எப்படியோ சமாளித்து இறங்கினோம். இன்னொரு கோபுரம் இதைவிட பெரிதாக இருந்தது மட்டுமல்லாமல் அதன் படிகள் வளைந்து வளைந்து சென்றதால் அதில் ஏறவில்லை. அப்போது தேக்கன் ஐயா, எங்களை ஒரு மொட்டை பாறைக்கு அழைத்துச் சென்றார். மொட்டை பாறை என்றால் ஒன்றுமே இல்லாத பாறையல்லவா என்ற கேள்வி எமக்குள் எழுவதற்கு முன்பு தேக்கனே, "இந்த மொட்டை பாறைகள் காடுகளின் நடுவே வெட்ட வெளிச் சூழலை உருவாக்கி செங்குத்தான பள்ளத்தாக்கில் பல்லுயிர் இருப்பை செழுமை செய்பவை" என்று கூறினார், நம் மனதிற்குள் எழும் கேள்விகள் இவருக்கு எப்படி தெரிகிறது என்று யோசனையுடன் நாம் அவரை பார்க்க அவர் புன்னகைமுகத்துடன் எங்களை அந்த பாறையில் அமரச் சொன்னார், எம் குழுவை சேர்ந்த அனைவரும் வருவதற்காக காத்திருந்தோம்.

என்னதான் மொட்டை பாறை என்று நாம் கூறினாலும் ஆங்காங்கே சிறு சிறு செடிகள் முளைத்திருந்த அந்த பாறை நல்ல குளுமையாக இருந்தது. சிறு செடிகளின் இருப்பு தான் உலகின் பேரதிசயமாக உள்ளது. உலகில் கோடான கோடி மரங்களை விட சிறு செடிகளே அதிகம் உள்ளவோ என்ற ஐயம் எழுந்தது. அங்கு அமர்ந்து சுற்றிலும் உள்ள மலைகளை ரசித்துக் கொண்டிருந்தோம். "நான்கு மணியின் போதுள்ள பகல் வெளிச்சத்தினுள் மாலையின் மென்துகள்கள் அடர்ந்திருக்கின்றன" என்ற எஸ். ராவின் கூற்று உண்மை தான் போலும் இவ்வளவு ரம்யமான மாலை பொழுதை இதற்கு முன் கண்டதில்லை. சூரியன் மேகங்களுக்கு பின் ஒளிந்தும் வெளிவந்தும் நம்முடன் விளையாடிக் கொண்டிருந்தது. தூரத்தில் தெரிந்த ஒரு மலையில் மேல் கருமேகங்கள் சூல் கொண்டிருந்தன. அங்கே மழை பெய்துகொண்டிருப்பது தெரிந்தது. மழை மெல்ல மெல்ல ஒவ்வொரு மலைக்கும் பயணிக்க தொடங்கி இருந்தது, முகிலினங்கள் அலைக்கிறதே முகவரிகள் தொலைந்தனவோ, முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ! வைரமுத்துவும் இளையராஜாவும் காதருகில் வந்து இசை மீட்டினார்கள்.

கண்களால் பார்ப்பதால் ஒருபோதும் மழையை புரிந்து கொள்ளவே முடியாது. களிமண்ணை போல மழையில் கரைந்து போவது தான் அதை அறிந்து கொள்வதற்கான எளிய வழி அல்லது ஒரு காட்டுச் செடி போல மழையிடம் தன்னை ஒப்படைத்துவிட்டு அதன் ஆவேசத்தை ஏற்றுக் கொள்வதுதான் மழையை அறிந்து கொள்ள வழி போலும் மீண்டும் எஸ். ராவின் வரிகள் மனதை வருட ஒருவேளை இன்று அப்படி ஒரு மழைக்கு நம்மை நாம் ஒப்புக் கொடுக்கும் நாளாக இருக்குமோ என்று நினைத்தேன். அதற்குள் குழு அன்பர்கள் அனைவரும் பாறைக்கு வந்து சேர்ந்திருந்தார்கள். மழை எங்கள் மலைக்கு வருவதற்குள் ஒரு குழு புகைப்படத்தை எடுத்துக் கொண்டோம். பிறகு எங்களுடன் பேச தொடங்கினார் தேக்கன்..அந்த பாறையை சூழ்ந்திருந்த மலைகளை காட்டி, "நமக்கு வெகு அருகில் தெரியும் இந்த அடர் காடுகள் தான் மன்னவன் சோலா பகுதிகள். இதில் உள்ள தாவர தொகுதிகளை பற்றி கூறினேன் அல்லவா, இங்கு தான் பனிரெண்டு வருடத்திற்கு ஒருமுறை நீல குறிஞ்சி மலர்கள் பூக்கும்" என்றார்.

