தொடர்கள்
தொடர்கள்
எழுதிக் கிழித்தவை 31. காவல்துறையை கலக்கிய புகைப்படம். மூத்த பத்திரிகையாளர் ஆர்.நடராஜன்.

20250626075711607.jpeg

(காவல். காப்பதற்கு ஏதும் மீதமில்லை !! ஏ.ஐ.படம். அசல் படம் அல்ல)

தன்னை, ஆளும் கட்சியின் குறைகளை விமர்சிப்பவனாகக் கருதிக் கொள்ளும் ஒரு நிருபர் கலெக்டருடனோ, காவல்துறை கண்காணிப்பாளருடனோ மோதிக்கொள்வது சகஜம். அப்படி இல்லாவிட்டால் அவன் ‘God is good, milk is white’ என்றபடிதான் செய்தி எழுத வேண்டியிருக்கும்.

அவன் அந்த வகையல்ல. எனவே அசாதாரண சம்பவங்கள் நடந்தால், அந்த இடத்திற்கு விரைந்து செல்வது அவனது வழக்கம். அவனுக்கு அப்படி பல சந்தர்ப்பங்கள் நேர்ந்தன.

விருத்தாசலத்தின் அருகே ஒரு கிராமத்தில் அந்தி சாய்ந்த பிறகு சுமார் 100 குடிசைகள் எரிந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அவன் உடனே 20 கி.மீ. தொலைவில் உள்ள விருத்தாசலத்திற்குச் சென்றான். அங்கே அவனது நண்பரான தினமணி நிருபர் தண்டபாணியை சந்திக்கச் சென்றபோது அவரும் சம்பவ இடத்திற்கு புறப்படத் தயாராக இருந்தார், அவர் கேட்டார்,

‘தீயணைப்புத் துறைக்கு சொல்வதற்கு முன்பாக உங்களுக்கு தகவல் கொடுத்துவிடுகிறார்களோ? இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டீர்களே?’ பத்திரிகைகளின் முதலாளிகள் போட்டியாளர்கள் என்றாலும், களத்தில் வெவ்வேறு பத்திரிகைகளின் நிருபர்கள் ஒன்றிணைந்து தான் செயல்படுகிறார்கள்.

இருவருமாக சம்பவ இடத்திற்குச் சென்றார்கள். தீயணைப்பு வாகனங்கள் சில திரும்பிக் கொண்டிருந்தன, சில வந்து கொண்டிருந்தன. ஒருபக்கம் தீக் கொழுந்துகள், மறுபக்கம் கரும்புகை. தீ வெளிச்சம் தவிர வேறு வெளிச்சம் இல்லை. அங்கே இருவரும் விருத்தாசலம் DSP முகம்மது இக்பாலை சந்தித்தார்கள். அவர் பண்பானவர், நன்றாக பழகக்கூடியவர். அவர் சொன்னார், ‘தயவு செய்து இப்போது பாதிக்கப்பட்டவர்கள் யாரையும் சந்தித்து எதுவும் எழுதிவிடாதீர்கள். விசாரணை முடியவில்லை. நாளைக்கு கூடுதல் தகவல்களை நானே சொல்வேன்’ என்றார்.

நிருபர்கள் இருவரும் விருத்தாசலம் திரும்பி, தங்கள் அலுவலகங்களுக்கு இன்ன கிராமத்தில், டஜன் கணக்கில் குடிசைகள் எரிந்தன, காரணம் போலீஸ் விசாரணையில் இருக்கிறது என்று சுருக்கமாக செய்தி கொடுத்தார்கள்.

அன்று இரவே அவன் தலைமை நிருபரிடம் சென்னை போட்டோகிராபர் நாராயணச்சாரியை காலையில் விருத்தாசலத்திற்கு அனுப்பி வைக்கும்படி சொன்னான். அன்றிரவு அவன் விருத்தாசலத்திலேயே தங்கினான். அதிகாலை ரயிலில் வந்த புகைப்படக்காரர் நாராயணச்சாரியை அழைத்துக் கொண்டு காலை 10 மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்று புகைப்படம் எடுக்கச் செய்தான்.

