தொடர்கள்
பொது
கேரக்டர் - தகவல் தங்கராஜ் - வேங்கட கிருஷ்ணன்

20250624220450280.jpg

திரையிலோ அல்லது வெளியிலோ சூப்பர் ஸ்டார்களை தேடும் நாம் நம் அருகிலேயே இருக்கும் அற்புதமான மனிதர்களை கவனிக்க தவறி விடுகிறோம்.
இந்த வாரம் அப்படி ஒரு அற்புத மனிதரைத்தான் அறிமுகப்படுத்த விரும்புகிறேன். இவர் ஒரு அப்பார்ட்மெண்டில் வாட்ச்மேனாக வேலை செய்கிறார். பெயர் தங்கராஜ். கேட்பதில் குறைபாடு இவருக்கு உண்டு.

செங்கல்பட்டினை அடுத்த கிராமமான சூனாம்பேட்டிலிருந்து அவருடைய கைத்தறி நெசவுத்தொழில் படுத்து விட்ட பிறகு சென்னைக்கு வந்தவர். கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வந்தவர்கள் முதலில் தேடும் வேலையான செக்யூரிட்டி வேலையே இவருக்கும் கிடைத்தது. எட்டு நிறுவனங்களில் தொடர்ந்து வேலை செய்த அனுபவம் இவருக்கு உண்டு. ஒரு நிறுவனம் , ஒரு அப்பார்ட்மெண்டில் இருந்து பல காரணங்களுக்காக விலகிச் செல்லும்போது அடுத்து பொறுப்பு ஏற்கும் நிறுவனத்தில் இவரையும் சேர்த்துக் கொள்ளச் சொல்லி அந்த அப்பார்ட்மெண்ட் நிர்வாகமே சிபாரிசு செய்வது தான் இவரின் வெற்றி.


இந்தப் பணியில் இவர் தனித்துவமாய் செய்த விஷயங்கள், கோட்டூர்புரத்தில் வசித்து வந்த கலெக்டர் சுந்தரம் வீட்டில் வேலை வாங்கித் தந்தது. அந்தக் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானார் இசை அரசி எம் எஸ் அம்மா வீட்டிற்கும் கலெக்டர் சுந்தரமோடு சென்று வருவது உண்டாம்.

20250624220537779.jpg
இவரை தொடர்ந்து நான் கவனிக்க ஆரம்பித்த போது காலை ஆறரை மணிக்கு வேலைக்கு வந்து விடுவார். காலை உணவு மதிய உணவு மாலை தேனீர் எல்லாமே அப்பார்ட்மெண்ட் வாசலில் தான் மாலை ஆறரை மணிக்கு டியூட்டி முடிந்து கிளம்பி விடுவார். இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருப்பது இவரது சிறப்பு. தினமலரை தினமும் வாங்கும் வாசகர்களில் ஒருவர். அதை தவறாமல் முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை படித்து விடுவார். அதில் வரும் உள்ளூர் செய்திகளை முடிந்த மட்டும் அக்கம் பக்கம் இருப்பவர்கள் அப்பார்ட்மெண்டுக்கு வருபவர்கள் என்று எல்லாரிடமும் பேசி அதனை உறுதி செய்து கொண்டு விடுவார். தனக்கு அந்த விஷயத்தில் தெரிந்தவற்றையெல்லாம் தன்னுடைய கருத்தையும் சேர்த்து பேசுவார். பேச்சு சுவாரசியமாக இருப்பதால் பலரும் அதைக் கேட்கக் கூடுவார்கள்.