நீலக்குறிஞ்சி அல்லது குறிஞ்சி (ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்தியானா) என்பது மேற்கு தொடர்ச்சி மலையின் சோலைக் காடுகளில் காணப்படும் ஒரு புதர் வகை தாவரம். கடிகாரம் தவறாமல் நகர்வது போலவே, ஒவ்வொரு பன்னிரண்டு வருடங்களுக்கும் ஒரு முறை மேற்கு தொடர்ச்சி மலைகளில் நீல குறிஞ்சி மலர்கள் பூக்கின்றன. நீலகிரியின் புல்வெளி மலைகள், பசுமையின் முடிவில்லாத கடலில் இருந்து தன்னை குறிஞ்சி தோட்டங்களின் நீல தடாகமாக மாற்றிக் கொள்ளும் அற்புத தருணமது. இந்த புதர்கள் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூத்து, முழு மலைத்தொடரையும் தனித்தனி நீல நிற தீவுக்கூட்டமாக மாற்றும் தன்மையுடையவை. ஸெல்மா லாகர்லெவ் எழுதிய தேவமலர் என்ற புதினத்தில் வருவது போல காடே புதிதாய் மாறும் தருணமது, அது ஒரு தேவ தருணம் என்றும் கூறுகிறார்கள்.

தேக்கன் தொடர்ந்தார், "ஆனால் தற்போது மன்னவன் சோலா வரையிலும் மரப்பயிர்களின் வேளாண் தொழில் தொடங்கிவிட்டது. அதனால் பாரம்பரியமான மரங்களையும் செடிகளையும் வெட்டிவிட்டு தைலக் காடுகளையும், ரப்பர், காகிதம், மேசை செய்ய பயன்படும் மரங்களையும் வளர்க்க தொடங்கி விட்டனர், சோலை காடுகளை அழித்து இவர்கள் பணப்பயிர்களை விளைவிக்க பார்க்கிறார்கள். இந்த மாநிலத்தின் நில அமைப்பு மலையும் ஆழியும்(கடல்) சார்ந்து அமைந்திருப்பதால் மக்கள் காடுகளையும் மலைகளையும் தங்களுக்கே என்று பட்டா போட்டுக் கொண்டார்கள். நாம் இப்போது நிற்கும் பாறையும், குளித்த அருவியும் கூட என்னுடையது என்று கூறும் நபர்கள் இந்த ஊரில் உண்டு" என்று கூறிய போது, காட்டழிப்பு எங்களுக்குள் தீராத கசப்பை ஏற்படுத்தியது.

அந்த நேரத்தில் என் கணவரிடமிருந்து ஒரு கேள்வி எழுந்தது, "ஐயா இந்த சோலை காடுகளை நம்மால் மறுபடியும் மீட்டெடுக்க முடியுமா ?" என்று ஆதங்கத்துடன் கேட்டார், அதற்கு தேக்கன், "நம்மால் உடனே எதையும் தோற்றுவிக்க முடியாது எனினும் அழிவை தடுத்தால் இயற்கையே தன்னை மீட்டுக் கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்துகிறோம் என்ற திருப்தியாவது நமக்கு கிட்டும்" என்றார் கவலை தோய்ந்த குரலில். "நூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு மலை முழுவதும் நீலக் குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கும், தேனீக்களின் ரீங்காரம் நிறைந்திருக்கும். ஆனால் தற்போது இந்த மரப்பயிர் வேளாண்மையினால் நீலக் குறிஞ்சி பூக்கும் இடங்கள் குறைந்துவிட்டன. குறிஞ்சி பூக்கும் நிலங்கள் குறைய குறைய அருவிகள், ஆறுகள் குறையும். காவேரிக்கு நீரை சேர்த்த அமராவதி ஆறு இன்று உடுமலையை கூட தாண்ட முடியாமல் போனதற்கு காரணமே இந்த நகரமயமாதல் தான்" என்றார்.