மக்களிடமும் காவல்துறையினரிடமும் பேசி தகவல்களைத் தெரிந்து கொண்டான். ஜாதி மோதல்தான் காரணம் என்று தெரிந்தது. ஆனால் செய்திகளில் ஜாதியின் பெயர்களை குறிப்பிடக் கூடாது என்பது எழுதப்படாத விதி. நாராயணச்சாரி புகைப்படங்களை எடுத்துக் கொண்ட பிறகு சென்னை திரும்பியாக வேண்டும். மதிய ரயிலில் அவரை அனுப்பி வைத்தான். அப்போது டிஜிட்டல் கேமரா இல்லையென்பதனால், தான் எடுத்த எட்டு புகைப்படங்களுக்கு அவர் அவனையே தலைப்புகள் எழுதச் சொன்னார்.

எந்தெந்த இடங்களில், என்ன காட்சியை புகைப்படம் எடுத்தார் என்பது அவனுக்குத் தெரியும். அந்த வரிசையை மனதில் வைத்துக்கொண்டு, புகைப்படங்களைப் பார்க்க முடியாமல் இருந்தும் தலைப்புகளை எழுதிக் கொடுத்தான்.

நாராயணச்சாரி சென்னை சென்று புகைப்படங்களை தயார் செய்தார். அவனது நீண்ட கட்டுரை முக்கால் பக்க அளவுக்கு நான்கு புகைப்படங்களுடன் வெளிவந்தது. இந்த மோதல் தீ வைப்பு பற்றி போலீஸ் தலைமையகத்தில் இருந்து தகவல் தெரிந்து கொண்ட, இன்னொரு ஆங்கில பத்திரிகை நிருபர்கள் இரவு ரயிலில் புறப்பட்டு, காலையில் விருத்தாசலம் வந்து சேர்ந்தார்கள்.

அவர்கள் அங்கே ஹிண்டு பேப்பரைப் பார்த்ததும், ‘அடடா நமக்கு எழுத என்ன இருக்கிறது? எல்லாவற்றையும் ஹிண்டு பத்திரிகையில் புகைப்படங்களுடன் முக்கால் பக்கக் கட்டுரை வந்துவிட்டதே’ என்று கொஞ்சம் சோர்ந்து போனாலும், அவர்களும் சம்பவ இடத்திற்குச் சென்று தகவல் சேகரித்தார்கள். அவன் முந்திக்கொண்டான்.

செய்தி வெளிவந்த அன்று அவன் கடலூரில் இருந்த காவல்துறை கண்காணிப்பாளர் T.S.பஞ்சாபகேசனைச் சந்தித்தான். அவர் சொன்னார், ‘விரிவாகச் செய்தி எழுதியிருக்கிறீர்கள். எங்கிருந்து தகவல் பெற்றீர்கள்? புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறீர்கள். எல்லாம் சரி ஆனால் ஒரு புகைப்படமும், அதன் கீழுள்ள குறிப்பும் எங்கள் துறையை கிண்டல் செய்வது போல் இருக்கிறது. அதில் கொஞ்சம் வருத்தம்தான்’ என்றார்.

அந்தப் புகைப்படம் பாதி எரிந்துபோன ஒரு நெல்குதிர் அருகே துப்பாக்கியை தூக்கி வைத்துக்கொண்டு, விறைப்பாக ஒரு போலீஸ்காரர் நின்ற காட்சி. அதன் கீழுள்ள புகைப்பட தலைப்பு, ‘A Policeman on guard duty, where nothing is left to be guarded’. அதைக்காட்டி, ‘நிஜமாகவே சொல்லுங்கள், எங்கள் போலீஸ்காரர் அங்கே அப்படித்தான் நின்றாரா? நீங்கள் வேண்டுமென்றே அப்படி நிற்கவைத்து போட்டோ எடுத்திருக்கிறீர்கள்? இது எங்கள் துறையை சீண்டுகிறது. எல்லாம் முடிந்தபிறகு நாங்கள் காவல் காப்பது போல. அந்த கான்ஸ்டபிளை அவன் இருந்த நிலையிலேயே புகைப்படம் எடுத்திருக்கலாமே?’

