தொடர்கள்
பொது
என்ன நடக்கிறது ஏமனில் ? - நிமிஷா பிரியா-  மரியா சிவானந்தம் 

20250625181953221.jpeg

கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவின் மரணதண்டனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இச்செய்தி தொலைக்காட்சி , செய்தித்தாள் மற்றும் சமூக ஊடகங்களில் பரபரப்பாக இப்போது விவாதிக்கப்பட்டு வருகிறது.


இம்மாதம் பதினாறாம் தேதி பொது மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக நிமிஷாவுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்று ஏமன் அரசால் அறிவிக்கப்பட்ட நிலையில் , முந்திய நாள் இத்தண்டனை தள்ளி
வைக்கப்பட்டுள்ளது.


இதன் பின்னணியைப் பார்க்கும் போது, திரைப்படங்களுக்கு இணையான திருப்பங்களுடன் இவ்வழக்கு நடைபெறுவதை காண்கிறோம்.


கேரளாவின் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த நர்ஸ் நிமிஷா, ஏமன் தலைநகரம் ஸனாவின் அரசு மருத்துவமனையில் 2008 ஆம் ஆண்டு பணியில் சேர்கிறார். பின்னர் கேரளாவில் இவருக்கும் தொடுப்புழாவைச் சேர்ந்த டோமி தாமஸுக்கும் திருமணம் நடக்கிறது . கணவருக்கும் ஏமனில் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு தன்னுடன் அவரை அழைத்துச் செல்கிறார் நிமிஷா. அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.


ஏமனில் கணவரும் ,மனைவியும் சேர்ந்து சம்பாதித்த போதும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கிறார்கள். அதனால் தாமஸ் தன் மகளுடன் இந்தியா திரும்பி விட , நிமிஷா தனியாக அங்கு இருக்கிறார். ஏமனில் நடக்கும் அரசியல் மாற்றத்தில் ஸனா, ஹௌதிகள் கட்டுப்பாட்டில் வருகிறது . மகளது ஞானஸ்னாத்துக்காக கேரளா வரும் நிமிஷா உடனே ஏமன் செல்ல முடியாத சூழல் உருவாகிறது. ஆயினும்
நிலைமை சீரடைந்த பின்னர் 2015 இல் ஏமன் செல்கிறார்.


சனாவில் பணியில் சேர்ந்த நிமிஷாவுக்கு பணப் பிரச்சனை தலை எடுக்க , அங்குள்ள தலால் அப்து மெஹ்தியுடன் கூட்டு சேர்ந்து ஒரு கிளினிக்கை ஆரம்பிக்கிறார். மெஹ்தி நிமிஷாவைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, அவரை அச்சுறுத்தி வருமானத்தில் பெரும் பகுதியை எடுத்துக் கொள்வது மட்டுமன்றி, நிமிஷாவின் பாஸ் போர்ட்டையும் தன் வசம் வைத்துக் கொள்கிறார்.


ஏமன் காவல்துறையிடம் இது குறித்து நிமிஷா புகார் அளித்த போது அவருக்கு உதவி கிடைக்கவில்லை. அதனால் தன் பாஸ் போர்ட்டை எடுக்க விரும்பிய நிமிஷா தலால் மெஹ்திக்கு மயக்கமருந்தை ஊசி
மூலம் செலுத்தி விட, அளவுக்கு அதிகமான ஊசி மருந்தால் மெஹ்தி இறந்து விடுகிறார் . தண்ணீர் தொட்டியில் மெஹ்தியின் உடலை மறைத்து விட்டு நிமிஷா தப்பிக்க முயல்கையில் , சௌதி அரேபியாவின்
எல்லையில் அவர் கைது செய்யப்படுகிறார்.


2017 ஆம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .வழக்கை விசாரித்த நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. அவர் மேல் முறையீடு செய்த போது 2020 இல் அத்தண்டனை
உயர் நீதி மன்றத்தில் உறுதி செய்யப்பட்டது. இது திட்டமிட்ட கொலை இல்லை என்றும், பாஸ் போர்ட்டை எடுக்க நினைத்தபோது தவறு நடந்தாக சமூக தொண்டு நிறுவனம் ஒன்று உலக அளவில் உருவாகியது. அவருக்கு வைக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, அவர் காப்பாற்றப்பட வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் ஏமன் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்தன.

இந்திய அரசும், வெளியுறவுத்துறை அமைச்சகமும் இம்மரணதண்டனையில் இருந்து நிமிஷாவைக் காப்பற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. ஏமன் நாட்டுச் சட்டப்படி, கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டப்பட்டவரை மன்னித்து , தியா எனப்படும் இரத்தப் பணம் (Blood Money ) ஏற்றுக் கொண்டால் தண்டனை விலக்கிக் கொள்ளப்படும்.


மெஹ்தி குடும்பத்தினருடன் , நிமிஷா குடும்பம் மற்றும் பல்வேறு அமைப்புகள் பேச்சு வார்த்தை நடத்தி , நாற்பதாயிரம் டாலர் வரை தியா தருவதாக சொல்லி மன்னிப்பு கேட்டனர். ஆனால் மெஹ்தி குடும்பத்தினர்
இந்த பணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.நிமிஷாவை மன்னிக்கவும் அவர்கள் விரும்பவில்லை .
இறுதியாக நிமிஷாவுக்கு மரணதண்டனை வழங்க இம்மாதம் பதினாறாம் நாள் முடிவு செய்திருந்தனர். அதற்கு முந்திய நாள் தண்டனை தள்ளி வைக்கப்பட்டதாக செய்தி வெளிவந்துள்ளது. இதன் பின்னணியில் ,
கேரளாவின் இசுலாமிய சன்னி பிரிவின் தலைவர் முகமது அபுபக்கர் முஸ்லியார் அவர்கள் தலையிட்டு இந்த மரண தண்டனையைத் தள்ளி வைத்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.


இந்திய குடியரசுத் தலைவர் அலுவலகம், பாரதப்பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் ஏமன் அரசுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு நிமிஷாவின் மரணதண்டனையை ரத்து செய்யும் முயற்சியில்
இருக்கிறார்கள்.

ஒரு இந்தியக்குடிமகள் அயல்நாட்டு மண்ணில் தண்டனை பெற்று இறப்பதை யாரும் விரும்பவில்லை.

வாழ்க்கைக்கும், மரணத்துக்கும் இடையில் ஊசலாடும் நிமிஷாவின் ஆயுள் மெஹ்தி குடும்பத்தினரின் மன்னிப்பில் இருக்கிறது.