கேரளாவில் சில நாட்கள் வாழ நேர்ந்த போது அங்குள்ள நிலவியல் அமைப்பை உணர முடிந்தது, நாங்கள் குடி இருந்த வீடு மிக உயர்ந்த இடத்தில தான் இருக்கும், அங்கிருந்து கீழ் நோக்கி பயணிக்கும் சாலையை கண்டு ஆரம்ப நாட்களில் வியந்ததுண்டு ஆனால் தற்போது அழிந்து வரும் சோலைக் காடுகளை காணும் போது மனிதன் "ஒரு மிக பெரிய சல்லிப் பயல்" என்ற உண்மை மனதை சுட்டது. கண்ணெதிரே இயற்கை கொஞ்சம் கொஞ்சமாய் அழிவதை பார்த்துக் கொண்டு வாழாவிருப்பதை விட கொடுமை வேறு எதுவும் இல்லை. என்ன செய்யலாம், என்ன செய்ய போகிறோம் என்ற கேள்விகள் நம் மனதை துளைக்க துவங்கியது. நாம் தானே இந்த அழிவுக்கு காரணம், நாம் நுகரும், பின்பு வீணாக்கும் ஒவ்வொரு பொருளும் இயற்கையை அழித்து உருவானவைகளே என்ற உண்மை மனதை சுட்டது. நம் தலைமுறையில் சோலைக் காடுகளை அழிக்கிறோம் என்று தெரியாமலே நாம் வாழ்ந்து கொண்டிருந்தோம், இந்த பயணத்தின் மூலம் அடுத்த தலைமுறைக்கும் அவற்றின் முக்கியத்துவத்தை விதைக்க முடிந்தால் அதுவே நாம் இயற்கைக்கு செய்யும் மிக் பெரிய நன்மையாக இருக்கும் என்று தோன்றுயது.

அனைவரும் எண்ணங்களில் மூழ்கி மௌனமாய் இருந்த போது மகள் என்னிடம் ரகசியமாய் "ஏம்மா குறிஞ்சி பூ பன்னிரண்டு வருஷத்துக்கு ஒருக்க மட்டும் பூக்குது ?" என்று கேட்டாள். அவள் என் காதில் ரகசியம் பேசியதை பார்த்த தேக்கன், "என்கிட்டே கேளுங்க பாப்பா" என்க அவளும் என்னிடம் கேட்ட கேள்வியை அவரிடம் கேட்டாள். "நிறைய வகையான குறிஞ்சி மலர்கள் இருக்கு, ஒவ்வொரு வகை குறிஞ்சி மலர்களும் அதன் வகைகளுக்கேற்ப 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 17 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றும் 36 ஆண்டுகளுக்கு ஒருமுறை என பூக்கும் தன்மை கொண்டவை. பெரும்பாலும், குறிஞ்சி மலர்கள் அவை உயிர் தப்பி பிழைப்பதற்காகத்தான் இவ்வாறு தகவமைப்பைப் பெற்றுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். குறிஞ்சி மலர்கள் ஒருமுறை பூத்த பிறகு அதன் விதைகளை மட்டும் நிலத்தில் விட்டு மடிந்து, மீண்டும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதிலிருந்து புது செடியாக வளர்ந்து பூக்கின்றன. இவற்றிலிருந்து கிடைக்கின்ற தேன் மிகவும் இனிமையாகவும், மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவும் இருப்பதனால் மற்ற உயிரினங்களிடம் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் வகையில் நீண்ட காலம் கழித்துப் பூப்பதாகவும் கூறப்படுகிறது".

"இந்தச் செடிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் பூப்பதற்கான பண்புகள் அதன் மரபணுவிலேயே அமைத்துள்ளன.மேலும், மழைப் பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்கள் குறிஞ்சி மலர்கள் பூக்கும் சுழற்சியைக் கொண்டு அவர்களின் வயதை கணக்கிட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது. முதுவர்கள் மற்றும் தோடர்கள் ஆகிய உள்ளூர் பழங்குடியினரின் தொன்மங்கள் மற்றும் கலாச்சாரத்தில் இந்த மலர் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. இதை முருகப்பெருமானின் மலர் என்று பழங்குடியின மக்கள் நம்பி வந்துள்ளனர்" என்று கூறி முடித்த தருணத்தில் மழை எங்கள் மலைக்கு வந்து சேர்ந்தது, சற்றே பெரிய தாரைகளாக விழத் தொடங்கவே மழையில் சற்றே நனையலாம் என்று நிதானமாகவே நடந்து அங்கு அருகில் இருந்த கடைகளை அடைந்தோம். அங்கு எலுமிச்சை புற்களை வைத்து தயாரித்த தேயிலை கிடைத்தது, மேலும் சில பழங்களை வாங்கி முடித்த போது மழை சற்றே வெறித்திருந்தது, அந்த மழையில் நனையும் போது சளிப்பிடித்து விடுமே என்ற கவலையுணர்வெல்லாம் வரவேயில்லை. புல்வெளியில் நின்று சில புகைப்படங்கள் எடுத்துவிட்டு மறுபடியும் ஜீப்பில் ஏறிக் கொண்டோம்.