அவன் நிதானமாகச் சொன்னான், ‘அந்த கான்ஸ்டபிள் எப்படி இருந்தாரோ அப்படித்தான் எடுக்க விரும்பினேன். அப்படியே எடுத்திருக்கலாம். அவர் ஒரு கயிற்றுக் கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அது பரவாயில்லையா?’ பதறிப்போன அவர் சொன்னார், ‘நல்லவேளை அப்படி புகைப்படம் எடுக்கவில்லை. அதற்கு இதுவே பரவாயில்லை’ என்று சமாதானத்திற்கு வந்தார்.

அவனது செய்திகளால் சங்கடப்பட்ட மாவட்ட கலெக்டரும், காவல் துறை கண்காணிப்பாளரும் ஹிண்டு எடிட்டருக்கு இருவரும் கையெழுத்திட்டு ஒரு புகார் கடிதம் அனுப்பியிருந்தார்கள். திருக்கோவிலூர் காவல் நிலையத்தின் மீது வன்முறையாளர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினார்கள் என்று ஹிண்டுவில் வெளிவந்த செய்தி தவறென்றும் நிருபர் திருக்கோவிலூருக்குச் செல்லவில்லை என்றும் அது பொய் செய்தி என்று ஹிண்டு எடிட்டருக்கு புகார் கடிதம் எழுதினார்கள். வழக்கம் போல் கடிதம் அவன் பதிலுக்காக அனுப்பப்பட்டது. எடிட்டருக்கு எழுதிய கடிதத்தில் அவன் இப்படி பதில் எழுதியிருந்தான்,‘சம்பவ தினத்தன்று நான் திருக்கோவிலூருக்குச் சென்றிருந்தேன். கல்வீச்சை நேரில் பார்த்தவுடன் தான் செய்தி எழுதினேன்.

இந்த கடிதத்துடன் திருக்கோவிலூரில் ஒரு பெட்ரோல் பங்க்கில் என் ஸ்கூட்டருக்குப் பெட்ரோல் போட்டேன். ஸ்கூட்டரின் எண்ணுடன் கூடிய பெட்ரோல் பில்லை இத்துடன் இணைத்திருக்கிறேன்’. இதற்கிடையே காவல் துறை கண்காணிப்பாளரும், கலெக்டரின் நிர்பந்தத்தினால் தான், தானும் அந்த புகார் கடிதத்தில் கையெழுத்திட்டதாகவும் செய்தி பொய்யல்ல உண்மை என்றும் தொலைபேசியில் தெரிவித்து விட்டார், அவரது மனசாட்சி உறுத்தியதால்.

நல்ல வேளையாக பெட்ரோல் பில் அவனைக் காப்பாற்றியது. அதன் பிறகு அவன் தொலை தூரம் நகருக்குச் சென்றபோதெல்லாம் அங்கே பெட்ரோல் போடும் பழக்கத்தை மேற்கொண்டான்.

அவ்வப்போது இப்படி சில சம்பவங்களில் காவல்துறையிடம் கருத்து வேறுபாடுகள் வருவதுண்டு. ஒட்டிக்கொள்ளாமலும், முட்டிக்கொள்ளாமலும் காவல்துறை அதிகாரிகளிடம் பழகியாக வேண்டும். அது ஒரு தொழில் நிர்பந்தம். இருந்தாலும், ‘அகலாது அணுகாது தீக்காய்வார் போல’ நடந்து கொள்ளும் நிருபருக்கு பிரச்சனை வருவதில்லை.

* * *