20250624220634716.jpg
அது மட்டுமல்லாமல் அவரிடம் நான் பார்த்து வியந்த ஒன்று அக்கம் பக்கத்து நடக்கும் விஷயங்கள் எல்லாவற்றையும் முடிந்த வரையில் எப்படியாவது தெரிந்து கொண்டு விடுவார். அருகில் எந்த வீடு காலியாக இருக்கிறது பக்கத்து அப்பார்ட்மெண்டில் நேற்று ஏதோ பிரச்சனையா? யார் வீட்டில் இன்று புதிதாக கார் வாங்கி இருக்கிறார்கள்? இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களும் மிகத் திறமையாக அவர் சேகரிக்கும் விதம் என்னை ஆச்சரியப்பட வைத்தது. ஒரு வீட்டில் வேலை செய்துவிட்டு மற்றொரு வீட்டுக்கு செல்லும் வேலைக்காரிகள் அப்பார்ட்மெண்ட் ரிஜிஸ்டரில் கையெழுத்து போடும்போது இவரிடம் பேசுவார்கள். பலர் தங்களுக்கு வேண்டிய தகவலை கேட்பார்கள். அவர் தனக்குத் தெரிந்த தகவலை உறுதிப்படுத்திக் கொள்வார் அல்லது புதிதாக ஒன்றை கேட்டுப் பெற்றுக் கொள்வார். தனக்கு கேட்பதில் ஒரு குறை இருக்கிறது என்பதை அவர் என்றுமே பெரிது படுத்தியதில்லை. நீங்கள் அருகில் சென்று பேசினால் அவருக்கு ஓரளவுக்கு கேட்கும் அதையும் உங்கள் உதட்டு அசைவையும் வைத்து நீங்கள் பேசுவதை சரியாக யூகித்து உங்களுக்கு பதில் சொல்லுவார். அவரின் குரல் எட்டுக்கட்டை சுதியில் தான் இருக்கும் எல்லோராலும் அதைக் கேட்க முடியும். சிறிது தூரத்தில் இருந்து அவரை கூப்பிட்டால் கேட்க மாட்டார், நமது குரலுக்கும் செவி சாய்க்க மாட்டார் என்பதை தவிர எனக்கு அவரிடம் குறை எதையும் காண முடியவில்லை. எல்லோருக்கும் எப்போதும் ஏதோ ஒரு வகையில் உதவியாய் இருப்பதே தனது வாழ்வின் முக்கிய பணி என்பது போல அவர் நடந்து கொள்வார் பெரிய பெரிய அலுவலகங்களில் வேலை செய்து பல முக்கிய வி ஐ பி களின் வீடுகளிலும் இருந்ததால் அவருக்கு இதெல்லாம் சர்வ சாதாரமான ஒன்று.

தன் முயற்சியாலேயே தன் குழந்தைகளுக்கு இந்த ரிட்டயர் ஆன வயதில் திருமணம் செய்து வைத்ததை அவர் பெருமையாய் எங்கும் சொல்லிக் கொள்வதில்லை. ஒரு அப்பார்ட்மெண்ட் ஓனரோடு பேசிக் கொண்டிருந்தபோது ஒரு பழைய அனுபவத்தைச் சொன்னார் அப்போது எங்கள் வீட்டுக்கு மட்டுமே தங்கராஜ் செக்யூரிட்டியாக இருந்தார் நாங்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியில் செல்லும்படி எங்கள் வேலை இருந்தது தங்கராஜ் இடம் எப்போதும் ஒரு சாவி இருக்கும் எங்கள் வீட்டின் மாற்று சாவி எது ஆனால் எங்களிடம் வேலை செய்த அந்த ஐந்து வருடத்தில் எந்த ஒரு பொருள் காணாமல் போவதோ அல்லது அவர் வித்தியாசமாக நடந்து கொள்வதோ எங்கள் வீட்டிற்கு எங்களை தேடி வருபவர்களிடம் சரியாக நடந்து கொள்ளாமல் இருந்தார் என்பது போன்ற எந்த ஒரு புகார்களையும் நாங்கள் கேட்டதே இல்லை. மிகுந்த தன்னம்பிக்கையும் சுய கவுரவமும் உடைய அற்புதமான மனிதர் என்று அவர் தங்கராஜை பற்றி சொல்லும் போது பேரில் மட்டுமல்ல அவரும் அவர் குணமும் தங்கம் தான் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.

சந்திப்போம்..