தொடர்கள்
தொடர்கள்
நயத்தகு    நற்றிணை- 30- மரியா சிவானந்தம்

20250626081455239.jpeg

காதலியின் கருவிழிகள் கண்ணீரில் நனைந்திருந்தன.

வாடிய முகமும், பொலிவிழந்த தேகமும் அவள் மனநிலையை பிரதிபலித்தன.

தலைவியைத் தேடி வந்த தோழி , அவளது நிலை கண்டு துயர் கொண்டாள்.

"என்னவாயிற்று என் தலைவி?" என்று வினவினாள்

" என்னவென்று சொல்வேன் தோழி. பொருள் தேடிச் செல்லும் என் காதலனைப் பிரிந்ததுன்பம் ஒருபுறம் . அவன் செல்லும் பாலை வழியில் எவ்வித துன்பங்களை அனுபவிப்பானோஎன்ற கவலை மறுபுறம். இருவித கவலைகளில் என் நெஞ்சு உழன்று கொண்டே இருக்கிறது " என்றாள் தலைவி

தலைவியின் துயரம் தோழிக்குப் புரிந்தது.

பாலை நிலத்துக்கே உரிய வெம்மையும், தகிப்பும், கரடுமுரடான பாதையின் தன்மையும் தலைவனுக்குத் துன்பத்தைத் தரும் என்பதை அவள் அறிவாள். ஆயினும் அங்கு இப்போதுமழைக்காலம் . பாலை மண்ணில் குமிழம் பழங்கள் விளைந்து தரையில் கொட்டி இருக்கும்காலம்.

தோழி " நீ கவலைப்பட்டு வருந்தும் அளவுக்கு பாலை வழி கொடுமையானது இல்லை.இப்போது மழை பொழிந்து, அவர் செல்லும் வழி குளிர்ந்திருக்கும் . அப்பாதை அத்தனைகொடுமையானது என்றால் . உன்னைத் தன்னுடன் வரும்படி அழைத்திருப்பாரா? " என்றுகூறி தலைவியைத் தேற்றுகிறாள்.

நற்றிணை பாடும் அக்காட்சியை ஒரு தோழியின் கருத்தாக வரைந்துள்ளார் புலவர் முல்லைபூதனார்.

தோழி சொல்கிறாள்

" உன் தலைவன் செல்லும் பாலை வழி , கரிய புலி சினம் கொண்டு உலவுகின்ற பெரியமலைகளின் இடையே அமைந்துள்ளது என்பது உண்மையே.

இப்போது அப்பாதையில் மேகங்கள் முழங்க, சிறுதுளிகளாக மழை பெய்துக் கொண்டுஇருக்கும். பிளவுபட்ட குன்றுகளிடையே இருக்கும் வெடிப்புகளில் மழை நீர் இறங்கி நிரப்பும்.அதனால் அங்கு வெம்மை குறைந்து குளிர்ச்சி நிலவும்.

அங்கு பெண் மான் குமிழ மரத்தை உரசுகையில் , அம்மரம் ஒளி மிக்க குமிழ பழங்களைஉதிர்க்கும். அக்காட்சி பெண்ணின் அணிகலனில் உள்ள பொற் காசுகளைப் தரையில்சிதறிக் கிடக்கும்.

இந்நிலத்தின் தன்மையை அறிந்ததால்தான் தலைவன் , : "நீயும் என்னுடன் வருகிறாயா" என்று உன்னை அழைத்தார் .

அந்த அழைப்பில் இருந்தே நீ அறிந்துக் கொள்ளலாம் , பாலை வழி அத்தனைகொடுமையானது அல்ல என்று .

எனவே நீ வீணாக கவலை கொண்டு வருந்தாதே " என்றாள்

அந்த அழகான பாடல் இதுவே

நெடு வான் மின்னி, குறுந் துளி தலைஇ,

படு மழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து,

உழை படு மான் பிணை தீண்டலின், இழை மகள்

பொன் செய் காசின், ஒண் பழம் தாஅம்

குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம், 5

''எம்மொடு வருதியோ, பொம்மல் ஓதி?'' எனக்

கூறின்றும் உடையரோ மற்றே வேறுபட்டு

இரும் புலி வழங்கும் சோலை,

பெருங் கல் வைப்பின் சுரன் இறந்தோரே? (நற்றிணை 274)

மரத்தில் இருந்து பழங்கள் உதிர்ந்து சிதறிக் கிடப்பதை , பெண்ணின் காசுமாலை போன்றஅணிகலனில் இருந்து பொற்காசுகள் போல் சிதறி இருப்பதாக கூறிய உவமானம் அழகானது .

காதலனின் வருகைக்காக இனி காதலி காத்திருப்பாள், கவலை மறந்து

மேலும் ஒரு நல்ல பாடலுடன் மீண்டும் சந்திப்போம்

-தொடரும்