வரும் வழியில் குழந்தைகளிடம், "இவ்வளவு சொன்னாங்களே அதுல இருந்து உங்க ரெண்டு பேருக்கும் என்ன புரிஞ்சது ?" என்று கணவர் கேட்ட போது மகன் உடனே, "அதிகமா பொருள் வாங்க கூடாது, நாம் பயன்படுத்துற பொருள் எல்லாமே காட்டை அழிக்கும் சரியா ப்பா " என்றான், "சரியா சொன்னடா கண்ணா, நாம நம்மோட நுகர்வை குறைசிக்கணும், பென்சிலை சும்மா சீவிக்கிட்டே இருந்து கரைச்சு அடுத்ததை கேக்க கூடாது, சும்மாவே பேப்பரை வீணாக்க கூடாது" என்று மகளை பார்த்து புன்னகைக்கவும் அவள், "இனிமே அப்படி செய்ய மாட்டேன் ப்பா" என்று சமர்த்தாய் தலையாட்டினாள்.

“உடல் ஒரு அதிசயம் — அது

கால்கள் மீது கட்டப்பட்டுள்ள

ஒரு கோட்டை”

என்று எழுத்தாளர் ஹென்றி டேவிட் தோரா கூறியதை நினைவு கூர்ந்தேன். இவ்வளவு பெரிய கோட்டையை(அதாங்க உடம்பு) தாங்கும் இந்த கால்கள் வலிக்கத் தொடங்கவே ஓய்விற்காக உடல் கெஞ்சியது. மீண்டும் தங்குமிடம் வந்து சேர்ந்த போது சூடான பழம் பொறி(நேந்திரம்) பழத்தில் செய்யப்பட்ட பஜ்ஜியும் தேநீரும் தயாராக காத்திருந்தது. அதை கொறித்தபடி மெல்ல மெல்ல கவிந்த இருளை ரசிக்கத் தொடங்கினோம், இன்னும் சற்று நேரத்தில் குளிர தொடங்கிவிடும் என்று ஏற்கனவே எச்சரித்திருந்தார்கள் என்ற போதும் அவ்வளவு கடும் குளிரை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வெளிச்சத்திலிருந்து வானம் இருளுக்கு போகும் நொடியை நம்மால் கூர்ந்து அவதானிக்க முடிந்ததில்லை. இப்போது இருட்டி விடும் என்று வானத்தையே அண்ணாந்து பார்த்து காத்திருந்தால் அப்போதெல்லாம் வெளிச்சம் மிச்சமிருக்கும், நாம் வேறு செயலில் மனதை செலுத்தி இருக்கும் ஒரு நொடியில் இருள் கவிந்திருக்கும். இருள் எப்படி தன்னுடன் குளிரையும் சேர்த்து அழைத்து வருகிறது என்பதை யோசித்து கொண்டு அமர்ந்திருந்தேன்.

தங்குமிடத்தில் பணியில் இருந்த ஒருவரின் வெள்ளை நாயுடனும் குட்டி பூனையுடனும் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். தட்டான்கள் நிறைய சுற்றிக் கொண்டிருந்த அந்த இடத்தில் எந்த குழந்தையும் அவைகளை பிடிக்க முயலவில்லை. சின்ன வயதில் அவைகளை பிடித்து போது அடைந்த வெற்றி பெருமிதம் நினைவுக்கு வந்தது. ஒன்றை பிடித்து என் குழந்தைகளிடம் காட்டிய போது "நல்ல கலரா இருக்கு ம்மா" என்று வியந்து போனார்கள், ஆண் ஊசி தட்டான்கள் பெண் தட்டான்களை கவர்வதற்காகவே இப்படி வண்ணங்களுடன் இருக்கின்றனவாம், அதன் வண்ணங்கள் மாற்றிக் கொண்டே இருக்கும் என்றாலும் பெண் தன்னுடைய இணையை சரியாக கண்டு பிடித்து விடும் என்பது பெரிய ஆச்சர்யம் தான். பாதுகாப்பான இடம் தேடி அவை இடும் முட்டைகளால் தான் சுமார் முப்பது கோடி ஆண்டுகள் தாண்டியும் அவை வாழ்ந்து கொண்டிருக்கின்றன போலும்!

வயிறுக்கு உணவு தயாராகும் வரை எங்கள் செவிக்கும் கண்களுக்கும் விருந்தளிக்க தயாரானார்கள் நம் தேக்கன் ஐயா மற்றும் ஆற்றல் பிரவீன் குமார் இருவரும். அவர்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வையும் காடுகளுடனும் பல்லுயிர்களுடனும் அவர்களுக்கு இருந்த பிணைப்பையும் பார்த்த போது அவர்களின் அறிமுகம் கிடைத்தது குறித்து மிகுந்த பெருமிதம் ஏற்பட்டது. அவர்கள் காட்டிய அந்த ஆவணப் படம் குறித்து அடுத்த வாரத்தில் சொல்கிறேன்..

தொடர்ந்து பயணிப்போம்.....